
கல்லூரிக்குப் படிக்கப் போன இடத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகும் தன் மகளின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க பயணப்படும் ஒரு தந்தையின் பயணமே இந்த “ஹரா” திரைப்படம்.
“மைக் மோகன்” என்றும் “வெள்ளிவிழா நாயகன்” என்றும் புகழப்படும் நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடித்திருக்கிறார். இளமை காலங்களிலேயே அவர் ஆக்ஷன் எல்லாம் அவ்வளவாக செய்த்தே இல்லை. வயோதிகத்தில் அழைத்து வந்து வலுக்கட்டாயமாக ஆக்ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள். அவரது உடலும் வயதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. கதை நாயகனாகவும், காதல் நாயகனாகவும் அறியப்பட்டவரை கமர்ஸியல் நாயகனாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கை கொடுக்கவில்லை.
அப்பாவிற்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்துமே அயர்ச்சியைக் கொடுக்கின்றன. துடுப்பற்ற ஓடம் போல் திரைக்கதை எங்கெங்கோ பயணிக்கிறது. முஸ்லீம் வேடம், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பான பதற்றம், முன்னாள் போலீஸ் அதிகாரியின் துரத்தல், வேலு நாயக்கர் சாயலில் வரும் சாருஹாசன், வக்கீல் யோகி பாபு வரும் காட்சிகள், மந்திரியாக வனிதா விஜயகுமார் வரும் காட்சிகள், முதல்வராக பழ.கருப்பையா வரும் காட்சிகள், என படத்தில் தேவையில்லாத ஆணிகள் அதிகம்.
தகப்பனான மோகன் என்ன வேலை பார்க்கிறார்,.? மகள் இறந்தது எப்போது..?, முஸ்லீமாக மாறியது எப்போது..? மகளின் இறப்பிற்கு பின்னால் உள்ள மர்மத்தை தேடத் துவங்கியது எப்போது..? இதெற்கெல்லாம் விடையே இல்லை. சர்வ சாதாரணமாக துப்பாக்கி வாங்குகிறார். ஓடும் பேருந்தில் ஒருவனை சுடுகிறார். இதெல்லாம் ஒரு சாமானியனுக்கு எப்படி சாத்தியப்பட்டது என்பதற்கான விடையே இல்லை.
மகளின் இறப்பிற்கு காரணம் காதல், பாலியல் வன்கொடுமை என்றெல்லாம் பயணப்பட்டு, இவையெல்லாம் பழையது என்று எண்ணி, அதை விட பழைய பெண்கள் கடத்தல் கதையில் கொண்டு போய் படத்தை முடித்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஒரு பழிவாங்கல் கதை. பழிவாங்கப்பட வேண்டியவர்கள் மொத்தமாக பத்து நிமிடம் கூட வருவதில்லை. மொத்தத்தில் இரண்டரை மணி நேரமாக பழி வாங்கப்படுவது படம் பார்க்கச் சென்ற நாம் தான்.
ஹரா – மிகப்பெரிய ஹராம்.