32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

லிஃப்ட் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 02/10/2021 2 நிமிட வாசிப்பு Updated: 29/08/2022 OTT
எழுத்து அளவு:

விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படத்தினை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அலுவலகத்தில் தனது முதல் நாள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் குரு பிரசாத், லிஃப்டில் மாட்டிக் கொள்கிறான். அமானுஷ்ய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித் தப்பிக்க வழியின்றித் திணறிக் கொண்டிருக்கும் குரு பிரசாத்துடன், மனிதவள மேலாளரான ஹரினியும் சேர்ந்து சிக்கிக் கொள்கிறாள். இருவரையும் பாடாய்ப்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது, அதிலிருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

ஒரு லிஃப்ட்க்குள் நடக்கும் கதையைப் பார்ப்பவர்கள் சலிப்படையாதவாறு மிகச் சிறப்பான பணியினைப் புரிந்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவா. கவினின் வெளிறிய முகம், லிஃப்ட், லிஃப்ட் பட்டனைக் கொண்டே படத்தொகுப்பாளர் G.மதன், காட்சிகளை விறுவிறுப்பாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும், லிஃப்டினை ஒரு கதாபாத்திரமாகப் படம் நெடுக உலாவ விட்டுள்ளதில் வெற்றி கண்டுள்ளனர். கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பும், கதைக்கும், பின்னணி ஒளியமைப்பிற்கும் ஏற்றாற்வண்ணம் கச்சிதமாக அமைந்துள்ளது. பேய்ப் படத்திற்கான வலு சேர்க்கும் திகிலான பின்னணி இசையை பிரிட்டோ மைக்கேலும், ஒலி வடிவமைப்பை தபஸ் நாயக்கும் வழங்கியுள்ளனர்.

பார்க்கும் இரண்டாவது முறையே, ‘எனக்கு உன் மேல ஒரு கிரஷ்’ எனச் சொல்லுமளவு தைரியமான நாகரீக யுவதியாக அம்ரிதா நடித்துள்ளார். ஆனால், பேயிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும் தோள் வலிமை நாயகனுக்கே உண்டென நம்பும் சராசரிப் பெண்ணாகப் படம் முடிவில் மாறிவிடுகிறார். சூழ்நிலைகளின் தாக்கத்தால் நிலைகுலைந்து போகும் முகப்பாவனையை அம்ரிதாவை விட கவின் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

விஷுவலாகப் போகும் கதை, பிளாஷ்-பேக் அத்தியாயத்தின் பொழுது க்ளைமேக்ஸில் தேக்கம் காண்கிறது. அமானுஷ்யத்திற்கான முடிச்சை கவினும் அம்ரிதாவும் அவிழ்ப்பது போலல்லாமல் தனிக் கதையாகச் சொல்லப்படுவது சுவாரசியக் குறைப்பாடு. சில காட்சிகளே வந்தாலும், கிரண் கொண்டாவும், காயத்ரி ரெட்டியும் அழுத்தமான பாத்திரத்தில் வந்து செல்கின்றனர்.

நட்புனா என்னானு தெரியுமா படத்திற்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ளார். நடிப்பிலும், தோற்றப் பொலிவிலும் முந்தைய படத்தை விட மெருகேறியுள்ளார். படத்தின் பெரும்பாலான நேரம் அவர் மட்டுமே திரையில் தோன்றினாலும், பார்வையாளர்களைக் கதையின் ஓட்டத்தில் இருந்து விலகாமல் பார்த்துக் கொள்கிறார். அவரது கேரியருக்கு இப்படம் ஒரு ‘லிஃப்ட்’ ஆக அமையும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.