‘விக்கி டோனர்’ என 2012இல் வெளிவந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. ஜுஹி சதுர்வேதியின் கதையை, விவேக்கை உள்ளே கொண்டு வந்து மேலும் நகைச்சுவையாகப் படத்தை எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.
‘என்னது நீ ஸ்பேர்ம் டோனரா?’ என நாயகி கேட்கும் பொழுது கேவலமாகத் தெரியும் தொழில், விவேக் ஸ்பேர்ம் (விந்து) பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ரசிக்க முடிகிறது. படத்தின் நாயகனே விவேக் தான் எனச் சொல்லுமளவு, முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி வரை அதகளம் புரிந்துள்ளார். தன் வசன உச்சரிப்பாலும், கண்ணை உருட்டும் நடிப்பாலும் படத்திற்குக் கலகல டோன் கொடுத்துள்ளார் விவேக். ஜாலியான படத்திற்குத் தனியொரு நபராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தடம் படத்து நாயகி தான்யா ஹோப், நிதி மந்தனா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதிகம் பேசாதவராக அறிமுகமாகி, மெல்ல நாயகன் மேல் விருப்பம் கொண்டு, மிக மெச்சூர்டாக தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஃபுட் பால் ப்ளேயராக, மகனாக, பேரனாக, மருத்துவர் கண்ணதாசனிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி டோனராக, காதலனாகக் கணவனாக ஹரிஷ் கல்யாண் இளைஞர்களை இப்படத்திலும் வசீகரிக்கும் பாத்திரத்தில் நிறைவாகச் செய்துள்ளார். விவேக் உடனான காட்சிகள் மட்டும் அவரது ரியாக்ஷன்களுக்கு மேட்ச் செய்யக் கொஞ்சம் தடுமாறியுள்ளார்.
ஒருவரின் வாழ்க்கை முழுமையாவது குழந்தைகளாலேயே! குழந்தையின்மையைப் புதிய கேன்சரென வசனத்தில் சொல்கிறார் விவேக். அதற்கான அறிவியல் தீர்வைப் படம் முன் மொழிந்தாலும், டோனரின் தேவை ஏன் எப்பொழுது ஏற்படுகிறது என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கலாம். இவையாவும் படத்தின் கலகலப்பான ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. தாராள பிரபு என்ற தலைப்பே படத்தின் கலகலப்பிற்குச் சாட்சி.