
அஸ்திரம் என்றால் ஆயுதம் எனப் பொருள்படும். அதுவும் இப்படத்தின் உபதலைப்பான சீக்ரெட் என்பதோடு பொருத்திப் பார்த்தால் ‘ரகசிய ஆயுதம்’ எனப் பொருள் வரும்.
ஊட்டியிலுள்ள பூங்காவில் ஒருவர் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதே பாணியில் நிகழ்ந்த மரணங்களைத் துப்பு துலக்குகிறார் காவல்துறை அதிகாரி அகிலன். மரணித்தவர்கள் அனைத்தும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் என்ற துப்பினைத் தவிர, அகிலனில் புலனாய்வில் வேறெதுவும் அறிய முடியாமல் போகிறது. பின் ஒரு மருத்துவரின் உதவியோடு தற்கொலைகளுக்குப் பின்னுள்ள சூத்திரதாரியை அறிகின்றார் அகிலன்.
வில்லன்க்கு மெஸ்மர் எழுதிய ‘சீக்ரெட்’ எனும் புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் உதவியால்தான் வில்லன் அசாதாரணமான சக்தியை அடைகிறான். கிட்டத்தட்ட ஏழாம் அறிவு டோங் லீயைப் போல்! மெஸ்மர், ஹிப்னாட்டிஸத்தின் தோற்றுவாய்க்குக் காரணமானவர் என்றாலும், மெஸ்மரிசம் என்பது ஒருவரைத் தன்வயப்படுத்தி அவரது உடலை இயற்கையான முறையில் குணப்படுத்த முடியும் என்ற போலி அறிவியலாகும் (Pseudoscience). புனைவுக்குப் பொய்யழகு என்றாலும், ஒரு போலி அறிவியலின் (Mesmerism) பெயரில், இன்னொரு போலி அறிவியலைப் (Hypnotism) பயன்படுத்தி உள்ளனர். படைப்புச் சுதந்திரம்!
தன்னைச் சதுரங்க விளையாட்டில் தோற்கடிப்பவர்களைக் கொல்கிறான் வில்லன். அவனது முதல் கொலை அப்படியானது என்றாலும், ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்திக் தனக்குத் தோல்வியே வராத மாதிரி இறவாப் புகழ் பெறும் கிராண்ட் மாஸ்டராகியிருக்கலாம் வில்லன். ஆனால், நல்லதொரு சின்ன ஐடியாவை, எந்த டீட்டெயிலிங்கும் செய்யாமல் சின்னதாகவே திரைக்கதையில் பயன்படுத்தியுள்ளனர். கதாபாத்திர வார்ப்பிலும் கவனம் செலுத்தாமல், நாயகன் அகிலனைப் படத்தின் தொடக்கம் முதல் சுற்றலிலேயே விட்டுள்ளனர். அகிலனாக நடித்துள்ள ஷாமின் புலனாய்வு பரிதாபகரமானதாய் உள்ளது. வில்லன் ஆனமட்டுக்கும் அவராகவே அகிலன்க்குப் போதுமான துப்புகளைத் (Clues) தந்து கொண்டே உள்ளார். நல்லதொரு மைண்ட்-கேமாக இருக்கும் என நினைத்தால், க்ளைமேக்ஸில் ஆஜானபாகுவாக வில்லன் வந்து நிற்கிறார்.
புதிய களம், குறைந்த பட்ஜெட் என்ற சலுகையை இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்க்கு வழங்கினால், பொருட்படுத்தத்தக்க த்ரிலராக இப்படத்தைக் கொள்ளலாம். இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், மிக அற்புதமான த்ரில்லராகப் படம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும்.