ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பானது படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C. வில்லியம்ஸ் தயாரிக்க,சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
ஜீ5 கிளஸ்டரின் ஹெட்டான சிஜு பிரபாகரன், “சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தைப் பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். தற்போதைய டிஜிட்டல் உலகில் நடக்கும் சம்பவங்களைச் சுற்றியே இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ள நடிகர் கண்ணா ரவி சிறப்பான நடிப்பை அளித்துள்ளார். இந்தத் தொடரின் இறுதிப் பதிப்பைப் பார்த்த பிறகு நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். தொடர் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.
ஜீ5 தளம் சார்பில் கௌசிக் நரசிம்மன், “இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவு நல்லதோ, அதே அளவு ஆபத்தும் அதில் இருக்கிறது என்று கூறுவதே இந்தத் தொடர். அனைவரும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இயக்குநர் சிறப்பான தொடரைக் கொடுத்துள்ளார்” என்றார்.
தயாரிப்பாளர் அருண், “இயக்குனர் சிவாகர் தான், நான் தயாரிப்பாளராக மாறக் காரணம். இந்தத் தொடரில் பணிபுரிந்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் குழுவின் முழு முயற்சியில் தான் இந்தத் தொடர் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது” என்றார்.
இயக்குநர் சிவாகர் ஶ்ரீனிவாசன், “கொரோனா தடங்கல்களைக் கடந்து இந்தத் தொடரை நாங்கள் முடித்துள்ளோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தான் காரணம். படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜீ5 சார்பில் வந்த பல பரிந்துரைகள் இந்தத் தொடரை செதுக்கியது. இந்தத் தொடரில் கதாபாத்திரங்களின் வசனமும், காட்சிகளும் சிறப்பாக அமையக் காரணம் எழுத்தாளர் ரோஹித். இந்தத் தொடர் ஒரு தொழில்நுட்ப திரில்லர், நாம் தினமும் காண்பதைத் திரையில் காட்ட முயற்சித்து இருக்கிறோம்” என்றார்.
நடிகர் பிரசன்னா, “ஃபிங்கர் டிப் முதல் சீசன், மிகவும் ஆழமாகவும், ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்தத் தொடரின் இயக்குநர் என்னை அணுகி, இந்தக் கதையைச் சொன்ன போது எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. அனைவராலும் மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். இன்றைக்குத் தொழில்நுட்பம் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதைச் சொல்வது தான் இந்தத் தொடர்” என்றார்.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “இந்தக் கதை நாம் தினமும் கடந்து செல்லும் விஷயத்தைத் திரையில் பார்ப்பது போல் இருக்கும். ஒரு விஷயத்தை எல்லோருடைய பார்வையில் பார்ப்பது போல் இருக்கும். இந்த சீரியலில் நான் நடிகையாகவே நடித்துள்ளேன். நடிகைக்கு இருக்கும் சிக்கல்களை காட்டும் கதாபாத்திரமாக அது இருக்கும். பல சிக்கல்களைக் கடந்து இந்தத் தொடரை நாங்கள் எடுத்துள்ளோம். நான் 15 வருடங்கள் கழித்து பிரசன்னா உடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இது போன்ற கதைகளை எடுத்து, அதைச் சுவாரசியமாக கொடுக்க முயற்சிக்கும் ஜீ5-க்கு நன்றி” என்றார்.
நடிகை அபர்ணா பாலமுரளி, “ஃபிங்கர் டிப் தொடருக்கு என்னை அழைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். பல நிஜ சம்பவங்களைத் திரையில் பார்ப்பது போல் இந்தத் தொடர் இருக்கும். இது எனது முதல் வலைத்தொடர். இயக்குநர் இந்தக் கதையை சிறப்பாகச் சொல்லியுள்ளார், இந்தக் கதை எல்லோரும் சம்பந்தப்படுத்தி கொள்ளும்படியான ஒரு கதையாக இருக்கும்” என்றார்.
திரைக்கதை எழுத்தாளர் ரோஹித், “இந்தத் தொடரின் முதல் சீசன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் இரண்டாவது பாகத்தை நான் எழுதுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொடரில் அனைவரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்” என்றார்.
இசையமைப்பாளர் தீனதயாளன், “இந்தத் தொடரில் இசையமைப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குநருக்கு நன்றி. தயாரிப்பாளர் அருண் மற்றும் ஜார்ஜ் என்னை நம்பியதற்கு நன்றி. இதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர்” என்றார்.
நடிகர் வினோத் கிஷன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம், எல்லோரும் நிஜ வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். அது கண்டிப்பாக அதிர்வலையை ஏற்படுத்தும்” என்றார்.
நடிகை திவ்யா துரைசாமி, “இந்தத் தொடரில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் தொடரின் இயக்குநர் சிவாகர் உடன் பயணித்தது பெரிய அனுபவமாக இருந்தது. ஜீ5-யில் சுவாரசியமிக்க பல தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தத் தொடரும் இருக்கும்” என்றார்.
‘ஃபிங்கர்டிப் சீசன் 2′ தொடர் ஜீ5 தளத்தில் ஜூன் 17, 2022 அன்று வெளியாகிறது.