Shadow

களவாணி 2 விமர்சனம்

kalavani-2-movie-review

மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது.

இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம்.

மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈர்ப்பும் காதலும் ரசிக்கும்படியாக இல்லாமல், ஏனோதானோவென சட்டென்று மலர்ந்து விடுகிறது. படத்தின் முதற்பாகம் முழுவதுமே வலுவான கதையோட்டம் இல்லாமல், ஆடல் பாடல் என சட்சட்டென காட்சி மின்னி மறைகிறது. படத்தின் கலகலப்பிற்கு வழக்கம் போல் விக்னேஷ்காந்த் உதவவில்லை. விமலின் தோளில், படத்தின் நகைச்சுவைக்கான முழுப் பாரமும் விழுவதால், அவர் சிரமப்பட்டுத் தள்ளுகிறார். இரண்டாம் பாதியில், விக்னேஷ்காந்த் இல்லாமலே படத்தின் திரைக்கதை நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளித்துவிடுகிறது. க்ளைமேக்ஸ் நெருங்க, சுந்தர்.சி படம் போல் முழு நகைச்சுவை விருந்தினைத் தந்துவிடுகிறார் இயக்குநர் A. சற்குனம்.

பஞ்சாயத்து கதாபாத்திரத்தில் வரும் கஞ்சா கருப்பு, பருத்தி வீரன் பாணியில், விமலிடமும் விக்னேஷ்காந்திடமும் பணத்தை இழந்து கொண்டே உள்ளார். ‘பணத்தைச் செலவு பண்ணவனுக்கு வெறும் ஆறு ஓட்டுதானா?’ எனக் கேட்குமிடம் அசத்தல். மகேஸ்வரியாக மாறாமல், ஓவியாவாகவே அவர் தெரிவதால், படத்தின் சுவாரசியத்திற்கு அவர் கிஞ்சித்தும் உதவவில்லை. தனக்கு ஏன் தோசை எனப் பெயர் வந்தது என்பதற்கு மயில்சாமி சொல்லும் விளக்கம் அதகளம். இரண்டாம் பாதியில், கதையை நகர்த்தும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மயில்சாமி வருகிறார்.  ஒன்றுமில்லாததற்கு எல்லாம் ஊர் எப்படி இரண்டுபடும் எனச் சுவாரசியப்படுத்தியுள்ளனர்.

முதற்பாகம் போலவே, இளவரசு – சரண்யா பொன்வண்ணன் ஜோடி அசத்தியுள்ளனர். மகனுக்குப் பரிந்து பேசுவதாகட்டும், கணவனிடம் உரசிக் கொள்வதாகட்டும், சரண்யா பொன்வண்ணன் அசத்தியுள்ளார். ராவன்னாவாக வரும் துரை சுதாகர் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளார். பப்ளிக் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அவர் தப்பாட்டம் எனும் படத்தில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அடைமொழியைத் துறந்து, ஆனால் அவரது நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதியும், அத்தை கணவருமான ராவன்னாவை எதிர்த்து தேர்தலில் வேலை வெட்டியில்லாக் களவாணிப்பய அறிக்கி நின்றாலும், படத்தில் வில்லன் என்று யாருமில்லை. 

களவாணி படமெழுப்பும் நாஸ்டாலஜியாவுடன் படத்திற்குச் சென்றால், களவாணி 2 முழுத் திருப்தியைத் தராது. படத்தின் தயாரிப்புப் பிரச்சனைகளை சில காட்சிகளில் வெளிறலாகக் காண முடிகிறது. ஓவியாவின் தந்தையைச் சித்தப்பா என அழைத்து விமல் செல்ஃபி எடுத்துக் கொள்ளுமிடம், கவர்னருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, இறந்துவிடும் முதியவர் ஒருவரைத் தியாகியாக்குவது, ராவன்னாவிடம் பேரம் பேசச் சென்று கலர் கலராய் விக்னேஷ்  டோக்கன் வாங்கி வரும் இடம் என கலகலப்பாக்கும் சில காட்சிகளால் களவாணி 2 கவர்ந்து விடுகிறது.