
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் “EMI – மாதத் தவணை” ஆகும். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.
தற்போதைய உலகில், 20000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழுப் பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இ.எம்.ஐ. -இல் போட்டுத்தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவரவர் தகுதிக்குத் தகுந்த மாதிரி ஏதோ ஒன்று, காரோ, பைக்கோ, இ.எம்.ஐ. போட்டுத்தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி லோன் எடுத்துவிட்டு, இரண்டு மூன்று மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜரில் இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ணத் தொடங்குவார்கள். இதை நிச்சயமாக 90% மக்கள் அனுபவிக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களின் கதை தான் இந்தப்படம். ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் மல்லையன், “இ.எம்.ஐ. எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர் இ.எம்.ஐ.-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் கதையை இந்தப் படம் சொல்கிறது. இ.எம்.ஐ. எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது” என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “இந்த விழாவை என் குடும்ப விழா எனச் சொல்லலாம். என் அஸிஸ்டென்டின் அஸிஸ்டென்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். என் கொள்ளுப்பேரன் எனச் சொல்லலாம். இ.எம்.ஐ.-இல் அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம்” என்றார்.
சின்னத்திரை புகழ் ஆதவன், “படத்தில் நான் வந்த சீனை விட அதிகமாக எனக்குப் போஸ்டர் வைத்துள்ளார்கள் நன்றி. வாய்ப்பு தந்த சதாசிவம் சாருக்கு நன்றி. நானும் அஜித் சாரும் ஒரே மாதிரி, வருடத்துக்கு ஒரு படம் தான் செய்வோம். நயன்தாரவை போல இனிமேல் எனக்கு பிளாக் பாண்டி பட்டம் வேண்டாம் எனக் கூறியிருக்கும் பாண்டிக்கு வாழ்த்துக்கள். இப்ப இருக்கும் தயாரிப்பாளர்கள் 4 கோடிக்குப் படம் செய்வதில்லை, 40 கோடிக்குப் படம் செய்யவே ஆசைப்படுகிறார்கள். எது புதிதாக வந்தாலும் கதை தான் முக்கியம். அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என சொல்லிச்சென்ற ஆர் வி உதயகுமார் அண்ணனுக்கு நன்றி” என்றார்.
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், “இயக்குநர் பாக்யராஜ் முதலாகப் பெரும் ஆளுமைகள் இருக்கும் மேடையில் நான் இருப்பது எனக்குப் பெருமை. தன் சிஷ்யனுக்காக இவ்வளவு இறங்கி வேலை செய்யும் பேரரசுவுக்கு நன்றி. எத்தனை பேருக்கு இந்த மனம் வரும் எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் பாடல் விஷுவல் பார்க்கும்போது ஹீரோ பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பாக இருக்கிறார். நன்றாக நடித்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. சன் டிவி ஆதவன், பிளாக் பாண்டி ஆகியோருக்கு வாழ்த்துகள். படத்தின் டிசைன் முதல், எல்லாமே மிகத் திட்டமிடலுடன் உருவாக்கி இருக்கிறார்கள். EMI வாங்காத ஆளே இருக்க முடியாது, எல்லோருக்கும் மிக எளிதாக கனெக்ட் ஆகும் படம்” என்றார்.