Search

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

Jemmima Vaathu

மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும் வரபிரசாதம். ஒரு மொழிபெயர்ப்பினைப் படிக்கிறோம் என்ற அயற்சியைத் தராமல் நேரடி தமிழ்க் கதையைப் படிப்பது போல் உள்ளது சிறப்பு. 

1866 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவரது வயதினையொத்த சிறுவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. பிராணிகளை வளர்ப்பது தான் அவரது முன் இருந்த ஒரே பொழுதுபோக்கு. இங்கிலாந்தில் பிறந்த அவரது விடுமுறைக் காலம் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்காட்லாந்தில் கழிந்தது. இத்தகைய சூழலில் வளர்ந்தவர், பின்னாளில் ‘ஹெர்ட்விக் ஆடு’ உற்பத்தியாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாத்து, முயல், எலி, அணில், ஆந்தை, முள்ளம்பன்றி என நூலில் உள்ள ஏழு கதைகளிலும் நாயகர்கள் பிராணிகளே! அவை தானே ப்யாட்ரிகஸின் தோழர்கள்? பிராணிகளைக் கதாபாத்திரமாகக் கொண்ட கதைகள் அல்ல. பிராணிகளின் வாழ்க்கையோடு இயைந்த கதைகள். உதாரணத்திற்கு, ஜெமீமா வாத்துக்கு தன் முட்டைகளைத் தானே அடைகாக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக அது மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றியது நூலின் முதல்கதை.

அடுத்த கதை முயல்களைப் பற்றியது. வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பீட்டர் ரேபிட் என்ற படம் இக்கதைகளில் இருந்தே தழுவப்பட்டுள்ளது. பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் குறும்புக்கார முயல், அதன் மாமா மகன் பெஞ்சமின், பீட்டரின் தங்கை ஃப்ளாப்சியின் குடும்பம் பற்றி என முயல்களைப் பற்றி மட்டுமே மூன்று கதைகள். இந்தக் கதைகளைப் படித்துவிட்டு அப்படத்தினைப் பார்த்தால், பீட்டர் ரேபிட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக மாறிவிடும் என்பது திண்ணம்.

Sasi Maries‘சுத்தக்கார டிட்டில்’ என்பது திருமதி டிட்டில் எனும் எலியைப் பற்றிய கதை. தனது இருப்பிடத்தை, அதாவது எலி வளையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அது படும்பாடுதான் இக்கதை. ஆனால், பாவம்! அப்படிச் சுத்தமாக வைத்திருப்பதற்குத்தான் எத்தனை சோதனை எலிக்கு?

விடுகதை போடும் நட்கின் அணிலுக்கும், ப்ரவுன் ஆந்தைக்கும் இடையேயான மெளன உரையாடல் தான் நூலின் அடுத்த கதை. ஆந்தை வசிக்கும் தீவு பற்றிய வர்ணனை, மிதவைகளில் அணில்கள் மேற்கொள்ளும் பயணம், ஆந்தைக்குக் கொண்டு செல்லும் பரிசுப் பொருட்கள் என இந்தக் கதையில் விரியும் விஷூவல் மிக அருமையாக உள்ளது. அக்கதையின் மீதான ரசனையைக் கூட்டும் விதத்தில் அற்புதமாக உள்ளன ஓவியர் சசி மாரீஸின் படங்கள். ஸ்பைரல் பைண்டிங்க் பதிப்பில், இரண்டு பக்கத்துக்கு நீளும் படங்கள் வெட்டுப்படுவது ஒரு முழுமையைத் தரத் தவறிவிடுகிறது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம் போல், இப்புத்தகமும் இரு வேறு பதிப்பாகக் கிடைக்கின்றன.

ஒரு பண்ணையில் வாழும் குட்டிப்பெண் லூசியின் கைக்குட்டை தொலைந்து விடுகிறது. டாபி பூனை, ஹென்னிபென்னி கோழி, ராபின் பறவை, திக்கிவிங்கிள் எனும் சிறிய உருவம் கொண்ட பிராணி எனப் பலரிடம் தனது கைக்குட்டையைப் பற்றி விசாரிக்கிறாள். லூசியின் தேடுதல் பயணத்தில், அவள் கடக்கும் இயற்கைக் காட்சிகளின் வர்ணனையைப் படிக்கப் பெரும் மகிழ்வைத் தருகின்றன. மலையில் இருந்து அடிவாரத்தில் இருக்கும் பண்ணை அவளுக்கு எப்படித் தெரிந்தது, மலையின் மேல் வரும் நீரூற்று, புற்கள், பாறைகள் என இயற்கையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் ப்யாட்ரிக்ஸ். சிறுவர்களின் மனோ உலகத்தில் இயற்கையின் அழகு வண்ணமயமாக மலரும். இந்தக் கதையின் முடிவில் வரும் லூசியின் மகிழ்ச்சியான முகமுள்ள படத்தோடு கதையை முடிப்பது மனதிற்கு நிறைவான குதூகலத்தைத் தருகிறது. அதே போல், பச்சை நிறப் பின்னணியில், கைக்குட்டையைத் தலையில் அணிந்த பாந்தமான ஜெமீமா வாத்தும் அதன் குஞ்சுகளும் அடங்கிய முகப்பு அட்டை மனதை வசீகரிக்கிறது.

பிராணிகளையும் இயற்கையின் எழிலாகவும் கொடையாகவுமே நோக்குகிறார் ப்யாட்ரிக்ஸ். பிராணிகளோடு இயற்கையும் ஒரு பாத்திரமாகக் கதைகளில் வருவதைக் கவனிக்கலாம். பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வந்த திருப்தியை இந்நூல் அளிக்கிறது. பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு அலாதியானது. அத்தகையதொரு அலாதியான அனுபவத்தை சரவணன் பார்த்தசாரதியின் இந்நூல் சிறுவர்களுக்கு நிச்சயமாகத் தரும்.

பி.கு.: புத்தகத்தின் விலை 60/-. ஆனால் ஸ்பைரல் பைண்டிங்கில், ‘வானம் பதிப்பகம்’ கொண்டு வந்துள்ள Gifted version ‘ஜெமீமா வாத்து’ ஈர்க்கும் வகையில் உள்ளது. பரிசுப் பதிப்பான அதன் விலை 120/-.

வானம் பதிப்பகம் – 9176549991

– தினேஷ் ராம்