32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆன்லைன் சீட்டாட்டம் எனும் சமூகச் சீர்கேடு – ராஜ்கிரணின் ஆதங்கம்

Dinesh R சேலம் Published: 16/12/2022 2 நிமிட வாசிப்பு Updated: 20/12/2022 சமூகம்
எழுத்து அளவு:

“சீட்டாட்டம்” என்பது மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப் பழக்கத்தைத் தொட்டவரை விடவே விடாது. சீட்டாடத் தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்குத் தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று ஒரு படமே எடுத்தேன். அந்தக் காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. “காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே” என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, “ஆன்லைன் ரம்மி” என்ற பெயரில், காவல்துறையைப் பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூகச் சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம் பாமர மக்களை ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கூவிக்கூவி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக் கிடக்கின்றன. தமிழக அரசு, இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத் தடுக்க சட்டம் இயற்றியும், அதைச் செயற்படுத்த முடியாமல் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

தன்னிச்சையாக இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டைத் தடை செய்து, பொதுமக்களைக் காக்க வேண்டிய நீதி மன்றங்கள், இது, திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது, இல்லையெனில், இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறுவதாகச் செய்திகள் வருகின்றன.

இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை!

– ராஜ்கிரண்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.