Shadow

களம் நாவல் விமர்சனம்

Kalam-review

களம். அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக இராஜேஷ் ஜெயப்பிரகாசம் அவர்கள் எழுதிய நாவல் இது. கிரிக்கெட்டையும் சினிமாவையும் மையமாக வைத்து எழுதப்பட்ட க்ரைம் த்ரில்லர். இந்த நாவல் குறித்தான பல்வேறு விளம்பரக் குறிப்புகளிலும் அவ்வாறுதான் சொல்லப்பட்டிருந்தது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழில் வெகுசில நாவல்களே வெளிவந்துள்ளன. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ‘லேடீஸ் ஹாஸ்டல்’, பட்டுக்கோட்டை பிரபாகரின் இரு க்ரைம் நாவல்கள், வெ.த.புகழேந்தியின் ‘வீணையடி நீ எனக்கு’ போன்றவை சில முக்கியமான நாவல்கள்.

இது தவிர சில குடும்ப நாவல்கள் கூட இதில் அடக்கம். ஆனால் எனக்குத் தெரிந்து இவை வெறுமனே ஹீரோ ஒரு கிரிக்கெட் வீரராகக் காட்டுவதோடு நின்று விடுகின்றன. க்ரிக்கெட் அதன் முக்கியப் பிண்ணனியாக இருப்பதில்லை.

ராஜேஷின் களம் நாவல் முழுக்க முழுக்க கிரிக்கெட் பிண்ணனியில் எழுதப்பட்டிருக்கிறது. ‘சரி இதெல்லாம் ஒரு பெருமையா இதுக்காக எல்லாம் பாராட்டணுமா?’ என்றால், தேவையில்லைதான்.

ஆனால் இந்த நாவலில் பாராட்டுதலுக்குரிய சில அம்சங்கள் உள்ளன. இதை வெறுமனே சாதாரண ஒரு க்ரைம் த்ரில்லராக மட்டும் எடுத்துச் செல்லாமல், ஒரு 20 ஓவர் மேட்சைப் பார்க்கும் ஒரு அனுபவமாக ப்ரசென்ட் செய்த விஷயம் அட்டகாசமான ஒன்று. மிகக் குறிப்பாக 19 மற்றும் 20 வது ஓவர்கள் மன்னிக்க அத்தியாயங்களை முதல் பந்து, இரண்டாம் பந்து என்று சிறு சிறு பகுதிகளாகக் கதையோடு ஒட்டியே கொடுத்த முயற்சி உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்று.

போலவே, முதல்பாதி அத்தியாயங்கள் அனைத்தும் “அப்போது ரிசார்ட்டின் விளக்குகள் அணைந்தது” என்ற குறிப்புடன் முடிவதும், விசாரணை ஆரம்பித்த பின்பு அனைத்து அத்தியாயங்களும் “யாரையாவது சந்தேகப்படறீங்களா? எல்லாரையும்” என்று ஆரம்பித்து தொடரும் விதமும் சிறந்த அட்டெம்ப்ட்.

சுபாவின் ஒரு க்ரைம் நாவல் என்று நினைக்கிறேன். அதிலும் இதே போன்றதொரு டெக்னிக் கையாளப்பட்டிருக்கும். ஒரு ஹோட்டலைச் சுற்றி நடக்கும் கதை. எல்லா அத்தியாயங்களின் முடிவிலும், “சரியாக அப்போது சுவரில் விரிசல் விழுந்தது” என்பது போன்று முடிக்கப்பட்டிருக்கும். இது போன்ற சின்னச் சின்ன முயற்சிகள் ஒரு சாதாரண ஆரம்ப நிலை எழுத்தாளனின் அமெச்சூர் முயற்சியைச் சிறந்த க்ரைம் நாவலாக மாற்றி விடுகிறது.

களம் நாவல் நெடுக இது போன்ற பல்வேறு சிறுசிறு முயற்சிகள் உங்களை ரசிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

நாவலின் ஆசிரியர் அடிப்படையில் சுஜாதாவின் தீவிர ரசிகர் போலிருக்கிறது. முக்கிய விசாரணைக் காவலர்கள் இரண்டு பெயர்கள் வசந்தா – விநாயக். என்ன இதில் விநாயக் சற்றே குறும்புக்காரர். வசந்தா சீரியஸ் பார்ட்டி. இவர்கள் இருவருக்கும் மேல் அதிகாரியாக வரும் கமிஷ்ணர் பெயர் வேறு ரங்கராஜன். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் எனக்கு சங்கர்லாலையும் நினைவுபடுத்தினார். அவர்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ செய்வார் கடைசி இரண்டு அத்தியாயங்களில் குற்றவாளியை ஒரேடியாக நெருங்கி இருப்பார்.

ஒரு க்ரைம் நாவலில், ஒரு குற்றமும், விசாரணைகளும், சின்னச் சின்ன குறும்பு சீண்டல்களையும் தாண்டி வேறு என்ன இருந்து விட முடியும்? இருக்கிறது. மிக அலட்சியமாக மனித மனங்களை, அதன் குரல்களை, அதிகார வர்க்கத்தின் ஏணிப்படிகளில் இருக்கும் சின்னச் சின்ன பாவனைகளை, போலியான அலட்டல்களை அழகாகப் பேசிச் செல்கிறது இந்த நாவல். இந்த விஷயத்தில் ராஜேஷ் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகத் திகழ்கிறார் என்று சொல்லலாம்.

