Shadow

இந்தியாவின் திணறலான 50வது வெற்றி

Shami

இந்த உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத இந்திய அணியும், இதுவரை வெற்றியை ருசிக்காத ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.

உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில், முதல் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தாலும், பின்னர் வீறுகொண்டு எழுந்து, தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று, இறுதியாட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான். 2018 ஆசிய கப்பிலும் பங்களாதேஷ், இலங்கையுடன் வெற்றி, இந்தியாவுடன் ‘டை’ என நம்பிக்கையை அளித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இலங்கைக்கு எதிரான போட்டியைத் தவிர, ஏனைய போட்டிகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாகவே இருந்தது.

ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம், அவர்களின் சுழற்பந்து வீச்சு. ஆனால் இந்த உலகக்கோப்பையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நம்பிக்கை வீரர் ரஷீத் கான் 9 ஓவரில் 110 ரன்களை கொடுத்த மோசமான சாதனையைப் படைத்தார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதில் முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டார். ராகுலும், ரோகித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, முஜீப் ரஹ்மான் முதல் ஓவரை வீசினார். முஜீப் வீசிய ஐந்தாவது ஓவரில், போல்ட் ஆகி ஒரு ரன்னில் ரோகித் வெளியேறினார், இந்த உலகக்கோப்பையில் அவர் அரை சதத்துக்குள் அவுட்டானது, இதுவே முதல்முறை.

அடுத்து கோலி களமிறங்க, அஃப்தாப் ஆலம் வீசிய ஏழாவது ஓவரில் இந்தியாவுக்கான முதல் பௌண்டரியை ராகுல் அடித்தார். ஒருபுறம் ராகுல் பொறுமையாக விளையாட, கோலி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். முகமது நபி பந்துவீச்சில், தேவையில்லாமல் ரீவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று ராகுல் 30 ரன்களில் வெளியேறினார். இந்த உலகக்கோப்பையில், முதல்முறையாக இந்தியாவின் தொடக்க வீரர்கள் இருவரும் பதினைந்து ஓவருக்குள் வெளியேறியது இதுவே முதல்முறை.

பத்தென்பதாவது ஓவரை ரஷீத் கான் வீச, முதல் பந்தில் கோலி ஃபோர் அடித்தார், ஏழு ஓவருக்கு பிறகு வந்த முதல் பௌண்டரி, அதே ஒவரில் விஜய் சங்கருக்கு LBW கேட்க, நடுவர் மறுக்க, மூன்றாவது நடுவரிடம் ரெவ்யூ செய்தது ஆப்கான், ஆனால் ரீப்லேவில் அது பேட்டில் பட்டது தெரியவர, ஆப்கானிஸ்தான் ரீவியூவை இழந்தது.

கோலி – விஜய்சங்கர் இணை ரன்ரேட் ஏறமால், இறங்காமல் ஒரே விதத்தில் இருக்கும்படி ஆடினார். இருபத்தி மூன்றாவது ஓவரில், தன் அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். இந்த உலகக்கோப்பையில் அவரின் தொடர்சியான மூன்றாவது அரைச்சதம். ரகமத் ஷா ஓவரில் விஜய் சங்கருக்கு LBW கொடுக்கப்பட, அவர் அதை ரெவ்யூ செய்தார், Ball Tracking-இல் பந்து ஸ்டெம்பில் படுவது நடுவர் முடிவு என வந்துவிட, அவர் வெளியேறினார்.

பின்னர் கோலி – தோனி இணை சேர்ந்தது, ஆனால் அதுவும் நிறைய நேரம் நீடிக்கவில்லை. முகமது நபி பந்துவீச்சில், 67 ரன்களுக்கு வெளியேறினார் கோலி. மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கத் தடுமாறினாலும், கோலியின் ஸ்ட்ரைக் ரேட் நூறுக்கு மேல். அடுத்து களமிறங்கிய ஜாதவ் – தோணி இணை மேலும் விக்கெட் விழாமல் காக்கும் எண்ணத்தில் பொறுமையாகவே விளையாடினார்.

37வது ஓவரில் ஜாதவ் அடித்த பௌண்டரி தான், விஜய் சங்கர் அவுட்டானதுக்கு அப்புறம் வந்த முதல் பௌண்டரி, கிட்டதட்ட பத்து ஓவருக்கு இந்தியா பௌண்டரி அடிக்கவில்லை.

நாற்பது ஓவர் முடிவில் இந்தியா 175/4 என்ற நிலையில் இருந்தது, விக்கெட் இருப்பதால் கடைசி பத்து ஓவரில் நூறு ரன்கள் வரை கிடைக்கும் என்ற இந்திய ரசிகர்களின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டனர் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள்.

45வது ஒவரில் ரஷித்கான் பந்து வீச்சில் 28 ரன்னில் அவுட்டானர் தோனி. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தோனி ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக அவர் ஸ்டெம்பிங் ஆனதும் ஒரு உலகக்கோப்பை போட்டியில் தான். மே.இ.தீவுகளுக்கு எதிராக 2011 உலகக்கோப்பையில். அம்முறை இந்தியா அவ்வுலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

46 ஓவரில் இந்தியாவிற்கான முதல் சிக்ஸை ஜாதவ் அடித்தார். பாண்டியா எதுவும் செய்யாமல் 7 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் உலகக்கோப்பையில் தன் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஜாதவ். ஷமி 1 ரன்னுடனும், ஜாதவ் 52 ரன்களுடனும் கடைசி ஓவரில் வெளியேறினர். ஐம்பது ஓவர் முடிவில் இந்தியா 224/ 8. கடைசி பத்து ஓவரில் 49 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த உலகக்கோப்பையில் ஐம்பது ஓவர் முழுமையாக பேட்டிங் செய்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். 2010க்குப் பின் இந்தியா முதலில் பேட்டிங் செய்து, ஐம்பது ஓவர் முடிவில் எடுத்த குறைஞ்சபட்ச ஸ்கோரும் இதுவே.

