
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே ‘ஹர ஹர மஹாதேவகி’ எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, ‘காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்’ என ரஜினிகாந்த் சொல்வதை வடிவேலு தவறாகப் புரிந்து கொள்வார். ரஜினி படங்களுக்கு இது தேவையில்லை எனினும், அது தந்த ரகசிய கிளுகிளுப்பு, அக்காட்சிகளை அனைவரும் ரசிக்கும்படி செய்தது. இப்படியாக இலை மறை காய் மறைவாக, ஆங்காங்கே தமிழ்ப் படங்களில் இவை எட்டிப் பார்க்கவே செய்யும். நானும் ரெளடிதான் படத்தில், ‘உன்னைப் போடணும்’ என நயன்தாரா பார்த்திபனிடம் சொல்லும் காட்சியில் அதன் பொருளை மாற்றி விளையாடி இருப்பார்கள். இப்படியாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், “ஹர ஹர மஹாதேவகி” என்ற பதத்தையே தலைப்பாக்கி, முழு நீள அடல்ட் காமெடி படமென தைரியமாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.
ஹரியும் ரம்யாவும் லவ் ப்ரேக்-அப் செய்வதற்காக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்ட கிஃப்ட்களைத் திருப்பித் தந்து கொள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ காட்டேஜில் சந்திக்க முடிவெடுக்கின்றனர். அந்தக் காட்டேஜிலோ ஏக குளறுபடிகள் நிகழ்கின்றன. அந்தக் குளறுபடிகள் தான் படத்தின் கதை.
‘ஜில் ஜங் ஜக்‘ படத்தில் ஹர ஹர மஹாதேவகி குரலுக்கு ஓர் உருவத்தைக் காமிக்கலாகக் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் வாய்ஸ்-ஓவரோடு தன் பங்கை நிறுத்திக் கொள்கிறது அக்குரல். நாயகனை நாயகி நிர்வாணமாகப் பார்த்து விடுகிறார். “பாம்பைப் பார்த்துட்டியா?” என நாயகியின் தோழி கேட்கிறார். இவை தான் படம் விளம்பரப்படுத்திக் கொள்ளும் அடல்ட் காமெடி.
படம் இந்த ஜானரில் சோடை போனாலும், அரசியலையும், நித்தியானந்தரையும், சுவிசேஷ மகிமை புரிபவர்களையுன் சகட்டு மேனிக்கு நக்கல் புரிகிறது. இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார்க்கு அடல்ட் காமெடி வரவில்லையே தவிர, காமெடி மிக நன்றாக வருகிறது. குறிப்பாக, மது அருந்த வருபவர்களைக் காவல்துறையினர் மரியாதையாக வரவேற்று பாருக்குள் அனுப்பி வைக்கும் காட்சியைக் குறிப்பிடவேண்டும். படத்தின் தொடக்கமே, அரசியல் கட்சிகள் ‘அழகு சாதனப் பொருட்கள்’ அடங்கிய பையைப் பெண்களுக்கு இலவசமாக வழங்குவதில் இருந்தே தொடங்குகிறது. ‘இன்னும் எதையெல்லாம்டா இலவசமாகத் தருவீங்க?’ என்ற அந்த அங்கதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் ஹீரோ என்றே அந்தப் பையினைச் சொல்லலாம்.
ஹரி எனும் பாத்திரத்தில் கெளதம் கார்த்திக் கெஸ்ட் ரோல் தான் செய்துள்ளார். ஆனால், கிடைத்த குறைவான காட்சிகளிலேயே, நடிப்பிலும் நடனத்திலும் பிச்சி உதறியுள்ளார். ரம்யாவாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, தனது திரைப்படத் தேர்வினால் மீண்டும் ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். நாயகனை விட முக்கியத்துவம் உள்ள ரோலை ஏற்றுள்ளார். கதை இவரது கோணத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. அது சுவாரசியமாகத் தொடங்குவது போல் தெரிந்தாலும், முடிவில் அப்படியில்லை.
படத்தைச் செலுத்துவது ஸ்பைக் டைசனாக வரும் நான் கடவுள் ராஜேந்திரனும், குமாராக வரும் கருணாகரனும், கள்ள நோட்டுகளை மாற்றும் ரவியாக வரும் பாலசரவணனுமே! அரசியல்வாதியான ரவிமரியாவை, அடுக்கு மொழியில் புகழ்ந்து தள்ளுகிறார் அவரது உதவியாளர் இடியாக வரும் நமோ நாராயணன். புகழப்படும் பொழுதெல்லாம் பரவசமாகும் ரவிமரியாவின் முகமும், நல்லதொரு அரசியல் நையாண்டி.
குண்டலினியைக் கிளப்பும் சாமியாராக சூப்பர் குட் சுப்பிரமணியும், மகிமைகள் புரியும் பிரச்சாகராக ஜார்ஜும் வரும் காட்சிகள் அதகளம். வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அந்தக் காட்சியில் நடித்த அனைவருமே பிரமாதப்படுத்தியுள்ளார்கள். குழந்தையைக் கடத்தும் அத்தியாயம் மட்டும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. படத்தின் க்ளைமேக்ஸ், உள்ளத்தை அள்ளித்தா படத்தின் முடிவினைப் போலுள்ளது. க்ளைமேக்ஸ் குழப்பத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். முத்தத்தை மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொள்ளும் காட்சியில், சதீஷின் ஆர்வமான நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.
பாம்பு என்று சொல்வதற்கே ஆர்கஸம் அடைந்து, அடல்ட் காமெடி என்று பீற்றிக் கொண்டால், கரடி காறித் துப்பாமல் என்ன செய்யுங்கிறேன்!? குறுக்கு நெடுக்கே வரும் ஒன்றிரண்டு பாம்புகளையும் உதறி விட்டு, முழு நீள காமெடிப் படமாக எடுக்கப்பட்டிருந்தால், படம் இன்னும் பட்டாசாக இருந்திருக்கும்.