அதே போன்று நர்மதாவிடம் நடக்கும் விசாரணை வாவ் ரகம். ‘அவன் கிரிக்கெட் பிரபலம்னா, நான் தொழிலதிபரா பிரபலம். செய்தித்தாளின் கடைசி பக்க சினிமாவையும், அதன் முன் பக்க விளையாட்டைத் தாண்டி உனக்கு எல்லாம் என்ன தெரியும்?’ என்று சர வெடியாய் வெடிக்கும் நர்மதாவின் விசாரணை அத்தியாயம் அல்டிமேட்டான ஒன்று.

அப்போ இந்த நாவலில் குறை சொல்றதுக்கு ஒன்றுமே இல்லையா என்று கேட்டால், எனக்கு சில இருக்கின்றன. முதல் 16, 17 அத்தியாயங்களில் இருக்கின்ற டீட்டெய்லிங், என்ன காரணத்தினாலோ கடைசி சில அத்தியாயங்களில் இல்லை அதுவும் மிக முக்கியமாக குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் இடங்களிலெல்லாம். அதை ரொம்பத் தெளிவாகச் சொல்லாத காரணத்தினாலும், தவிர கதை பல்வேறு நபர்களின் மீது குற்ற பார்வையை வைத்திருந்து கதை அதிலிருந்து கொண்டு செல்லப்படுவதால் இறுதியில் யாரைத்தான் இவர்கள் குற்றவாளி என்று சொல்கிறார்கள் என்று அந்த இடத்தில் ஒரு சிறு குழப்ப உணர்வு எனக்கு ஏற்பட்டது.

ஒருவேளை நாவலை 20 அத்தியாயங்களில் முடித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த அத்தியாயங்கள் எல்லாம் எனக்கு ஏறக்குறைய ஆர்னிகா நாசர் நாவலைப் படிப்பது போன்ற ஒரு உணர்வை தந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பக்கத்துக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை சும்மாவே மூன்று வரிகளில் முடித்து விட்டாரே என்ற உணர்வைத்தான் ஆர்னிகா நாசரின் பல நாவல்கள் தரும்.

களம் நாவலின் இறுதி அத்தியாயங்கள் எனக்கு அப்படியான ஓர் உணர்வைத் தந்தது.

அதிகப்படியான கேர்க்டர்கள் வேறு சில நேரங்களில் மண்டைக்குள் கபடி ஆடுகின்றன. சில இடங்களில் யார், யாரிடம் கூறுகிறார்கள் என்ற தெளிவு இல்லை என்பது போன்று சில சின்னச் சின்னக் குறைகள் அவை.

நான் கிண்டிலில் படித்தது முதல் வெர்ஷனை. அதில் சில பிழைகள் இருந்தன. அனேகமாய் அடுத்த வெர்ஷனில் இவை சரி செய்யப்பட்டிருக்கலாம். அப்புறம் மிக முக்கியமாக இன்னும் தெளிவான, கலர்ஃபுல்லான முன் அட்டையை வடிவமைத்து அப்டேட் செய்யவும். It’s a must one to do.

https://www.amazon.in/dp/B07Y6HMK7B/ref=cm_sw_r_wa_awdb_t1_b2KHDbT0ZHTQG?fbclid=IwAR3yjyPd7R1q3eR-sIa47V8SVbifqdrXR3Jac0XDQFu-QzPm_fNtMj6bzpc

kalam-coverஅமேசான் இந்தப் போட்டியை அறிவித்தபோது சில சலசலப்புகள் எழுந்தன. ஜெயமோகனின் ஒரு காட்டமான விமர்சன கட்டுரை அதில் மிக முக்கிய ஒன்று. இவையெல்லாம் இலக்கியமா? மலின எழுத்துக்கள், பழைய பேப்பர் கடையில் போடும் தரமுடையவை போன்ற வசவுகள் அது.

இந்தப் போட்டியின் மிகச் சிறந்த அம்சமாக பார்ப்பது இப்படி ஒரு போட்டி நடக்காமல் போயிருந்தால், ராஜேஷ் ஜெயப்பிரகாசத்தினுள்ளே இருக்கும் ஒரு நாவலாசிரியர் வெளிவந்து இருக்கவே மாட்டார். அந்த வகையில் அமேசானின் இந்தப் போட்டி இப்போதே வெற்றி பெற்று விட்டது என்று நான் சொல்வேன். போட்டி காலக்கெடுவும் இன்னும் அதிகம் இருக்கிறது இவரைப் போன்று இன்னும் பல நாவலாசிரியர்கள் வெளிவரக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

ராஜேஷிடம் நான் கட்டளையாக சொல்ல விரும்புவது ஒன்று இருக்கிறது. புத்தகத்தின் முன்னட்டையைக் கிழித்துவிட்டு, க்ரைம் நாவல் வாசகர்களிடம் கொடுத்து இதற்கான விமர்சனத்தைக் கேட்டால் அவர்களில் ஒருவர் கூட இதை ஒரு அமெச்சூர் நாவல் என்று சொல்லமுடியாத அளவுக்கான திறமை உங்கள் எழுத்துக்களில் இருக்கின்றது. So don’t Stop writing. I will urge you to continue it. You can do wonders in thrillers.

– நந்தகுமார் நாகராஜன்

Image courtesy: nytimes.com