Search

ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

ind-wins-aus

இந்தியா தன் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்ற தெம்போடும்; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது ஆட்டத்தில் முதலில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து, மே.இ.தீவுகளை வென்ற தெம்போடும் ஆஸ்திரேலியா களம் இறங்கியது..

இதுவரை உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய பதினொரு ஆட்டங்களில், ஆஸ்திரேலியா எட்டு முறையும், இந்தியா மூணு முறையும் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த ஓராண்டாக தடுமாறி வந்த ஆஸி, உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று திரும்பவும் ஃபார்முக்கு வந்தது.

இத்தனைக்கும் அந்தத் தொடரில் காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தடை காரணமாக வார்னர், ஸ்மித் பங்கேற்றவில்லை. இன்றைய போட்டியில் இவர்களும் அணியில் இருப்பதால் ஆஸி அணி நம்பிக்கையுடன் களமிறங்கினார்.

டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக ரோகித், தவான் களமிறங்கினர். கம்மின்ஸ் முதல் ஓவரை வீச, ஸ்டார்க் இரண்டாவது ஓவரை வீசினார், அந்த ஓவரில் ரோகித் கொடுத்த கேட்சை கூல்டர் நைல் தவறவிட்டார். இந்திய வீரர்கள் தொடக்க ஓவரில் மிகவும் பொறுமையாக விளையாடினர், ஐந்தாவது ஓவரில் தான் தவான் இந்தியாவுக்கான முதல் பௌண்டரியை அடித்தார்.

பந்து வீச்சில் முதல் மாற்றமாக எட்டாவது ஓவரை கூல்டர் நைல் வீச, அதில் மூணு பௌண்டரி தவான் அடித்து ரன்ரேட்டை உயர்த்த ஆரம்பித்தார்.

ரோகித் ஷர்மா இருபது ரன்களைக் கடந்த போது, ஆஸி எதிராக ஒருநாள் போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களைக் கடந்தார். இதற்கு முன்பாக சச்சின், மே.இ.தீவு வீரர்கள் ரிச்சர்ட்ஸ், ஹெயின்ஸ் ஆகியோர் மட்டுமே ஆஸிக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்திருந்தனர். குறைந்த போட்டிகளில்(37 போட்டிகள்) ஒரு அணிக்கெதிராக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார்.

தவான், ரோகித் இருவரும் பொறுப்புடன் ஆட இந்தியா முதல் விக்கெட்டுக்கு 127 ரன்களை குவித்தது, ரோகித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் – ரோகித் ஆஸிக்கு எதிராக பாட்னர்ஷிப்பாக 22 இன்னிங்ஸில் 1273 ரன்களைக் குவித்துள்ளனார், வேறு எந்த ஜோடியும் செய்யாத சாதனை..

ஓன் டவுன்னாகக் களமிறங்கிய கோலி, முதலில் தடுமாறினாலும், பின்னர் தவானுடன் நல்ல கூட்டணி அமைத்து விளையாடினார். 33 ஓவரில் தவான் தன் சதத்தைப் பூர்த்தி செய்தார். உலகக் கோப்பையில் இது அவரது மூன்றாவது சதம். ஐ.சி.சி போட்டிகளில் ஆறாவது சதம் ஆகும்.

இந்தியாவின் சச்சின், கங்குலி தலா ஏழு சதத்துடன் முன்னணியில் உள்ளனார்.

தவான் 117 ரன்னில் அவுட்டாக, நாலாவது வீரராகப் பாண்டியா களமிறங்கினார், தன் சந்தித்த முதல் பந்தில் கேட்ச் கண்டத்தில் தப்பித்தார். பின்னர் ராகுல், தோணிக்கு முன்பாகக் களமிறக்கிய அணியின் நம்பிக்கையைக் காப்பாற்ற அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அரை சதத்தைக் கடந்த கோலியும் அதிடியைக் காட்ட அணியின் ஸ்கோர் நல்ல ரன்ரேட்டில் முன்னேறியது.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 48 ரன்னில் ஆட்டமிழந்தார், பின்னர் களமிறங்கிய தோணியும் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 27 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ராகுல், முதல் பந்திலயே சிக்ஸர் பறக்கவிட்டார்.

50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. 353, கடின இலக்கு என்றாலும் ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையும், சில புள்ளி விவரங்களும் கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்தது.

இதற்கு முன்பாக, இந்தியாவின் முதல் மூன்று வீரர்களும் உலகக் கோப்பையில் ஓரே முறை அரை சதத்தை அடித்திருந்தனார், அதில் எல்லாம் இந்தியா தோற்றுப் போனது.

