சென்னையில் பணி புரிபவர் விவாந்த். கிராமத்தில் இருக்கும் தனது மாமன் மகளைக் காதலித்து வருகிறார். அத்தை மகன் மீது உயிரையே வைத்துள்ளார் நீரஜா. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், திடீரென நின்று விடுகிறது. அக்கல்யாணம் ஏன் எதற்காக நின்றது என்றும், அது குடும்பங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கதை நீள்கிறது.
கிராமத்துப் பண்பாட்டிற்கும், நகரத்து நாகரீகத்துக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சொல்ல முயற்சி செய்கிறது படம்.
கதைக்குள் செல்லாமல், முதல் பாதியில் படம் ஏற்படுத்தும் சலிப்பு ஏகத்துக்கும் நெளிய வைக்கிறது. முன்னோர்கள் நமக்களித்த சிலம்பம், சித்த மருத்துவம் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறதும் அவற்றைக் காக்கவேண்டியது நம் பொறுப்பு என வலியுறுத்தும் காட்சிகளுக்குப் பிரத்தியக கவனமும் முக்கியத்துவமும் அளித்துள்ளார் இயக்குநர் ஆர்செல் ஆறுமுகம். மனோபாலாவின் உதவியாளரான இவர், ஜெயா டீவியில் ‘ஷோடைம்’, ஜீ டீவியில் ‘அஞ்சரைப்பெட்டி’, கேப்டன் டீவியில் ‘சமையல் மந்திரம்’ போன்ற நிகழ்ச்சிகளை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் நீட்சியாகவே படத்தையும் இயக்கியுள்ளதை அவர் தவிர்த்திருக்கலாம்.
‘நான் உன் பிராப்பர்டி மாமா’ என நாயகனைச் சுற்றிக் கொண்டே இருக்கும் வேடத்தில் நீரஜா நடித்துள்ளார். நீரஜாக்குத் தன் அத்தை மகனை எவ்வளவு பிடிக்கும் என்று சொல்வதற்கு மட்டும் படத்தின் முதல் பாகத்தை உபயோகித்துள்ளனர். அதுவும், அத்தனைக் காட்சிகளும் மிக மிகச் செயற்கையாக உள்ளன. உதாரணத்திற்கு ஒரு காட்சி. நாயகன் சென்னையில் சொந்த வீடு கட்டி, அம்மாவையும், தாய்மாமா குடும்பத்தையும் கிரகபிரேவசத்திற்கு அழைக்கிறான். அப்பொழுது தனது அம்மாவிடம் ஒரு கவரை நீட்டி, “அம்மா இது என் சம்பள கவர். உங்க கையில கொடுத்து, நீங்க அதை எண்றதை என் கண்ணால பார்க்கணும்னு ஆசை” என்கிறான் நாயகன். அம்மா எண்ணிப் பார்த்துவிட்டு, “என்னப்பா இவ்ளோ பணமிருக்கு? உன் சம்பளம் எவ்ளோ?” எனக் கேட்கிறாள். “ஒரு லட்சம்ம்மா” என்கிறான் நாயகன். இப்படியாக, எல்லாக் காட்சிகளும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனியாகத் தொக்கி நிற்கின்றன. நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்டுள்ள கலக்கப் போவது யாரு ராமரும், சசிகலாவும் வரும் காட்சிகளும் கூட மிகவும் இம்சிக்கின்றன.
மெதுவாக இரண்டாம் பாதியில் கதை தொடங்குகிறது. இயல்பாய் உறவுக்குள் விரிசல் ஏற்படுகின்றன. அந்த விரிசல் ஏற்பட எது காரணமென்ன ஒரு ட்விஸ்ட்டை வைக்கிறார் இயக்குநர். அது விவாதிக்கப்பட வேண்டியது தான் என்ற பொழுதும், படத்தில் மிகவும் சின்னப்புள்ளத்தனமாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். அதற்கு, பாரம்பரியத்தைப் போற்றுவோம் என்ற கதாபாத்திரத்தில் வரும் அனுபமா தரும் ஆதீத ரியாக்ஷனும் நாடகத்தனமாய் உள்ளது. நாயகியின் தாயாக வரும் அனுபமா தான் படத்தின் அச்சாணி என்ற சொல்லவேண்டும். ஒரு காவிய நாயகனுக்குரிய ‘பில்டப்’களால் உயர்த்தி, ஒரு சின்ன பெண்ணின் பயத்தைப் போக்கி ஆறுதல் சொல்லும் மெச்சூரிட்டி கூட இல்லாதவராய்த் தாழ்த்தியுள்ளார் இயக்குநர்.
படத்தில் இயல்பாய்த் தோன்றுவது கதாநாயகியின் தந்தையாக வரும் கை தென்னவன் மட்டுமே! அதற்குக் காரணம் அவரேற்ற கதாபாத்திரமன்று. அவரது அனுபவம் துணை நின்றுள்ளது. நீரஜா கூடப் பரவாயில்லை. நாயகன் விவாந்த் எல்லாக் காட்சியிலேயும் ஒரே போலவே இருக்கிறார். படம் நிகழும் கிராமம் உண்மையிலேயே ஏகாந்தத்தை அளிக்கக்கூடிய பிரதேசம் தான். முக்கியமாக நாயகனின் மாளிகை போன்ற வீடும், அது அமைந்துள்ள இடமும் அட்டகாசம். ஒளிப்பதிவாளர் S.Ka.பூபதியின் கைவண்ணத்தில், அந்நிலபரப்பை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் ஆர்செல் ஆறுமுகம்.
கொஞ்சம் கூட, சம கால சினிமாவின் போக்கையோ, ரசிகர்களின் எதிர்பார்ப்பையோ கணக்கில் கொள்ளாமல் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும்? அது ஏகாந்தமாக இருக்கும்.