Shadow

ViU – செம ஃபீலு ப்ரோ!

ViU

உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளைத் துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

முன்னதாக Vuclip President அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குநர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.

Vuclip President அருண் பிரகாஷ் வரவேற்றுப் பேசும்போது, “நான் ஒரு தமிழன். மீண்டும் தாய்நாட்டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சென்னை வந்த பின் 25 வருடத்திற்குப் பிறகும் அதே கலாச்சாரத்தைப் பார்க்க முடிந்தது. இந்தத் தொழில் நுட்பம் இந்த அளவுக்கு நிச்சயம் வளரும் என்ற நம்பிக்கையில் தான் இது துவங்கப்பட்டது. துவக்கத்தில் நிறைய சவால்களைச் சந்தித்தோம். பைரஸி மிகப்பெரிய ஒரு பிரச்சினை. பைரஸியோடு போராடிப் புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுப்பது என முடிவெடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு PCCW உடன் இணைந்து VIU துவக்கினோம். தென்கிழக்கு ஆசியாவில் முதல் இரண்டு இடங்களில் நாங்கள் வெற்றிகரமாக இருந்து வருகிறோம். தமிழில் இளைஞர்கள் புதுமையான, நல்ல தரமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். இன்று நாங்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் வெறும் ஆரம்பம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கிறோம்” என்றார்.

“குறும்படங்கள் இயக்கி விட்டு இயக்குநராவது தான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கி விட்டு குறும்படம் இயக்கியிருக்கிறேன். ‘மாஷா அல்லா கணேஷா’ கதை என்னை ரொம்பவே ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சம்பத், டி.சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களைச் சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி” என்றார் ‘மாஷா அல்லா கணேஷா’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு.

“வேறு எங்கு வெற்றி பெறுவதையும் விட, தமிழ்நாட்டில் மிக வேகமாக ஜெயிக்கலாம். 17 ஆண்டுகள் நான் இயக்குநராக இருந்தும் என்னிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் இயக்குநராக வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. யாஸ்மின் அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறார், அடுத்த ஆண்டுக்குள் 6 பேர் நல்ல திறமையோடு இயக்குநராக வருவார்கள். நிறைய உதவி இயக்குநர்கள், ‘வீட்டை விட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வார்கள். ஆனால் யாஸ்மின் 7 வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கும் குடும்பத்தைப் பிரிந்து வந்து இங்குக் கடுமையாக உழைத்து இன்று இயக்குநர் ஆகியிருக்கிறார்” என்றார் இயக்குனர் மோகன் ராஜா.

“தமிழ் சினிமாவில் வாம்பயர் கதைகள் கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஹாரர், வாம்பயர் கதைகள் மிகவும் பிடிக்கும். இந்தக் கதையை எடுக்க வாய்ப்புக் கொடுத்து உறுதுணையாக இருந்த Viuக்கு நன்றி” என்றார் இயக்குனர் நந்தினி ஜேஎஸ்.

“ ‘செம்ம ஃபீலு ப்ரோ’ என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் நம்மை உணர வைத்திருக்கிறது இந்த விழா. இந்த Viuவின் CEO ஒரு தமிழர். ‘ஆளப் போறான் தமிழன்’ என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது. இந்தத் துறை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அனைவருக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். Contentக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்” என்றார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.