32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கயிறு விமர்சனம்

Dinesh R சேலம் Published: 13/03/2020 2 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 சினிமா
எழுத்து அளவு:

Kayiru-Movie-review

படத்திற்கு ‘பூம்பூம் மாடு’ என்றே தலைப்பிட்டிருக்கலாம். கந்தன் எனும் ஒரு பூம்பூம் மாட்டையும், சின்ராசு எனும் பூம்பூம் மாட்டுக்காரனையும் சுற்றியே கதை நகர்கிறது. கதையின் மையமான மாட்டை, நாயகன் கயிற்றில்தானே கட்டி வச்சிருப்பார்! ஆக, மாடு வாங்குவதை விட அதற்கு மூக்கணாங்கயிறு வாங்குவது முக்கியமென்ற உயரிய கருத்தை உணர்த்துவதாக படத்தின் தலைப்பைக் கொள்ளலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டிடம், குறி கேட்பவர் கேள்விகளை முன்வைக்க, மாடு தலையாட்டுவதைக் கொண்டு பலன்கள் சொல்வர் பூம்பூம் மாட்டுக்காரர்கள். கோயில் திருவிழா போன்று மக்கள் கூடுமிடங்களிலோ, அல்லது ஒவ்வொரு வீடாகச் சென்று குறி சொல்லி காணிக்கை பெறுவதே அவர்களது ஜீவிதம். ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் கந்தன், பாண்டிய மன்னன் போல் மணமகன் கிடைப்பான் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாமரைக்குக் குறி சொல்லுகிறான் சின்ராசு.

சின்ராசுக்கும், தாமரைக்கும் காதல் மலர, தாமரையின் அம்மாவோ கந்தனை விற்றுவிடச் சொல்கிறார். செய்யும் தொழிலா, காதலா என இரண்டில் ஒன்றை முடிவெடுக்க வேண்டிய அவசியம் நேர்கிறது சின்ராசுவிற்கு. சின்ராசு எடுக்கும் முடிவே படத்தின் கதை.

பூம்பூம் மாட்டுக்காரர்களின் சடங்குகள், நம்பிக்கைகள் என டீட்டெயிலிங்கில் அதிக கவனம் செலுத்தாவிடினும், கிராமம் சார்ந்த அழகான வாழ்வியல் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் ஐ.கணேஷ். சின்ராசாக நடித்திருக்கும் எஸ்.ஆர்.குணாவிற்கும், தாமரையாக நடித்திருக்கும் காவ்யா மாதவிற்கும் தமிழ் முகங்கள். மனதில் பதியும்படி உணர்ச்சிகளைக் காட்ட எஸ்.ஆர்.குணா தவறிவிடுகிறார். காவ்யா மாதவ் படத்தோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்க உதவுகிறார்.

உதார் கணேசனாக வரும் ஹலோ கந்தசாமி அலுப்பு ஏற்படாமல் இருக்க உதவியுள்ளார். கதாநாயகியின் கறார் அம்மா வள்ளிமயிலாக வரும் பிந்து தேவிற்குக் கிராமத்து சாயலே இல்லையெனினும், அம்மா பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். ஞானவேல் பண்டிதர் எனும் பாத்திரம் படத்தில் ஏன் உள்ளதென்றே தெரியவில்லை.

குறி சொல்லும் பூம்பூம் மாடு, கிளி ஜோசியம், வெத்திலையில் மை போட்டுப் பார்ப்பது முதலியவை இந்த மண்ணின் கலாச்சாரம் என்கிறார் இயக்குநர் ஐ.கணேஷ். காலத்திற்கேற்ப தொழில் என சம்பாதிக்கப் போவது கலாச்சாரத்தை அழிக்கும் விஷயம் என சின்ராசு கதாபாத்திரம் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதுதான் கெதக்கென்று உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.