இந்தப் போட்டிக்கு முன்பாக தவான் – ரோகித் இணை 15 செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அடித்திருந்தனர், அதில் 13 வெற்றி, 2 தோல்வி. முதல் தோல்வி போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் (இலங்கைக்கு எதிராக). இரண்டாவது தோல்வி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக (மொகலி மைதானத்தில்).

ஆஸி அணிக்காக வார்னர், பிஞ்ச் களமிறங்க புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இரண்டாவது ஓவரை பும்ரா வீச, அந்த ஓவரில் வார்னர் பேட்டில் பட்ட பந்து ஸ்டம்பில் மோதியது, ஆனால் பைல்ஸ் விழாத காரணத்தால் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்த உலகப் கோப்பையில் இது வரை ஐந்து முறை இதே மாதிரி நடந்துள்ளது, “Led” பொறுத்தப்பட்ட பைல்ஸ் தான் காரணமா என ஒரு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவைப் போலவே முதலில் பொறுமையாக விளையாடிய ஆஸி அணி, பத்தாவது ஓவரில் அதிரடியாக விளையாடி 19 ரன்களைக் குவித்தது.

ஒருப்புறம் பிஞ்ச் அதிரடியாக விளையாடினாலும், வார்னர் வழக்கதிற்கு மாறாக ரொம்பவே டாட் பால் ஆடினார். பைல்ஸ் விழாதது நம்ம நன்மைக்கே என இந்திய வீரர்கள் நினைக்கிற அளவிற்கு அவர் ஆட்டமிருந்தது.

இரண்டாவது ரன்னிற்கு ஆசைப்பட்டு ஓட, பிஞ்ச் தன் விக்கெட்டை இழந்தார். மூன்றாம் நடுவர் தீர்ப்பு வரைக்கும் காத்திருக்காமல், பெவிலியன் திரும்பிய பிஞ்ச், சுவற்றில் பேட்டை அடித்து தன் கோவத்தைத் தீர்த்துக் கொண்டார்.

ஸ்மித் களமிறங்க, “Sand paper” ஜோடியான இருவரும் அணியை மீட்க பொறுப்பாக ஆட ஆரம்பித்தனர். முன்னதாக இந்திய அணியின் பேட்டிங் போது, இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை இந்த “Sand paper “விவகரத்தை வைத்து கேலி பண்ணி கோஷம் போட, பேட்டிங்கில் இருந்த கோலி அவர்களைக் கண்டித்தார்.

பொறுமையாக ஆடின வார்னர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கவ்ஜா தன் பங்கிற்கு 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வேல், தொடங்கம் முதலே அதிரடியை ஆரம்பித்தார். அடுத்த இரண்டு ஓவரில் முறையே 15,13 ரன்களைச் சேர்க்க, மேட்ச் கொஞ்சம் போல் ஆஸி பக்கம் சாய்ந்தது.

ஆனால் அடுத்த ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், ஸ்மித்தை LBW முறையில் வீழ்த்தினார், நடுவுர் அவுட்டை மறுக்க, ரெவ்யூ மூலமாக ஸ்மித் விக்கெட்டைக் கைபற்றினார் புவனேஷ்வர், அதே ஓவரில் ஸ்டேனைஸ்ஸைப் பூஜ்ஜியத்திற்கு வீழ்த்தினார்.

அடுத்த சாஹல் ஓவரில் மேக்ஸ்வேல் அவுட்டாக, ஆஸியின் கனவு தகர ஆரம்பித்தது . ஆஸி விக்கெட் கீப்பர் கேர்ரி கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார், வருட தொடக்கத்தில் மொகலியில் நடந்த இந்தியா -ஆஸி ஒரு நாள் தொடரில் கடைசி போட்டியில், தோல்வியின் விளிம்பிலிருந்த ஆஸியை வெற்றி பெறச் செய்ததில் கேர்ரி பங்கும் இருந்தது. ஆனால், இந்த முறை மறுமுனையில் வீரர்கள் யாரும் உறுதுணையாக இல்லாத காரணத்தில், தன் அரை சதத்துடன் திருப்தி பட்டுக்கொண்டார்.

கடைசிப் பந்தில் கடைசி விக்கெட்டை இழந்த ஆஸி அணி 316 ரன்களை மட்டுமே குவித்திருக்க, இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்தியா அடுத்தது, விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி வலுவாக இருக்கும் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்