முழு நீள பிளாக்-காமெடி படமாகச் சிரிக்க வைக்கிறது சவரக்கத்தி. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் மிஷ்கினின் தம்பி G.R.ஆதித்யா.
முடி திருத்துபவரான பிச்சை தனது குடும்பத்துடன் ராஜ்தூதில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர்களைப் பரோலில் வந்த மங்கா எனும் கொலையாளியின் கருப்பு ஸ்கார்பியோ லேசாய்த் தட்டி விடுகிறது. பிச்சை தனது குடும்பத்தினர் முன் பந்தாவாக ஸ்கார்பியோவில் வந்தவர்களை வம்புக்கு இழுத்து விடுகிறார். கிறுக்கனான மங்கா, பிச்சையைக் கொன்றே தீர்வதென அவரைத் தேடுகிறார். பிச்சை மங்காவிடம் சிக்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஒரே நாளில் நிகழும் படம். மிக எளிமையான ஒரு வரிக் கதை. ஒருவன் கொல்லத் துரத்துகிறான்; மற்றொருவன் தப்பிக்கப் பார்க்கிறான். பயந்து ஓடும் பிச்சைக்கு, காது கேளாத கர்ப்பிணி மனைவியும் இரண்டு அழகான குழந்தைகளும் உள்ளனர். பிச்சையாக இயக்குநர் ராம் நடித்துள்ளார். ஒரு மிடில் கிளாஸ்க்கான அவஸ்தையை இயல்பாய்ப் பிரதிபலிக்கத் தவறுவதோடு அதீதமாயும் நடித்துள்ளார். படத்தில் இயல்புத்தன்மை என்பதே சுத்தமாக இல்லை. அனைவரும் மிஷ்கனால் வார்க்கப்பட்ட காமிக்கல் பாத்திரங்களாகவே உள்ளனர். பூர்ணாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. எவருமே வசனங்களை இயல்பாகப் பேசுவதில்லை. நகைச்சுவை அதுவாக நிகழாமல் அதை வலிந்து கொண்டு வந்துள்ளனர்.
கிறுக்கன் முரடன் மங்காவாக மிஷ்கின் அசத்தியுள்ளார். படத்தின் முரணான சிறப்பு என்னவெனில், அன்றாடம் நாம் பார்க்கக் கூடிய மனிதர்கள் எல்லாம் இயல்பற்றவர்களாய்த் தெரிகின்றனர். அனைத்துப் பாத்திரங்களும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான ரியாக்ஷன் தருவதால் எக்கதாபாத்திரமும் தங்கள் பிரத்தியேக குணங்களோடு மனதில் நிற்பதில்லை. ஆனால் இயல்பற்ற பாத்திரத்தில் கிறுக்குத்தனமாய் வரும் மிஷ்கினின் இயல்பு அதுதான் எனச் சுலபமாய் ஏற்க இயலுகிறது (அதற்கு அவர் இயக்கிய படங்கள் மூலம் அவர் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் காரணமாக இருக்கலாம்). மங்கா எனும் கதாபாத்திரத்திற்கு மிஷ்கின் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். எந்நேரத்தில் என்ன செய்வாரென யூகிக்க முடியாத மங்கா பாத்திரத்தில் மனிதம் அடிக்கடி எட்டிப் பார்க்கும். “நீ ரொம்ப பேசிட்ட. அவளை (கர்ப்பிணிப் பெண்) ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போ” எனும் பொழுது மிஷ்கின் ரசிக்க வைக்கிறார். கொஞ்சம் சைக்கோத்தனம் நிறைந்த அந்தப் பாத்திரத்தை மிஷ்கின் மிக என்ஜாய் பண்ணிச் செய்துள்ளார். ஆனால், அதற்காக அவருடன் இருப்பவர்களும் அதே போலே கத்துவது பேசுவது என்பது கடியாய் உள்ளது. ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராகக் குறுக்கே நெடுகே நடந்து கொண்டிருந்த எழுத்தாளர் ஷாஜி, இரண்டு காட்சிகளில் வந்தாலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார்.
திரைக்கதை எழுதித் தயாரித்துள்ளார் மிஷ்கின். முழு நீள காமெடிக்கு உத்திரவாதம் அளித்திருந்தாலும், மிஷ்கினின் மேஜிக் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே பளிச்சிடுகிறது. ‘டைம் ஆயிச்சு வா போலாம்’ என மிஷ்கின் சட்டென க்ளைமேக்சில் நடையைக் கட்டினாலும், டீக்கடையில் அழுது கொண்டிருக்கும் ராமின் தலையைத் தொட்டு டீ போடும் மாஸ்டர் ஆறுதல் அளிக்கும் காட்சியில் மனதோடு நின்று விடுகிறார்.