Shadow

புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்

Singer-Keerthy-Suresh

‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்தப் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்கத் தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்தப் படத்தில் நடைபெற்ற பல சுவராசியமான சம்பவங்களை படத்தின் வெற்றிவிழாவில் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்குவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் சூரி, இமான் அண்ணாச்சி, சுமித்ரா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனக்கு ரசிகையாகியிருக்கிறார். ஆனால் நான் அவர் நடித்த காக்கா முட்டை பார்த்துவிட்டு அவருக்கு நான் ரசிகையாகியிருக்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு பாடல் பாடியதற்கு காரணம் தயாரிப்பாளர் ஷிபு அண்ணன் தான். அவர் தான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன். என்னுடைய சிறிய வயதில் அந்நியன் படத்தின் போஸ்டரை என்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்தேன். அந்த படத்தில் வரும் ரெமோவை ரசித்தேன். தற்போது அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். சாமி படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதே போல் இந்தப் படத்திலும் இருக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமிது. முதல் இரண்டு படங்களும் தெலுங்கில் பயங்கர ஹிட்டாகியுள்ளது. ஹாட்ரிக் வெற்றியை இந்தப் படம் கண்டிப்பாகக் கொடுக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ”இந்தப் படத்தில் விக்ரம் அவர்களை ஒரு பாட்டு பாட வைக்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அவரை எந்தப் பாடலை பாடவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது. ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலை பாடவைக்கலாம் என்று தீர்மானித்துப் பாடவைத்தோம். இந்தப் பாடல் அவருடைய ரசிகர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். படத்திலும் கச்சிதமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் பெண் குரலில் யாரை பாடவைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஷிபு சார் தான் கீர்த்தி சுரேஷைச் சிபாரிசு செய்தார். நான் முதலில் சற்றுத் தயங்கினேன். பிறகு அவர் ஸ்ருதியில் பாடியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பிறகு அவரை அழைத்துப் பாட வைத்தோம். அவர் சிறிய வயதில் இசையை முறைப்படி கற்றிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டோம். அவரின் குரலினிமையால் இந்தப் பாடல் வெற்றி பெறும்” என்றார்.