Shadow

மேதகு – 2 விமர்சனம்

மேதகு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மேதகு எனும் சங்கச்சொல்லுக்கு, மேன்மையான, மேன்மை பொருந்திய எனப் பொருள் கொள்ளலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன், மேன்மை பொருந்திய ஒப்பற்ற தலைவர் என்பதைச் சுட்டவே மேதகு எனத் தலைப்பிட்டிருந்தார் இயக்குநர் தி. கிட்டு. அப்படத்தின் தொடர்ச்சியாக, மேதகு 2 படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்கியுள்ளார்.

முதற்பாகமான மேதகு, 2021 ஆம் ஆண்டு ஜூன் 25 இல், ஓடிடி தளமான BS Value இல் வெளியானது. இலங்கையில், தமிழர்களுகளுக்கான விடுதலைப் போராட்டத்திற்கான தேவை ஏன் எழுந்தது பற்றியும், சிங்களப் பேரினவாதம், பிரபாகரன் எனும் சிறுவனின் மனதை எப்படிப் பாதித்தது பற்றியும், எந்தப் புள்ளியில் அவர் பேரினவாதத்தை எதிர்க்க முடிவெடுக்கிறார் என்பது பற்றியும், அந்தப் படம் அடித்தளம் இட்டிருந்தது. பிரபாகரனின் 21 வயது வரையிலான சுயசரிதப் படமாக அது அமைந்திருந்தது. பிரபாகரன், தமிழினத் துரோகியான துரையப்பாவைச் சுட்டுக் கொன்று விட, அவரையும் அவரது நண்பர்களையும் சிங்கள அரசு தேடத் தொடங்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவாவதோடு முதல் பகுதி முடிந்தது. கூத்துக் கலைஞரின் மகனான இயக்குநர் தி. கிட்டு, கூத்தின் பின்னணியில் அப்படத்தை மிக அற்புதமாக எடுத்திருந்தார்.

பிரபாகரனின் அடுத்த 12 வருடப் போராட்டப் பயணத்தைப் பற்றி, மேதகு 2 படத்தில் சொல்லியுள்ளார் இயக்குநர் இரா.கோ.யோகேந்திரன். வில்லுப்பாட்டுப் பின்னணியில், பிரபாகரனின் கதையைத் தொடங்கியுள்ளார். நேரடியாகக் கதைக்குள் சொல்லாமல், சில மாணவர்கள் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முட்டாரம் என்ற அருங்காட்சியத்திற்குச் செல்வதாகவும், அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில் வில்லுப்பாட்டு பாடுவதற்காகப் பிரபாகரனைப் பற்றித் தெரிந்து கொள்வதாகவும், அதற்கு அருங்காட்சியத்தில் பணி புரியும் நாசர் உதவுவதாகவும், தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுள்ளனர். இந்தத் தலை சுற்றும் பின்னணியைப் படத்தின் சீரியஸ்னஸைக் கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்கிறது. நாசர் அத்தியாயம் படத்தின் விளம்பரத்திற்கு உதவுமென உபயோகித்திருப்பார்கள் போல! பிரபாகரனுக்கு ஏன் விளம்பரம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் சாயலை ஒத்திருக்கும் கெளரிசங்கர், பிரபாகரனாக நடித்துள்ளார்.

மேதகு – 2 ட்ரெய்லர்

படத்தின் ஓட்டம் சற்று ஆவணத்தன்மையோடு இருக்கிறது. புலவர் கலியபெருமாள், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பழ. நெடுமாறன், புதுக்கோட்டை பாவண்ணன், வைகோ ஆகியோர் புலிகள் இயக்கத்துக்கு அளித்த ஆதரவைப் பதிந்துள்ளனர். களத்தை விட்டுவிட்டு, களத்திற்கு வெளியே தமிழகத்தில் யார் யார் ஆதரவு கொடுத்தார்கள் என திரைக்கதை நகர்கிறது. ஆயுதங்கள் வாங்க எம்ஜியார் பண உதவி செய்த்தைப் பதிந்தவர்கள், ஒரு ஃபோன் காலில் கஸ்டம்ஸில் இருந்து அவ்வாயுதங்களை அவரது வீட்டிற்கே கொண்டு வர உதவியதையும் சொல்லியிருக்கலாம். களத்தில் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டது என்பதையும் வசனங்களாகக் கடந்து விடுவதால், படம் பார்த்த திருப்தியை நல்கத் தவறிவிடுகிறது.

ராஜீவ்காந்தி அரசின் நிர்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளாதது, தமிழீழம் குறித்த இந்திரா காந்தியின் பார்வை முதலிய அரசியலினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குநர். 1981 ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம், 1983 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடை பெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் பதிவு செய்துள்ளனர். குழந்தைகளுடன் பார்க்க உகந்த படமில்லை.

‘மேதகு திரைக்களம்’ சார்பில் க்ரெளவுட் ஃபண்டிங் முறையில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நேரிடுமென்பதால், படத்தைத் திரையரங்குகளில் வெளியிடும் எண்ணத்தைத் தவிர்த்து, TamilsOTT தளத்தில் வெளியிடவுள்ளனர். தமிழர்கள் அதிகம் வாழும் சில நாடுகளில் மட்டும், இப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

(மேதகு திரைப்படங்களின் இரண்டு பாகமும் இப்பொழுது www.moviewood.io ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றன.)