விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது.
ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்தில் இருந்து படத்தில் அதுவரை நிலவி வந்த சுவாரசியமின்மை மெல்ல மறைய முயல்கிறது.
‘நானும் லோக்கல் திருடன் தான். என்னையும் கூட்டணியில் இணைச்சுக்கோங்க’ என வங்கியில் யோகிபாபு என்ட்ரி தருகிறார். அவரது ஒன்லைன் காமெடிகள், மழைக்காகக் காத்திருக்கும் சென்னையில் ஒரு மென் தூறல் போட்டால் கூட, எப்படியொரு ஆசுவாசம் எழுமோ, அப்படியொரு உணர்வைத் தருகிறது. புல்லட் ப்ரூஃப் போல், தெர்மோகோல் அட்டைகளைக் கட்டிக் கொண்டு, யோகிபாபு காவல்துறையினரை எதிர்கொள்ளும் காட்சி அதகளம்.
படம் ஒரு காட்சியிலும் மனதிற்கு நெருக்கமாகாமல், ஒரு மாதிரியான ஆடுபுலியாட்டம் ஆடுகிறது. ஜான்ஸியாக வரும் ஷாலினி பாண்டேவோ, தன் அகத்தாலும் புறத்தாலும் 1000 அடிகள் தள்ளியே நிற்கிறார். ‘காங்’ஆக தாய்லாந்து சிம்பென்சி “ஙோ” நடித்துள்ளது. உள்ளபடிக்கு, அந்த சிம்பென்சியின் அவசியமும் தேவையும் கதைக்கு ஏன் வந்தது என்ற மில்லியன் டாலர் கேள்வி படம் முடிந்ததும் எழுகிறது. இயக்குநர் டான் சாண்டிக்கே வெளிச்சம். விவசாயி சாதீக்காக மதன் குமார் நடித்துள்ளார். அவரது அத்தியாயமும் படத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.
விவசாயப் பிரச்சனை, அதற்கான கடன் ரத்து செய்யும் கோரிக்கை என்றதும் மக்கள் உணர்வால் ஒன்றுகூடுகின்றனர். அவர்களை எப்படிக் கலைக்க, வங்கியில் சிக்கியுள்ள அமைச்சர் மகனை எப்படி மீட்க எனக் காவல்துறையினர் முழி பிதுங்குகின்றனர். ஆனால் கொள்ளையர்களோ தாங்கள் தப்பிப்பதற்காக, உணர்வால் சேர்ந்த அந்தக் கூட்டத்தைச் சுலபமாகச் சதுரங்கவேட்டையாடிவிடுவது தான் துரதிர்ஷ்டம்.