32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி

Dinesh R சேலம் Published: 26/07/2018 4 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Director-Varahi-anger

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. ‘இந்தப் படத்தின் தலைப்பைத் தூக்குங்கள்’ எனக் கூறித் தயாரிப்பாளரும் இயக்குநருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் பிரச்சனையைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதற்காகவும், சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வாராகி.

“நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம். சம கால நிகழ்வுகளைக் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன். படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடங்கள் தான். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்கச் சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கிருந்து வந்த உத்தரவின் படத்தின் டைட்டிலையும் மாற்றச் சொல்லி வந்ததுடன், படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை மாற்றச் சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள்.

சிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன? இல்லை இந்தப் பெயர்களை மாற்றுங்கள் என யாராவது புகார் கொடுத்தார்களா? ‘சிவா மனசுல சக்தி’ வந்தப்போ மட்டும் தடை செய்யலையே! ‘மோடி மனசுல அமித்ஷா’ன்னு நான் படம் எடுக்கலையே!! அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் எனச் சொல்லலாம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ன்னு ஒரு படம் வந்துச்சு. இப்போ அடுத்ததா, ‘பல்லுப்படாம பார்த்துக்க’ன்னு ஒரு படம் வரப்போகுது. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன? அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச் சொல்லும் காரணம் என்ன?

சென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச் சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை. சென்சார் குழுவில் சினிமா தவிர்த்துப் பார்த்தால் பத்திரிகையாளர், சமூக சேவகர்கள் இருக்கலாம். ஆடிட்டருக்குச் சென்சாரில் என்ன வேலை? இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா? சம்பந்தமே இல்லாத இடத்தில் வசனங்களை ம்யூட் பண்ணச் சொன்னாங்க. ஆனா எதை வெட்டுவாங்கன்னு நாங்க எதிர்பார்த்தோமோ, அதை அவங்க கண்டுக்கவே இல்லை. அப்புறம் இவங்க என்ன பெரிய அறிவாளி?

புகை பிடிக்கிற காட்சியிலயும், மது அருந்துற காட்சியிலயும் அது கெடுதல்னு எச்சரிக்கை வாசகம் போடச் சொல்றாங்க. அப்படின்னா என் படத்துல லஞ்சம் வாங்குற காட்சி இருக்கு. கொலை செய்யுற காட்சி இருக்கு. எல்லாத்துக்கும் எச்சரிக்கை வாசகம் போடமுடியுமா? இப்படி ஒவ்வோர் விஷயத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா அப்புறம் எப்படி படம் எடுக்குறது?

ஒரு காட்சி படமாக்குறப்போ ஏதேச்சையா ஒரு பூனை நடந்து போகுது. அதை நாங்க எந்தத் தொந்தரவும் பண்ணலை. ஆனா அதுக்கு வனவிலங்கு வாரியத்துல சான்றிதழ் வாங்கிட்டு வான்னு சொல்றாங்க.

ரஜினி படத்தின் டைட்டில் எல்லாம் பெயர்களில் தான் வருகிறது. பெரிய படங்களுக்கு ஏன் தடை சொல்லவில்லை? பெரிய நடிகர் சின்ன நடிகர் பாகுபாடு காட்டுகிறார்களோன்னு சந்தேகம் வருது. சென்சார் ஒருதலை பட்சமா செயல்படுவது நன்றாகவே தெரிகிறது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உறவினர்களும் வேண்டியவர்களும் தான் சென்சாரில் இருக்கிறார்கள்.

என்னோட படத்தோட டீசர் ‘சிவா மனசுல புஷ்பா’ எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன். அப்போது தவறாகத் தெரியாத ‘சிவா மனசுல புஷ்பா’ பெயர் இப்பொழுது தவறாகத் தெரிவதால்தான் எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது.

நான் ஒரு சின்ன தயாரிப்பாளர். ஒவ்வொரு முறையும் பணம் கட்டி மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இப்படி டைட்டில் பிரச்சனை ஓடிக்கொண்டு இருப்பது அவர்களுக்கும் தெரியும். எல்லாவற்றையும் சொன்னால்தான் செய்வார்களா?

சான்றிதழ் கொடுப்பதுதான் சென்சாரின் வேலை. அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை. காழ்ப்புணர்ச்சியில தான் இப்படி செய்கிறார்கள்? அதனால் தான் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன். இதில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன். என்னைப்போல இனி வரும் தயாரிப்பாளர்களுக்குச் சென்சார் மூலம் இதுபோன்ற சோதனைகள் நிகழக்கூடாது என்பதால் தான் நானே நேரடியாக களமிறங்கி விட்டேன். ஊடகங்கள் மூலமாக இந்தப் பிரச்னை உரியவர்கள் கவனத்துக்குச் சென்று நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறினார் வாராகி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.