Shadow

சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு

Saamy-2-audio-launch

சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தேறியது.

விழாவில் பேசிய நடிகர் பிரபு, “அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார்; இறக்குவார்; குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்தப் பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்” என்றார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பேசுகையில், “வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவது கடினமான பணி. அதிலும் கமர்ஷியல் வெற்றி பெற்ற சாமி படத்தைப் போல் ஒரு படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பது சிரமமான காரியம். அதனை ஹரி தலைமையிலான இந்தக் குழுவினர் சிறப்பாக செய்திருக்கிறார்கள்” என்றார்.

இயக்குநர் ஹரி பேசுகையில், “இந்தப் படத்தில் ஐந்து மாநிலங்கள், ஆறு விமான நிலையங்கள், இருபதிற்கும் மேற்பட்ட சுமோக்கள். சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட கார்களை வாங்கி அடித்து உடைத்திருக்கிறோம். இதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையல்ல. கதை கேட்டதால் செலவு செய்திருக்கிறோம்.

சாமி படத்தின் முதல் பாகத்தை முடிக்கும் போது இரண்டாவது பாகத்திற்கான லீட் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த போலீஸ் கதைகள் பண்ணும் போது ஒரொரு எபிசோடாகக் காலியாகிவிட்டது. ஆனால் விக்ரமைச் சந்திக்கும் போதெல்லாம் அவரிடம் சரியாக கதை அமைந்தால் மட்டுமே அடுத்த பாகத்தைத் தொடர்வேன் என்று சொல்லிவிட்டேன். ஏனெனில் விக்ரம் கமர்ஷியல் ஹீரோ மட்டுமல்ல நடிப்பு திறன் வாய்ந்த நடிகரும் கூட. பிறகு நல்லதொரு கதை அமைந்த பிறகே சாமி ஸ்கொயரைத் தொடங்கினேன்” என்றார்.

நடிகர் விக்ரம் பேசுகையில், “சாமி என்னைக் கமர்ஷியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். தில், தூள் வரிசையில் அமைந்த மற்றொரு மாஸான படம். இயக்குநர் ஹரியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு படத்தை இயக்குவதைத் தவம் போல் ஒய்வேயில்லாமல் அர்ப்பணிப்புடன் செய்வார்.

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் உடலை ஏற்றி இறக்கி நடித்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்.

ஒரு சிக்கலான சூழலில் இருமுகன் படத்திற்கு கைகொடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷிபு. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது சந்தோஷம்” என்றார்.