
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள் இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பிரதான ஜோடிகளான ஜீவா – கேத்தரீன் தெரசா, ஜெய் – நிக்கி கல்ராணி அறிமுகப் படலம் முடிந்து, காதல் அத்தியாயம் தொடங்கும் வரை வழக்கமான ஜோரில் போகும் படம், சிவாவின் அறிமுகத்திற்குப் பின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. சதீஷ், ரோபோ சங்கர், மனோ பாலா, சந்தான பாரதி, விடிவி கணேஷ், ஜார்ஜ், சிங்கமுத்து, யோகி பாபு, முனீஷ்காந்த் என நடிகர்களை வரிசையாகக் களமிறக்கிப் பார்வையாளர்களை ஒரு வழி பண்ணி விடுகிறார்.
நித்தியானந்தர் போல் அமர்க்களமாக அறிமுகமாகும் யோகிபாபு, இடையில் வரும் காட்சிகளில் லேசாகச் சுருதி குறைந்தாற்போல் மங்கி விடுகிறார். ஆனால், இரயில்வே ஸ்டேஷனில் வைத்து மதுசூதன் ராவை யோகிபாபு பழிவாங்கும் காட்சி அட்டகாசம். படத்தில் மொத்து வாங்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவு அனைவருமும் யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு, ராதாரவி ஜார்ஜிடம் சிக்கி அல்லல்படும் காட்சியைச் சொல்லலாம்.
எல்லாவற்றையும் மறந்து இரண்டரை மணி நேரம் ஜாலியாகச் சிரிக்க உத்திரவாதம் அளித்துள்ளார் சுந்தர்.சி. தனது படங்களில் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்து சொல்லி அடித்துள்ளார்.