

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்” ஆகும்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், “ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலைச் சொன்னவர் இயக்குநர். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையைக் கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பைப் பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ-ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன், “கெணத்த காணோம்- வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்தக் காணோம் வரிசையில் ஆற்றைக் காணோம், ஏரியைக் காணோம் என இதைச் சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தைத் தேடிப் படக்குழு தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்துள்ளனர். எனினும் அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்தக் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு. நான் இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா “கெணத்த காணோம்” என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
விநியோகஸ்தர் குகன், “கெணத்த காணோம் என்ற தலைப்பு நடிகர் வடிவேலுவின் வசனமாக த்தொடங்கி இதில் யோகி பாபு சார் நடித்திருப்பது நல்ல காம்பினேஷன். இந்தப் படம் காமெடி டிராமா கதையம்சம் கொண்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தாய் கிழவி திரைப்படம் தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் இன்று இங்கு நம்முடனேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். இயக்குநருக்காக இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “படத்தின் கதையைக் கேட்காமல் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின் போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அவர் தற்போது இல்லை என்றாலும், அவர் இங்கு நம்முடன் தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னைத் தொடர்பு கொண்டு, என்னைக் கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அவருடன் சென்று, நேரம் செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன். அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்று மணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்றைய நாள் அவருடன் கழித்த பிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது” என்று தெரிவித்தார்.
நடிகர் யோகிபாபு பேசும் போது, “சுரேஷ் சங்கையாவை எனக்குக் காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்குத் தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்துப் படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தைக் கொடுத்தது, எனக்குக் கிடைத்த பாக்கியமாகப் பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதைப் போல், அந்தக் குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன் ” என்றார். யோகி பாபு, அந்தக் குழந்தையின் படிப்புச் செலவுக்கு மேடையிலேயே காசோலையை வழங்கினார்.