பின்னர் ஆஃப்கானிஸ்தான் ஆட்டத்தைத் தொடங்க, முகமது ஷமி முதல் ஓவரை வீச, ஆஃப்கான் கேப்டன் குல்பதீன் நைப், ஹஸ்ரதுல்லா களமிறங்கினார். மூன்றாவது ஓவரில் ஷமி வீசிய பந்து ஹஸ்ரதுல்லா பேட்டில் பட, இந்திய வீரர்கள் LBW கேட்க, நடுவர் மறுக்க, இந்தியா ரெவ்யூ கேட்டது, மூன்றாவது நடுவர் பந்து லைனுக்கு வெளியே விழுந்ததால், அவுட் இல்லைனா சொல்ல, கோலி வித்தியாசம் கொஞ்சம் தானே என சைகை செய்து கொண்டே போனார், இந்தியா தன் ரெவ்யூ வாய்ப்பை இழந்தது, ஆனால் பந்து ஸ்டெம்பில் படும் என Ball tracking காட்டியது.

ஆனால் இந்த அதிர்ஷ்டம் நீண்ட நேரம் ஹஸ்ரதுல்லாவுக்கு கை கொடுக்கவில்லை. அதே ஷமி பந்து வீச்சில் 10 ரன்னில் போல்டாகி வெளியேறினார். பின்னர் ரகமத் ஷா, நைப்புடன் கூட்டணி சேர, இருவரும் பொறுமையாக விளையாட ஆரம்பித்தனர்.

பாண்டியாவின் முதல் ஓவரில் நைப் இரண்டு பௌண்டரிகளை அடிக்க, தன் அடுத்த ஓவரில் நைப்பின் விக்கெட்டை வீழ்த்தி பழி தீர்த்து கொண்டார் பாண்டியா. நைப் 27 ரன்னில் வெளியேற, ஆப்கானிஸ்தான் 64/2 என்ற நிலையில் இருந்தது, இந்தியாவும் தன் இரண்டாவது விக்கெட்டை 64 ரன்னில் இழந்தது என்பது ஆச்சிரியமான ஒற்றுமை .

பின்னர் சேர்ந்த ரக்மத் – ஷாகிதி ஜோடி, அணியைச் சரிவில் இருந்து காக்கப் போராடியது. அதில் ஒரளவு வெற்றியும் பெற்றது. மேலும் விக்கெட் விழாமல் ஆஃப்கானிஸ்தான் 100 ரன்களைக் கடந்தது. இந்த இணையை பும்ரா பிரித்தார். 29 ஓவரில் நாலாவது பந்தில் ரகமத் ஷாவையும், கடைசி பந்தில் ஷாகிதியையும் வெளியேற்றினார். ரகமத் 36 ரன்களுடனும், ஷாகிதி 21 ரன்களுடனும் வெளியேறினர்.

முன்னான் கேப்டன் அஸ்கரும், முகமது நபியும் இணை சேர்ந்தனர். இந்த இணையை சாஹல் பிரித்தார் 8 ரன்னில் சாஹல் பந்தில் போல்டாகி வெளியேறினார் அஸ்கர். பின்னர் இணை சேர்ந்த நஜிபுல்லா- நபி ஜோடி வேகமாக ரன்களைச் சேர்த்தது, 39 பந்தில் 36 ரன்களைச் சேர்த்த இவர்களைப் பாண்டியா பிரித்தார். நஜிபுல்லா 21 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் சஹாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரஷீத் கான், சஹோல் பந்துவிச்சில் ரிவர்ஸ் ஸ்விப்பில் ஃபோர் அடித்து, அடுத்த பந்தில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். வரிசையாக விக்கெட் வீழ்ந்தாலும், ஒருமுனையில் முகமது நபி நம்பிக்கையுடன் விளையாடினார். பும்ரா வீசிய 47வது ஓவரில் ரன் அவுட் கண்டத்தில் தப்பிய நபி, அடுத்த பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். இந்த உலகக்கோப்பையில் பும்ரா பந்துவீச்சில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர் இது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட, முகமது சமி வீசிய முதல் பந்தை பௌண்டரிக்கு விரட்டி தன் அரைசதத்தை நிறைவு செய்தார் நபி. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்கும் வாய்ப்பை நிராகரித்தார். கடைசி நான்கு பந்தில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட, நபி சிக்ஸ் அடிக்க முயற்சித்த பந்து பாண்டியா கையில் தஞ்சமடைய, 52 ரன்களில் வெளியேறினார்.

அடுத்தடுத்த பந்தில் ஆலம், முஜீப் இருவரையும் போல்ட் செய்து முகமது ஷமி, உலகக்கோப்பையில் தனது முதல் ஹிட்ரிக்கை பதிவு செய்ய, இந்திய உலகக்கோப்பையில் தன் ஐம்பதாவது வெற்றியைப் பதிவு செய்ததது.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்