Shadow

காகித கப்பல் விமர்சனம்

Kakitha Kappal vimarsanam

‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி.

அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் பொழுது அவமானப்படும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. தான் விசாரணைக்குப் போயிட்டு வந்தது குறித்து தன்னிடம் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் பொழுது மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார். அவரது கணக்குப்பிள்ளையாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசனும், சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரத்தில் நிறைவாகத் தோன்றியுள்ளார்.

அப்புக்குட்டிக்கு ஜோடியாக டில்லிஜா அறிமுகமாகியுள்ளார். சிறைக்குச் சென்ற தந்தையால், ஒரு மகளுக்கு எத்தகைய தர்ம சங்கடங்கள் நேரும் என்பதை தன் நடிப்பின் மூலம் பிரதிபலித்துள்ளார். வக்கீல் தகாத முறையில் வழியும் பொழுது, அதைப் பார்த்தும் அவரது தாய் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பதை நினைத்து மிகவும் எரிச்சலுறுகிறார் டில்லிஜா. கதையின் நாயகியாகக் கண்ணை உறுத்தாமல், படித்த பட்டதாரி பெண் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார் டில்லிஜா.

படத்தின் முதல் பாதி, நிதானமாகவும் கோர்வையாகவும் ஒரு தெளிந்த நீரோடை போல் பயணிக்கிறது. யூகிக்க முடிந்த கதை தான் என்றாலும், திரைக்கதையின் நிதானம் நமது பொறுமையைச் சோதிக்கவில்லை. இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கரின் வரவிற்குப் பின், ஒரு மெல்லிய சுணக்கம் ஏற்படுகிறது படத்தின் நிதானமான ஓட்டத்தில். படத்தில், ஓர் இயக்குநராக அவர் வருகிறார். அதற்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, ‘சினிமா நல்ல தொழில்தான்’ எனக் கூறிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

‘ஒரு களிமண்ணையும் நடிக்க வைப்பது தான் இயக்குநரின் திறமை’ என ஜம்பமாகப் படத்தைத் தொடங்கி விடுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். தனது வீண் ஜம்பம் பலிக்காததை எண்ணி அவர் கலங்கும் காட்சி நன்றாக உள்ளது. ஆசையோடு படம் தொடங்கி, பப்படம் ஆகும் பல படங்களின் நிலை ஏன் அப்படி ஆனதென அந்தக் காட்சியின் மூலமாக உணர முடிகிறது. தனது படத்திற்கு அவர் வைத்திருக்கும் பெயர் ‘எதிர்பாராதது அல்லது எதுவும் நம் கையில் இல்லை’. படத்தின் நிலையும் அதுதான். நிதானமான முதல் பாதியில் இருந்து, எதிர்பாராததை இரண்டாம் பாதியாக்கிக் கவிழ்த்து விடுகிறார் இயக்குநர் S.சிவராமன். இரண்டாம் பாதியின் எதிர்பாராத அலையால், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய காகித கப்பல் அம்போவென மூழ்கிவிடுகிறது.