யோகி பாபுவின் கூர்கா படத்துக்குள் புதுப்புது ஆட்கள் வந்தவாறு இருக்கிறார்கள். சமீபத்தில் நவநாகரீக விஷயம் ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்கத் தூதர் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் சாம் ஆண்டன் இந்தக் கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களைப் பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரைத் தேர்வு செய்திருக்கிறார்.
இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்தப் படவாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை” என்றார்.
அதர்வா முரளி நடித்துள்ள ‘100’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் சாம் ஆண்டன். டிசம்பரில் தொடங்கும் கூர்கா படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு வருகிறது.
4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தக் கடத்தல் டிராமா படத்தில், சில முக்கிய நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் வசந்த் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (எடிட்டிங்) ஆகியோரும் பணிபுரிகிறார்கள். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.