Shadow

டைரி விமர்சனம்

டி-பிளாக், தேஜாவு போன்ற த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, ஒரு சூப்பர் நேட்சுரல் த்ரில்லரில் நடித்துள்ளார் அருள்நிதி.

பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை – கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருக்கும் வரதன். வழக்கு சம்பந்தமாக மிகச் சிறிய துப்பு கிடைக்கும் பொழுது, அவரது கார் காணாமல் போகிறது. காரைத் திருடியவனைத் தேடும் வரதன், ஒரு பேருந்தில் ஏறுகிறார். பேருந்தில், அவர் விசாரிக்கும் வழக்கு சம்பந்தமான நகைகள் கிடைப்பதோடு, அமானுஷ்யமாகப் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. அமானுஷ்ய சம்பவங்களுக்கும், பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மையக்கரு.

திரைக்கதை, விசாரணையில் இருந்து விலகி, பேருந்திற்குள்ளேயே சிறிது நேரம் பயணிக்கிறது. வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் தோடர் மக்கள், மகனைப் பிரிந்து திருப்பூருக்கு வேலைக்குச் செல்லும் தாய், ஊட்டியில் தம்பி வீட்டுக்கு வரும் வக்கீல் குடும்பம், சேலம் பள்ளிக்குச் செல்லும் மாணவி, நகை திருடும் கொலைகாரர்கள் என பேருந்திற்குள் ஒரு கதை விரிகிறது. கூடவே, அமானுஷ்யமான உருவங்கள் பேருந்தைச் சூழ்கின்றன. இவையனத்தையும் க்ளைமேக்ஸில் அழகாக முடித்துள்ளார் இயக்குநர் இன்னாசி பாண்டியன்.

த்ரில்லர் படங்கள் தான் அருள்நிதியின் பாணி எனுமளவு அந்த ஜானர் படங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். பிருந்தாவனம் போன்ற படங்களிலும் அவ்வப்போது கவனம் செலுத்தலாம் அருள்நிதி. தடாலடியான அறிமுகத்தில் ஈர்க்கிறார் உதவி ஆய்வாளராக வரும் பவித்ரா கிருஷ்ணன். அவருக்கும், அருள்நிதிக்குமான காதல் சட்டென மலர்ந்து விடுகிறது. சாம்ஸ் நகைச்சுவைக்குப் பெருமளவு உதவவில்லை என்றாலும் கதையின் ஓட்டத்தைப் பாதிக்காத அளவு அடக்கி வாசித்திருப்பது ஆறுதல். பேருந்து பயணியான ஷா ரா வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.

சைனாவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் பஸ் 375 என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் இன்னாசி பாண்டியன். ஒரு நிகழ்வு மீண்டும் அப்படியே நடக்கும் அமானுஷ்ய நிகழ்விற்கு, ‘Creation recapture’ என்றொரு பதத்தையும் சூட்டியுள்ளர். மிஸ்ட்ரி த்ரில்லருக்கான திரைக்கதையை நேர்த்தியாய் எழுதிப் படத்தை விறுவிறுப்புடன் கொண்டு சென்றுள்ளார்.

Spoilers open

கதையின் அமானுஷ்யத்தன்மைக்கான காரணத்தைச் சொல்லிய பின்பும், படம் முடியாமல் சற்று நீள்கிறது. ஒட்டுமொத்த திரைக்கதையின் புத்திசாலித்தனமும் அங்கே நீர்த்துப் போகிறது. வக்கீல் குடும்பம் பேருந்து விபத்தில் 16 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர் என அருவங்காடு உதவி ஆய்வாளரிடம் நாயகன் சொல்லியதும், ‘ஐய்யோ, அப்படியா? காணாமல் போன அவர்கள் உலகில் எந்த மூலையிலாவது சந்தோஷமாக இருப்பாங்கன்னு நினைச்சேனே!’ என அழுகிறார். அடிக்கடி, கோவையில் இருந்து தம்பி வீட்டுக்குச் வரும் அண்ணன், தம்பியிடம் குடும்பத்துடன் சொல்லாமல் கொள்ளாமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழுவார் என நம்பும் போலீஸ்கார தம்பியைப் பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிவிடுகிறது.

படத்திற்கு, ‘டைரி’ எனப் பெயரிட்டதாலோ என்னவோ, சர்ச் பாதிரியார் நாயகனுக்கு ஒரு டைரியைத் தந்து, ‘நீ சின்ன வயசுல இருந்து இது உன் பேரன்ட்ஸ் யார்ன்னு கேட்கிற! இந்த டைரில அவங்க ஃபோட்டோ இருக்கு. இப்போதான் அதைச் சொல்ல டைம் கிடைச்சுது’ என்கிறார். எஸ்.ஐ. ட்ரெயினிங் முடித்து வேலைக்குச் சென்றுவிடும் ஒருவரிடம் அவரது பெற்றோர் பற்றிச் சொல்ல பாதிரியார் ஆண்டுக்கணக்காக நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம்?

படம் முடிந்த பின், அம்மா சென்ட்டிமென்ட் வைத்தே ஆகவேண்டுமென இன்னாசி பாண்டியன் முடிவு செய்துவிட்டார். ஹீரோ தன் அம்மாவின் பாசத்திற்காக ஏங்குகிறார் என வைத்திருந்தால் கூட அதில் ஒரு லாஜிக் இருந்திருக்கும். ஒரு கார் திருடனுக்கு வைத்துள்ளார். ஹீரோவும் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று ஏங்குகிறார். அதற்காக நாயகன் அமானுஷ்யமான அப்பேருந்தில் ஏறுகிறார். ஆனால், அவரது பெற்றோரோ அந்தப் பேருந்து இடித்து விபத்துக்குள்ளாகும் ஒரு காரில் வருகின்றனர். நாயகன், அந்தக் காரில் ஏறியிருந்தாலாவது, விபத்து நடக்கும் வரை பெற்றோரோடு இருந்திருப்பார். பிப்ரவரி 29 அன்று, அந்தப் பேருந்து மீண்டும் வருவதற்கு வாய்ப்பிருக்கு என நாயகனிடம் சொல்லும் நாயகி, 13வது ஹேர்பின் பென்டில் பேருந்து மோதி கார் விபத்துக்கு உள்ளாகும் முன், அந்தக் காரில் ஏறிவிட்டால் பெற்றோரைப் பார்க்கலாம் என ஐடியா கொடுக்கத் தவறிவிடுகிறார்.

இன்னாசி பாண்டியன், 2024 இலாவது, வரதனைப் பேருந்தில் ஏற்றிவிடாமல், அவரது பெற்றோரைப் பார்க்கக் காரில் ஏற்றிவிடுவார் என நம்புவோமாக!

Spoilers close