Shadow

ஜீவி – 2 விமர்சனம்

தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி ஆகியவற்றை மையக்கருவாகக் கொண்ட படம் ‘ஜீவி’. அப்படத்தின் இரண்டாம் ஆஹாவில் நேரடியாக வெளியாகியுள்ளது.

முந்தைய பாகத்தில், தொடர்பியலைத் தெரிந்து கொள்வாரே அன்றி மையப்புள்ளியை அடையமாட்டார் நாயகன். ஆனால், முதற்பாகத்தின் வெற்றிக்குக் காரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குக் கிடைக்கும் நீதி தரும் ஆத்ம திருப்தியே!

இந்தப் பாகத்தில், குடும்பச்சூழல் காரணமாக நாயகன் மீண்டும் திருடுகிறான் சரவணன். அதையொட்டி, தொடர்பியலின் காரணமாக, சரவணனைச் சுற்றி நடப்பவை அனைத்தும் தவறாகிறது. மையப்புள்ளியைக் கண்டடைந்தால் தான், இதை நிறுத்த முடியுமென உணருகிறான் சரவணன். மையபுள்ளியை எப்படி சரவணன் கண்டடைந்தான் என்பதே படத்தின் கதை.

போலீஸ் அதிகாரி ஆதில் மொஹமத்தாக, நாசரின் தம்பி ஜவஹர் நடித்துள்ளார். மலையாள நடிகர் அனில் முரளிக்கு மாற்றாக இவர் நல்ல தேர்வாக அமைந்துள்ளார். நாயகன் வெற்றிக்கும், கருணாகரனுக்கும், ஹரி என்ற நண்பனாக முபாஷிர் நடித்துள்ளார். எதைப் பற்றியும் அக்கறையில்லாத பணக்கார இளைஞனாக அவரும் சிறப்பாக நடித்துள்ளார்.

ரோஹினிக்கும், அவரது மகளாக வரும் அஷ்வினியும், எல்லா வகையிலும் முந்தைய பாகத்தின் நீட்சியாக வருகின்றனர். விதிக்கும் கர்மாக்கும் பயப்படுபவராகக் கருணாகரன் நடித்துள்ளார்.

சரவணனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பில் அபாரமான மாற்றத்தை உணர முடிகிறது. படத்தின் ஓட்டம் முதல் பாகத்தின் பிளஸ், அதில் சரவணின் பாத்திரம் பொருந்திக் கொண்டது. இப்பாகத்திலோ, தானேற்ற கதாபாத்திரத்தின் மூலம் படத்தைச் சுமந்துள்ளார் வெற்றி. சின்ன சின்ன உணர்ச்சிகளையும் தக்க இடத்தில் வெளிப்படுத்தும் அளவு அவரது நடிப்பு மெருகேறியுள்ளது.

ஜீவி படத்தின் கதாசிரியர் பிஸியாகி விட, இயக்குநர் VJ கோபிநாத்தே திரைக்கதை எழுதியுள்ளார். முந்தைய பாகத்தின் அளித்த எதிர்பார்ப்பைச் சிதைக்காமல், அதன் ஆன்மாவும் கெடாமல், நல்லதொரு த்ரில்லராகத் திரைக்கதை அமைத்துள்ளார். அதையும் அவர் இரண்டே நாட்களில் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாதியில் ஓர் அவசரம் தெரிகிறது. வேகவேகமாகப் படம் முடிவது போல் ஓர் எண்ணத்தைத் தருகின்றது. என்றாலும், முதல் பாகத்தினைப் போலவே நிறைவாக முடிகிறது.