Shadow

Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records)’ என்னும் புதிய ஆடியோ கம்பெனியைத் தொடங்கியுள்ளார்.

நாட்டுப்புறக் கலைஞராகப் பாடகராகத் தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசனும், ரீத்தா அந்தோணியும். தனது கடின உழைப்பால் அந்தோணிதாசன் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப் போலவே திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறார்.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத் தெரிந்தவர்கள், இசைக்கருவிகளைக் கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும் நிறுவனம் உதவிசெய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம்.

ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. அடையாறு இசைக்கல்லூரி முன்னாள் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கிய விழாவில் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் சிஇஓ முருகன் மந்திரம் வரவேற்புரையுடன் தொடங்கியது.

இயக்குநர் சீனு ராமசாமி, “அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன். தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னைப் போல கலைஞர்களை கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தைத் துவங்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனது ஆதரவு எப்போதும் அந்தோணிதாசனுக்கு உண்டு, அந்தோணிதாசன் மிகப்பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன். அது மிகச் சிறப்பான உலக சினிமாவாக இருக்கும்” என்று பேசினார்.

சின்னக்குயில் சித்ரா, “அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப் போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை. இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இங்கு வந்துள்ள பாடகர்கள் அனைவரின் குரலையும் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர். தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக் கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால், பேசுவதை விட உற்சாகமாகப் பாடி அசத்தினர். கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. அனைவரும் உச்சஸ்துயில் பாடி அரங்கை அதிர வைக்க, இறுதியாக, சின்னக்குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” எனும் மென்பாடலைப் பாடினார். திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.

கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் “மொச்சக்கொட்ட பல்லழகி” பாடலைப் பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, “நாடோடி பாட்டுக்கு” பாடல் வெளியிடப்பட்டது.

விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக்கலைஞர்களின் ஆட்டம்பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.