Shadow

கைதி விமர்சனம்

Kaithi-movie-review

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை மீட்க ஒரு குழு கமிஷ்ணர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது; போதையூட்டப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை லாரியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியான பிஜோய், லாரி ஓட்டக்கூடிய டில்லி எனும் சிறையில் இருந்து விடுதலையான நபரின் உதவியை நாடுகிறார்; அந்த லாரியில் இருக்கும் 5 அதிகாரிகளை மட்டும் கொல்ல பல குழுக்கள் வட்டமிடுகின்றன.

கதாநாயகி இல்லாத படம்; அதனால் டூயட்டும் இல்லை; ஓரிரவில் நடக்கும் கதை என வழக்கமான படத்திலிருந்து மிக ஃப்ரெஷான மேக்கிங்கில் கவர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், மீடியாவிற்குச் செய்தி கசிந்துவிடும் என அஞ்சி கமிஷ்ணர் ஆஃபீஸைப் பாதுகாக்க பேட்டலியனின் உதவியை நாட மாட்டேங்கிறார் பிஜோய் என கதை விட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. போலீஸ் என்ன சொல்லுகிறதோ அது தானே செய்தி? இரவில் எமர்ஜென்சிக்குப் பத்திருபது காவலர்களைக் கூட கமிஷ்ணர் ஆஃபீஸ்க்கு வர வைக்க முடியாது என்பது நம்பும்படியாக இல்லை. குறிப்பாக, கமிஷ்ணர் அலுவலகத்தில் காவலுக்கென்று கூட வாசலருகே யாருமில்லாமல், கன்ட்ரோல் ரூமில் மட்டும் மூன்றே மூன்று அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களும் ஓடி விடுவதும் அநியாயக் கற்பனை. அதனை அழகாக மறைக்க உதவுகிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். எல்லா ஃப்ரேம்களுமே இரவுக்காட்சிகள். நேர்த்தியான ஒளிக்கலவைகளாலும், கேமெரா கோணங்களாலும் படத்தைத் தன் தோளில் தாங்கியுள்ளார்.

கமிஷ்ணர் ஆஃபீஸில் புகுந்து போதைப் பொருளை மீட்கத் துணிபவர்கள், குறைந்தபட்சம் தங்கள் முகங்களைக் கூட மறைத்துக் கொள்ள முற்படவில்லை. கமிஷ்ணர் ஆஃபீசில் சிசிடிவி கேமெராவும் இல்லை. மரத்திலேறி உள்ளே புகுந்து விடும் அன்பு கூட, வந்த வேலையை விட்டு விட்டு, போதை மருந்தை உட்கொண்டு ஹீரோயிசம் காட்டுகிறார். எத்தனை பேர் வந்தாலும் அடிக்கும் சூப்பர் ஹீரோ நாயகனாக கார்த்தி நடித்துள்ளார். முதுகில் இருமுறை பலமாகக் குத்தப்பட்டும், முகத்தில் கற்களால் பலமுறை தாக்கப்பட்டும், அவர் அதனாலெல்லாம் பாதிப்படையாமல் அத்தனை பேரையும் அடி வெளுக்கிறார். முதல் முறை லாரியில் இருந்து இறங்கிச் சண்டையிடும் பொழுது ஏற்பட்ட சிலிர்ப்பு, அதன் பின் காணாமல் போகிறது. ஆனால், படம் கடைசி வரை என்கேஜிங்காக இருந்தது. குறிப்பாக கார்த்திக்கிற்கும், அவரது மகளுக்குமான எமோஷ்னல் அத்தியாயம் செம்மையாக இருந்தது.

லாரி ஓனர் காமாட்சியாக வரும் தீனாவின் பேச்சு படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளது. அவரது மற்ற படங்களை விட, இப்படத்தில் அவரது கதாபாத்திரம் கச்சிதமாகப் பொருந்திப் போயுள்ளது. படத்தில் கார்த்தியோடு சேர்த்து இரண்டு கதாநாயகர்கள். ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரி பிஜோயாக வரும் நரேனும், கமிஷ்ணர் அலுவலகத்தில் ஒற்றைக் காவலதிகாரி நெப்போலியனாக மாட்டிக் கொள்ளும்ம் ஜார்ஜ் மரியானும். தனி ஒருவராய்க் கூட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகிவிடும் ஜார்ஜ் மரியானுக்கு வைக்கப்பட்டிருக்கும் நிழற்பிம்பம் (Silhouette) ஷாட் செம மாஸ். வண்டியின் பின்னால் ஏறுபவர்களை லாரி கேபினிலிருந்து நரேன் சுடும் பொழுது, பின்னாலிருக்கும் கருப்பாடான போலீஸ் அதிகாரி நரேனின் கையைப் பிடித்துச் சுட விடாமல் செய்கிறார். யார் தன்னைச் சுட விடாமல் தடுத்தது என நரேன் கண்டுகொள்ளாதது திரைக்கதையில் உள்ள பெரிய ஓட்டை.

படம் பார்த்து முடித்ததும் மாநகரம் போல் இப்படம் ஒரு நிறைவினை ஏற்படுத்தவில்லை. இரவு சண்டைக் காட்சிகளே பிரதானம் என்பதால், ஆக்‌ஷன் ஜானர் படமென்பதாலும் அந்த நிறைவு மிஸ்ஸாகிறது.