
தலைப்பிலேயே கதையும்,போதுமான க்ளூவும் உள்ளது. யார் கடத்தல்காரரின் எதிரி? கடத்தலைத் தடுக்க முனைபவர்கள். இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக நுழையும் பொருட்களைத் தடுக்கும் வேலையைச் செய்வது CBIC (The Central Board of Indirect Taxes and Customs) ஆகும். அத்துறையில் பணியாற்றிய IRS அதிகாரியான T. சமய முரளி, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கதையாக்கித் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
அமர், லிங்கம் எனும் பெரிய கடத்தல்காரரிடம் வேலைக்குச் சேருகிறான். 25000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை, முந்த்ரா துறைமுகத்தை விட்டு வெளியில் கொண்டு வரும் வேலையை லிங்கத்திடம் கோருகிறான் அமர். லிங்கம் சம்மதிக்கக் களத்தில் இறங்கும் அமர், முந்த்ரா துறைமுகத்தை விட்டு கன்டெயினர்களை வெளியில் கொண்டு வருகிறான். கன்டெயினரை மடக்கிப் பிடித்து விடுகிறார் CBIC-இன் அசிஸ்டென்ட் கமிஷ்ணரான முரளி கிருஷ்ணா. ஆனால் 500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் மட்டுமே பிடிபடுகிறது. கடத்தல்காரர்களைத் தேடி முரளி கிருஷ்ணா சென்னை வருகிறார், 24500 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைத் தேடி லிங்கம் குஜராத் செல்கிறார், இவர்கள் இருவருக்கிடையில் அமர் மாட்டிக் கொள்கிறான்.
சிண்டிகேட்டிற்குத் தலைமை தாங்கும் டான் மேத்யூ பாயாக மலையாள நடிகர் லால் நடித்துள்ளார். துபாயில் வசிக்கும் அவர், 35 வயதிற்குள் உள்ளோரை அதிகம் கொண்ட நாடான இந்தியாவிற்கு, லிங்கத்தை நம்பிப் பெரியளவில் போதைப்பொருள் அனுப்பி வைக்கிறார். கன்டெயினர் காணாமல் போனதும் லிங்கத்தின் மீது சந்தேகப்படுகிறார்.
லிங்கம் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் JD சக்கரவர்த்தி. அவரது ஸ்டைலான தோற்றத்தாலும், ஷார்ப்பான கண்களாலும் கிட்டத்தட்ட ஒரு நாயகன் போலவே திரையில் வலம் வருகிறார். கதாநாயகியின் அண்ணனாக நடித்துள்ள காளி வெங்கட், வழக்கம் போல் கிடைத்த சின்ன கதாபாத்திரத்திலும் நிறைவாக நடித்துள்ளார். பத்தொன்பது வயதிலேயே காதலித்து வீட்டை விட்டு வெளியேறிக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் கதாநாயகி பவித்ரா பாத்திரத்தில் ஸ்மேகா மணிமேகலை நடித்துள்ளார்.
தீனாவாக நடித்திருக்கும் பாலசரவணன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கன்டெயினர்களை எடுக்க உதவும் பாத்திரத்தில் ஜாஃபர் சாதிக்கும் கலகலப்பிற்கு உதவியுள்ளார். அமராக, வடசென்னையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்துள்ள சரண் நடித்துள்ளார். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற ஏங்குவது, கன்சைன்மென்ட்டைத் துறைமுகத்தில் இருந்து தூக்குவது, பெரிதினும் பெரிது கேள் என்ற பெரிய க்ச்னவாகக் காண்பது என சரண் சிறப்பாக நடித்துள்ளார்.
முரளிமுரளி கிருஷ்ணனாக இயக்குநர் சமய முரளியே நடித்துள்ளார். அனுபவம் வாய்ந்த நடிகரான JD சக்கரவர்த்தியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ்க்கும், பில்டப்பான கேமரா கோணங்கள் மூலம் முரளி கிருஷ்ணா பாத்திரத்தை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் வேறுபாடு நன்றாகத் தெரிகிறது. துறை சார்ந்த நபர் என்பதால், துறைமுகத்தில் இருந்து கன்டெயினர் தூக்குவதை ஹீரோயிசமாகச் சுருக்காமல், அதன் பின்னுள்ள பேப்பர் வொர்க் போன்ற டீட்டெயிலிங்கில் கவர்ந்துள்ளார் சமயமுரளி. கதாபாத்திர வார்ப்பையும், அவர்களுக்குத் தெளிவானதொரு நோக்கத்தையும் திரைக்கதையின் ஓட்டத்தோடு இயைந்து ஏற்படுத்தியிருந்தால், சுவாரசியமான படமாக பரபரவென படம் ஓடியிருக்கும்சுவாரசியமான படமாகப் பரபரவெனப் பயணித்து ஈர்த்திருக்கும்.
