Shadow

ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்

how-to-train-your-dragons-3-movie-review

ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் படத்தின் முதற்பாகம் 2010இலும், இரண்டாம் பாகம் 2014இலும், தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகியுள்ளன.

டிராகன்களைக் கொல்லும் டிராகன் வேட்டையனான கிரிம்மலிடம் இருந்து தப்பிக்க, புதிய பாதுகாப்பான மறைவான வசிப்பிடத்தைத் தேடுகிறான் ஹிக்கப். ஹிக்கப்பின் டிராகனான டூத்லெஸ் எனும் நைட் ஃப்யூரி, லைட் ஃப்யூரியைச் சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாய், டிராகன்கள் மட்டும் வசிக்கும் பிரத்தியேகமான டிராகன் உலகத்தைக் கண்டடைகின்றனர். கிரிம்மலிடமிருந்து அனைவரும் எப்படிப் பாதுகாப்பாகத் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

முந்தைய பாகங்களைப் போல் ஃபன் எலமென்ட் (fun element), இப்படத்தில் கம்மியென்றே சொல்லவேண்டும். ஆனால், படத்தின் முடிவில் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றனர். ஒரு ட்ரைலாகியை முடிக்க அற்புதமான முடிவாக இப்படத்தைக் கொள்ளலாம். இரண்டாம் பாகத்திற்கும், மூன்றாம் பாகத்திற்குமே ஐந்து வருட இடைவேளை என்பது சற்றே அதிகம்.

முழு நீள படமாகக் கருத்தில் கொள்ளும்போது, நகைச்சுவை அம்சம் குறைவாகத் தெரிந்தாலும், சில காட்சிகளின் பட்டையைக் கிளப்பியுள்ளனர். உதாரணம், கிரிம்மலிடம் சிக்கிக் கொள்ளும் இரட்டையர்களில் ஒருவரான டஃப்நட் தனது பேச்சால் கிரிம்மலை எரிச்சலடைய வைக்கும்காட்சியைச் சொல்லலாம். கருநிற நைட்ஃப்யூரிக்கும், வெண்ணிற லைட் ஃப்யூரிக்குமான ரொமான்ஸ் மிக க்யூட்டாக உள்ளன. வால்-ஈக்கும், ஈவாவுக்குமான காதலை நினைவுப்படுத்தும் வண்ணம் அக்காட்சிகள் இருந்தன.

திரைக்கதை லேசாகப் பிசிரடித்தாலும், ‘ட்ரீம்வொர்க்ஸ்’ தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கேற்ப, வழக்கம் போல் தங்கள் விஷுவல்களினால் அசத்தியுள்ளனர். டிராகன்கள் ஜோடியாக நடனமாடும் காட்சிகள், அவதார் படத்தின் பண்டோரோ போல வண்ணமயமான டிராகன் உலகம் எனப் படத்தின் விஷுவல்கள் கண்ணைக் கவருகின்றன.