Shadow

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’-இற்காக சாம் சி.எஸ் இசையமைத்த ‘துவா துவா..’ எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ‘ராப்பர்’ அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவான ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் வலைதளத் தொடராகும். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளுடன், வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இட்டாலியன், ஜப்பானியம், போலந்து, போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தத் தொடர் மேலும் சில வெளிநாட்டு மொழிகளில் வசன வரிகளுடனும் திரையிடப்படுகிறது.

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ புலனாய்வுத் தொடரை வெளியிடுவதற்கு முன், விளம்பரத்தின் பொருட்டு, இத்தொடருக்காக இசையமைக்கப்பட்ட ‘ துவா துவா..’ எனும் பாடலுடன் அதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.‌

இந்தப் பாடலில், இந்தத் தொடரில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உளக் கொந்தளிப்பையும், தொடரின் மையக்கருவையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் இசையும் அமைந்திருக்கின்றன. இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17ஆம் தேதியன்று ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசிக்கலாம்.

இந்தப் பாடலை பற்றி இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ” சுழல் – தி வோர்டெக்ஸ் தொடரைப் பார்த்தபிறகு இதில் இடம்பெறும் பாடல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. தொடர் முழுவதும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மூலம் அனுபவிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல் அமைய வேண்டும் என நினைத்தேன். மேலும் இந்தத் தொடரின் ஆன்மாவை ‘துவா துவா’ என்ற பாடல் மூலம் கைப்பற்ற முடிந்தது” என்றார்.

பாடகி ஜோனிடா காந்தி, ” சுழல் – தி வோர்டெக்ஸ் தொடரில் பங்களித்ததால் உற்சாகமாக இருக்கிறேன். இது புலனாய்வு சார்ந்த க்ரைம் திரில்லர் தொடர் மட்டுமல்ல, இசை மற்றும் ஒளிப்பதிவும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் தொடர். ‘துவா துவா’ பாடல் சில சுவராசியமான திருப்பங்களையும் கொண்டிருக்கிறது. சாம் சி.எஸ், அறிவு, ஆண்ட்ரியா உள்ளிட்ட திறமையான குழுவினருடன் இணைந்து மியூசிக் வீடியோவில் பணி புரிந்ததும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. வீடியோவில் நாங்கள் பணியாற்றியதை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

ஆண்ட்ரியா, ” சாம் சி.எஸ் ஜோனிடா, அறிவு ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. இவர்கள் அனைவரும் ஒரு முகமான மனதுடன் கவனம் செலுத்திப் பாடலை உருவாக்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. ‘துவா துவா..’ பாடலில் பணியாற்றியதை நான் மிகவும் விரும்பினேன். ஏனெனில் அந்தப் பாடல் வெளிப்படுத்தும் விஷயம் சக்தி வாய்ந்தது. இந்தத் தொடரின் மையப் புள்ளியான கதைக்கருவை இந்தப் பாடல் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது” என்றார்.

ராப் பாடகர் அறிவு, ”சுழல் தொடரைப் போலவே ‘துவா துவா’ என்ற பாடலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதுதான் அழகு. பாடல் வரிகள் மற்றும் இசையின் நம்பகத்தன்மையை பாடலின் தனித்துவத்தை எடுத்துரைக்கிறது. ஜோனிடா மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் சாம் சி.எஸ் அவர்களின் இசை அமைப்பிற்கு இணைந்து பணியாற்றி இருக்கிறோம் என நான் நம்புகிறேன். ஆற்றலையும், சுழலையும் சம அளவில் வெளிப்படுத்தும் பாடல் மற்றும் அற்புதமான வீடியோவைப் பார்வையாளர்கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.