Shadow

எம்பிரான் விமர்சனம்

Embiran-movie-review

எம் + பிரான் என்பதற்கு ‘எனது தேவன்’ எனப் பொருள்படும்.

ஜெயாவிற்குப் பிரியன் மீது ஒருதலையாகப் பயங்கரமான காதல். எவ்வளவு முயற்சி செய்தும், தனது காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு ஏற்படுவதே இல்லை. காதலைச் சொல்லும் முன், அவள் கோமாவிற்குச் சென்று விடுகிறாள். ஜெயாவின் காதல், பிரியனை எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதுதான் படத்தின் கதை.

படம் லோ-பட்ஜெட் என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, கதாநாயகி வீட்டில் அவளும், அவளது தாத்தாவும் என இரண்டு பேர்தான் உள்ளனர். தாத்தாவும் இறந்துவிட, கோமாவிக் ஹாஸ்பிட்டலில் இருக்கும் கதாநாயகியைப் பார்த்துக் கொள்ளக்கூட யாருமில்லை. உறவினர்கள், நண்பர்கள் என ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரமும் இல்லை. யார் நாயகியின் மருத்துவச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றது, கவனித்துக் கொண்டது என எந்தத் தர்க்கத்திற்குள்ளும் செல்ல இயக்குநர் விரும்பவில்லை.

நாயகிக்கு, நாயகன் மீது அதீத காதல். இந்த ஒரே ஒரு வரி அவருக்குப் போதுமானதாக தோன்றியுள்ளது கதையில். வேறெதைப் பற்றியிம் அவர் அக்கறை கொள்ளாததால், 108 நிமிடப்படமே அயற்சியைக் கொடுப்பதாக உள்ளது. மோனோடோனஸான பின்னணி இசையும் காட்சிகளை மீறித் தனியாக ஒலிக்கிறது.

சில கனவுகளுக்குத் தர்க்க ரீதியான விளக்கங்கள் சொல்ல இயலாது. ஆனால், கனவுகளைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்கிறார் நாயகியின் தாத்தா வாசுவாக நடிக்கும் சந்திரமெளலி. தாத்தா, பேத்திக்கான பிணைப்பை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். கதாமாந்தர்களின் இடையேயான நெருக்கத்தில் ஒரு யதார்த்தம் இல்லாதது அட்டவர்த்தனமாய்த் தெரிவது குறை.

நாயகனைக் காதலிக்க மட்டும் நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். தனக்கு வரும் கனவின் பொருளென்ன எனத் தேடும் நாயகனாக ரெஜித் மேனன். ஆக, மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு சிம்பிளாகப் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குநர் கிருஷ்ண பாண்டி. அதை இன்னும் யதார்த்தமாகச் சொல்லியிருந்தால், உணர்வுபூர்வமாக படம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருக்கும்.