Search

வடசென்னை விமர்சனம்

Vadachennai-movie-review

அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை.

இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், ‘நிலம் எங்கள் உரிமை’ என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி!

வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பாகத் திரைக்கதை விரிகிறது. இடைவேளை வரையிலும், இன்னதெனத் தெளிவற்றவாறு பயணிக்கும் படம், அதன் பின் ஒரு கண்ணியில் இணைகிறது. ராஜன், குணா, செந்தில், தம்பி, சந்திரா, அன்பு, பத்மா என படத்தில் பிரதான பாத்திரங்களின் பட்டியலே நீளம். அத்தனைக் கதாபாத்திரங்களையும் ஓர் ஒழுங்குக்குள், தனித்தனியாக மனதில் பதியுமாறு கதைக்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார் வெற்றிமாறன். சிறைச்சாலை பற்றிய டீட்டெயிலிங்கும், வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்தின் எக்ஸ்ட்ரா பிளஸ். இது வடச்சென்னையைப் பற்றிய முழுமையான சித்தரிப்பு இல்லை என்ற வெற்றிமாறனின்  பொறுப்பான டிஸ்க்ளெயிமருக்குப் பாராட்டுகள்.

அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் பொதுவான அம்சம் அவர்களது வாழ்நிலம். அந்த நிலத்தோடு அவர்கள் தங்களை எப்படி இணைத்துக் கொள்கிறார்கள் அல்லது எந்தப் புள்ளியில் விலகத் தயாராகிறார்கள் என்பதில் தான் அவர்களுக்கிடையேயான உறவும் தீர்மானிக்கப்படுகிறது. நெய்தல் மனிதர்களை, மருத நிலத்தினர் ஆண்டாண்டு காலமாக அந்நியப்படுத்தியே வந்துள்ளனர். அதற்கு நெய்தல் மனிதர்களில் சிலரே துணை! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன்னலமாய்ச் சிந்தித்து, தன் இனத்திற்கும் இனத்தின் வாழ்வாதாரத்திற்கும் எதிராகச் செயல்படுபவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பர். வழுவாமல் இருக்க மனிதனால் ஆகுமா? ஆகுமெனில், அங்கே ஒரு தலைவன் தன்னிச்சையாக உருவாவான். துரோகம் முதல் பாகத்துக் கருவெனில், வடசென்னையின் இரண்டாம் பாகம் ஒரு தலைவனின் எழுச்சிக்கானது என்ற எதிர்பார்ப்போடு படத்தை முடித்துள்ளனர்.

‘மலையேற மச்சான் தயவு வேணும்’ என்பது பழமொழி. நண்பர்கள் கூட ஒருவரை ஒருவர் மச்சான் என்றே அழைத்து, நட்புக்கும் நெருக்கத்துக்கும் இணக்கமான ஓர் உறவாகத் தெரிந்தோ தெரியாமலோ அங்கீகரித்து வருகிறார்கள். ஆனால், தமிழ்ப்படங்களில் மச்சான் என்றாலே அது ஒரு பாவப்பட்ட கேட்டகிரி. வில்லனின் வைப்பாட்டித் தம்பியாகவோ, மனைவியுடன் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் நகைச்சுவையாளனாகவே தமிழ் சினிமா அணுகும். மனைவியின் உறவுகளைப் பொருட்படுத்தத்தக்க அளவில் அணுகுவதைக் கெளரவக் குறைச்சலாக நினைக்கும் பொதுப்புத்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால், இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாகவும், தனுஷின் மச்சானாகவும் வரும் சரணின் பாத்திரம் மிக முக்கியமானது. தரமான சம்பவங்கள் செய்துவிட்டு தெளலத்தாக அலையும் ஆட்கள் மத்தியில், அக்காவிற்காகத் தன் தந்தையிடம் எதிர்த்துப் பேசி கிளாப்ஸை அள்ளுகிறார் சரண். தனுஷ் போலவே, சரணின் முகமும் இரண்டு வேறு காலகட்டத்துக்குமான வித்தியாசத்தைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. தனுஷ்க்கும் சரண்க்குமான அந்த நட்பு கலந்த உறவு ரசிக்கவைக்கிறது. 

படத்தின் அச்சாணி சந்திராவாக ஆண்ட்ரியா. மிக நேர்த்தியாக வெற்றிமாறன் கதை சொல்லிக் கொண்டு வந்தாலும், படத்தின் முடிவில் அது தளர்ந்துவிடுகிறது. ரத்தின சுருக்கமாக வரும் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவர், குழப்பம் ஏற்படாமல் கதைக்கான லீடை ஆங்காங்கே தருகிறது. ஆனால், கதையோடு பொருந்தி வராமல், தன் மனதில் என்ன உள்ளது என்றும் டேனியல் பாலாஜியிடம் வசனமாக ஒப்பிக்கிறார் சந்திரா. ரசிகர்களை நம்பி, சினிமா எனும் ஆர்ட் ஃபார்மைப் பக்காவாகச் செதுக்கின வெற்றிமாறன், படத்தின் முடிவில் ஏனோ ரசிகர்களுக்குத் துரோகம் செய்துள்ளார். சில படைப்புகள், படைப்பாளனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும்.

குணாவிற்கும் செந்திலுக்கும் இடையில் நிற்கும் பொழுது, தனுஷ் காட்டும் பதற்றமும் பரிதவிப்பும் மிக அற்புதம். தனுஷை நம்பி வெற்றிமாறன் தாராளமாக மூன்று பாகங்களுக்கு மேலும்  கூட வடசென்னையை எடுக்கலாம்.