Search

பீட்டர் ரேபிட் விமர்சனம்

Peter Rabbit movie review

பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட்.

துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள்.

தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும் தாமஸுக்கும் மலரும் காதலைப் பொறுக்க முடியாமல் தவிக்கிறது. தாமஸின் மீதான ப்யாவின் நல் அபிப்ராயத்தைச் சிதைத்து இருவரையும் பிரித்து விடுகிறது பீட்டர் ரேபிட். ஒரு முயல் எப்படி மனிதர்களின் காதலைப் பிரித்தது, பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மிக ஜாலியான கதை.

அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டாத நேர்க்கோட்டில் செல்லும் சிம்பிளான கதை. படத்தின் நீளம் 95 நிமிடங்கள் தான். அதற்குள் பார்வையாளர்களை மிகவும் கலகலப்பாக்கிச் சுபமாய்ப் படத்தை முடிக்கின்றனர். பீட்டர் ரேபிட்டும், அதன் தங்கைகள் ஃப்ளாப்சி, மாப்சி, காட்டண்டெயில், அவர்களின் மாமா மகன் பெஞ்சமின் என ஐவர் அணி படம் முழுவதும் அதகளம் செய்கிறது. மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மெக் க்ரேகரின் வீட்டில் பார்ட்டி செய்வது, ‘ஒன்னே ஒன்னு!’ எனச் சொல்லிவிட்டு முழு உணவையும் கபளீகரம் செய்யும் அழகான பண்ணி, வண்டியின் ஹெட்லைஸைப் பார்த்தால் நிற்கும் மான், பறவைகள், நரி, தாமஸ் மெக் க்ரேகரைக் கதறவிடும் காட்சி எனப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

‘அன்பைப் பகிர்வதால் குறையாது’ என்ற மெஸ்சேஜும் படத்தின் உண்டு. பொசஸிவ்னெஸ் என்பது குழந்தைகளிடம் மிகுந்த விட்ட சூழலில், அதை எடுத்துரைத்துக் களைவதற்கான அம்சத்தைக் கொண்டுள்ளது படம். பீட்டர் ரேபிட் அப்பழுக்கற்ற குற்றங்குறை இல்லாப் பாத்திரம் கிடையாது. ஆனாலும் பார்வையாளர்களுக்கு அதன் குறும்பும் சாகசமும் மிகவும் பிடித்துப் போகும்.

படத்தின் பிரதான கதாபாத்திற்கு ப்யா எனப் பெயரிட்டு, எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர்க்கு (1866 – 1943) அழகான ட்ரிப்யூட் செய்துள்ளார் இயக்குநர் வில் க்ளக். அவர் வாழ்ந்த லேக் டிஸ்ட்ரிக்ட் எனும் இடத்திலேயே தான் கதையும் நிகழ்கிறது. மேலும், ப்யாட்ரிக்ஸ் போலவே படத்தில் வரும் ப்யாவும் ஓர் ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்யாவின் நவீன ஓவியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு தாமஸ் மெக் க்ரேகர் வழியும் காட்சி கூடப் படத்தில் அழகாய் இருக்கும். ‘இது முயல்களின் தோட்டம். அவற்றை அனுமதியுங்கள்’ என தாமஸிடம் ப்யா சொல்வதில் தான் படத்தின் ஜீவனே அடங்கியுள்ளது. ப்யாட்ரிகஸ் பாட்டர் தன் எழுத்துகளில் அதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறார்.

50 மில்லியன் டாலர்கள் பொருட்செலவில் உருவான இப்படம், அதை விட ஐந்து மடங்கு அதிக வசூலைப் பெற்று அசத்தி வருகிறது. எக்ஸாம் முடிந்து விட்ட சுட்டீஸ்களுடன் கண்டு மகிழ ஏற்ற படம்.

பி.கு.: பீட்டர் ரேபிட்டின் குறும்புகளைப் பற்றி எழுத்தாளர் ப்யாட்ரிகஸ் பாட்டர் எழுதிய புனைவுகளை சரவணன் பார்த்தசாரதி தமிழில் மொழிபெயர்க்க, ஜெமீமா வாத்து எனும் பெயரில் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.