Shadow

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் ‘விஜயானந்த்’ ஆகும். ‘ட்ரங்க்’ எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். ‘ஸ்கெட்ச்’ படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசன் சாகுந்தலா’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடல் கோபி சுந்தர் இசையில், பாடலாசிரியர் மதுர கவி எழுத, பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் வெளியிட்டு விழா பெங்களூரில் உள்ள பிரபலமான ஓரியன் மால் எனப்படும் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.