
தேஜாவு என்பது ஒரு ஃப்ரெஞ்ச் சொல். ஒரு நிகழ்வு, ஏற்கெனவே நிகழ்ந்தது போல் தோன்றினாலோ, அல்லது புதிதாய் ஓர் இடத்திற்குச் செல்லும்போது முன்பே அங்கு வந்திருப்பது போல் தோன்றினாலோ, அது தேஜாவு என அழைக்கப்படும். இப்படத்தில், ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கடத்தலை, மீண்டும் அதே போல் நிகழும்படி உருவாக்குகின்றனர். யார், ஏன், எதற்கு, எப்படி என்பதுதான் படத்தின் கதை.
டிஜிபி மகள் பூஜா கடத்தப்படுகிறாள் என எழுத்தாளர் சுப்பிரமணி எழுதினால், அது அப்படியே நடக்கிறது. இவர் ஏதேனும் எழுதினாலே, அது அடுத்த நிமிடமே நிகழ்கிறது. ஒன்று, சுப்பிரமணி எழுதுவது தற்செயலாக இருக்கலாம்; அல்லது, தீர்க்கதரிசனாமாக (prophecy) இருக்கலாம்; இல்லையெனில், ஏதோ பித்தலாட்டமாக இருக்கலாம். குழம்பிப் போய் நிலை குலையும் டிஜிபி ஆஷோ பிரமோத், மகளைக் கண்டுபிடிக்க, விக்ரம் குமார் எனும் அண்டர்கவர் அதிகாரியை வரவழைக்கிறார். பூஜாவைக் கண்டுபிடிக்க விசாரணையைத் துரிதமாகத் தொடங்கும் விக்ரமும், சுப்பிரமணி எழுதுவது எப்படி அப்படியே நடக்கிறது என்று குழம்பிப் போகிறார்.
டிஜிபி ஆஷா பிரமோத்தாக மதுபாலா நடித்துள்ளார். மகளைக் காணாமல் தவிக்கும் ஒரு தாயின் பரிதவிப்பைத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். அவரது அழகான மகள் பூஜாவாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். எழுத்தாளர் சுப்பிரமணியாக, கன்னட நடிகர் அச்யுத் குமார் பிரமாதமாக நடித்துள்ளார். அவருக்கு எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரல் கச்சிதமாகப் பொருந்துகிறது. அவருக்கும், அவரை நம்பும் கான்ஸ்டபிள் ஏழுமலைக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. ஏழுமலையாக காளி வெங்க்ட, கிடைத்த சின்னஞ்சிறு பாத்திரத்திலும் தன்னிருப்பை அழுத்தமாகக் காட்டியுள்ளார்.
விறைப்பான, சீரியசான, வேலையினின்று கவனம் சிதறாத காவல்துறை அதிகாரி விக்ரமாக அருள்நிதி நடித்துள்ளார். விசாரணை எனும் பெயரில், தவறான நபர்களை அடித்து சித்திரவதை செய்யும் சக அதிகாரிகளை அதட்டும் அருள்நிதி பாத்திரத்தின் அற உணர்வை, அதே தன்மையோடு கடைசி வரை மெயின்டெயின் செய்துள்ளார் இயக்குநர்.
முதல் ஃப்ரேமில் இருந்தே, திரைக்கதையைப் பரபரப்பாக அமைத்துள்ளார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். அடுத்து என்ன நடக்கும் என்ற திரைக்கதையின் ஓட்டத்தில், எந்த தங்கு தடங்கல்களின்றி எல்லா முடிச்சுகளையும் ரசிக்கும்படி சுவாரசியமாக அவிழ்த்துள்ளார். முதல் பட இயக்குநருக்கு அபூர்வமாகக் கைகூடும் இந்த வித்தை அவருக்கு இயல்பாக அமைந்துள்ளது. பெரிதும் மெனக்கெடாமல், இன்ன காட்சியில் இன்னது நடந்தால் போதும் என மீட்டரை அழகாக சாணை பிடித்துள்ளார். உதாரணத்திற்கு, ‘அந்த எழுத்தாளர் எங்கிருந்து வந்தார் என யாருக்குமே தெரியலை சார்’ என கான்ஸ்டபிளின் ஒரு வசனத்தில் எழுத்தாளரை மர்ம மனிதனாக்கி விடுகிறார். கதாபாத்திரங்கள் காற்றில் இருந்து வந்து, கதையைச் சுவாரசியப்படுத்தும் வேலையைச் செவ்வெண்ணே செய்கின்றனர். முதல் பத்தியின் கடைசி வரியிலுள்ள நான்கு கேள்விகளுக்கும் பதில் சொன்னதோடு இல்லாமல் க்ளைமேக்ஸில் ஒரு திருப்பத்தையும் வைத்துள்ளார். அதனால் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த திருப்தியைத் தருகிறது தேஜாவு. கூடவே, அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் அமரும் ஆசை மனிதரை எந்தளவுக்கு இட்டுச் செல்லும் என்பதைப் படம் அழுத்தமாகச் சொல்லியுள்ளது.