Shadow

O2 விமர்சனம்

கோவையில் இருந்து கொச்சிக்குச் செல்லும் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பேருந்தில் சிக்கியவர்கள் ஆக்சிஜனுக்காகப் போராடும் சர்வைவல் த்ரில்லர்தான் படத்தின் கதை.

சர்வைவல் த்ரில்லர் என வகைமைப்படுத்தினாலும், தன் மகனுக்காகப் போராடும் ஒரு வீரத்தாயின் கதை என்ற சிறப்பும் உண்டு இப்படத்திற்கு. தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது செல்ல அழகு மகனாக யூ-ட்யூப் புகழ் ரித்விக் நடித்துள்ளான். அவனது திறமைக்குத் தீனி போடுமளவிற்கான வாய்ப்பு இல்லையெனினும், கிடைத்த ரோலில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிந்துள்ளான் சுட்டிப் பையன்.

படத்தின் ஆரம்பமே, இயற்கையைப் பற்றிய ஓர் 2டி அனிமேஷனில் இருந்து தொடங்குகிறது. அதை அழகாகக் க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்திருப்பது சாதுரியமான முடிச்சு. இயக்குநர் G.S.விக்னேஷ் எடுத்துக் கொண்ட மாறுபட்ட களம் ஈர்த்தாலும், களத்துக்குள் பார்வையாளர்களைத் தக்க வைக்குமளவு மேஜிக் முழுவதுமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சிறுவனின் உயிருக்குப் பதில், ஏழு பெரியவர்கள் உயிர் பிழைக்கக்கூடிய வாய்ப்பைப் பற்றிய பேரம் ஏற்படுத்தும் சக மனிதர்களின் உயிராசை, பார்வையாளர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செயற்பாடுகளின் விவரணைகளில் போதாமை உள்ளது போல் தோன்றுகிறது. மேலும், அருமையான சாகசத்துக்குரிய பிளாட்டைப் போனால் போகிறது என காஃபி குடித்துக் கொண்டே கடக்கும் அவர்களது மனோபாவம், படத்தோடு ஒன்ற முடியாமல் செய்கிறது. எப்படியும் பேருந்தில் உள்ளவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பது உள்ளங்கனி நெல்லிக்கனி போல் தெரியும்பட்சத்தில், அந்த மீட்புப்பணி எப்படிச் சாத்தியமானது என்ற பதற்றமும் சுவாரசியமுமே இவ்வகை த்ரில்லர்களைத் தூக்கி நிறுத்தும். இயக்குநர் G.S.விக்னேஷ் இன்னும் சற்று கவனமுடன் மெருகேற்றியிருக்கலாம்.

பசி வந்தால் மட்டுமல்ல, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய எத்தகைய இக்கட்டில் சிக்கினாலும், மனிதனிடமுள்ள பத்துக் குணங்களும் பறந்து போய்விடும். ஆனால், இதில் வில்லனாகச் சித்தரிக்கப்படும் போலீஸ் அதிகாரி கருணை ராஜனாக காட்டப்படும் பரத் நீலகண்டன், முதல் ஃப்ரேமிலிருந்து, ‘நானொரு வில்லன்’ என முறுக்கிக் கொண்டே உள்ளார். சூழ்நிலை அவரை வில்லனாக மாற்றவில்லை. அக்குறையை, முன்னாள் அமைச்சர் போஸ் பெருமாளாக வரும் RNR மனோகர் ஓரளவு தீர்க்கிறார். பேருந்து ஓட்டுநராக ஆடுகளம் முருகதாஸ் தன் பாத்திரத்தினை நிறைவாகச் செய்துள்ளார்.

ஒரு தவிப்பினை ஏற்படுத்த வேண்டிய O2, தலைப்பாகையை மட்டுமே தட்டிவிட்டுள்ளது.