இந்திய அணிக்கு மட்டுமில்லாமல், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’-க்கும் கேப்டனாக இருந்து, தமிழ் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமானவர் நாயகன் தோனி. தமிழகத் திரையரங்குகளில் ரசிகர்கள் ‘விசில் போட்டு’ உற்சாகத்தில் மிதக்க இந்தவொரு காரணம் போதாதா?
பயோபிக் வகை படமென இதைக் கூற முடியாது. அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டும் விடுகின்றனர். நாயகனை வியந்தோதும் மற்றுமொரு இந்தியப் படமே! ஆனால், சமகால விளையாட்டு வீரரைப் பற்றிய படம் என்பதே அனைத்து விசேஷங்களுக்குமான காரணம். இந்தப் படம், அதீத பாசிடிவ் எனர்ஜியைத் திரையரங்குகளில் பரப்புகிறது. தோனியின் வெற்றி என்பது இந்திய அணியின் வெற்றி, இந்தியாவின் வெற்றி எனப் படம் முடிந்தாலும், இது தோனி மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது நண்பர்களின் வெற்றியாகவே மனதில் ஆழப் பதிகிறது.
‘தோனி கீப்பிங்கிற்கு சரிபடுவான்’ எனக் கணிக்கிறார் அவரது பயிற்சியாளர். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்பொழுது, கண்களில் ஆனந்த கண்ணீர் மலர அவருக்குப் பேச்சு வராமல் போவதும், அவரது மனைவி கணவனைப் பெருமை பொங்கப் பார்ப்பதும் அட்டகாசம். பள்ளிகளுக்கு இடையிலேயான கிரிக்கெட் போட்டிப் பயிற்சிக்கு, ஒரு பயிற்சியாளரே நேரத்திற்குப் போக முடியாமல் தவிக்கும் இந்திய நடுத்தரக் குடும்பத்தின் சூழலை அழகாகச் சித்தரித்துள்ளார் இயக்குநர் நீரஜ் பாண்டே. படத்தின் முதல் பாதி முழுவதிலும் இத்தகைய எளிமையான யதார்த்தச் சித்தரிப்புகள் நிரம்பிக் கிடக்கின்றன. தோனியின் வீடு, அவரது அப்பாவினுடைய மகனின் வேலை குறித்தான பதற்றம், தோனியின் நண்பர்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, தோனியின் ஸ்பான்சர்க்காக அலையும் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரான சிங் என படம் முழுவதும் நம்பிக்கையை விதைக்கும் மனிதர்கள்.
தோனியின் சீனியர் சத்யநாராயணன் வரும் காட்சிகள் எல்லாம் திரையரங்கம் கலகலக்கிறது. இரயில்வே குவார்ட்டர்ஸ் பற்றிய அவர் விவரிப்புகளுக்குச் சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அவர் வரும் கடைசிக் காட்சியில் கூட, ‘என் பெயர் சொல்லி அவங்களுக்கு டிரஸ் வாங்கிக் கொடு’ என விடை பெறும்பொழுது கூட மக்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ‘சம்சாக்குப் பதிலாக ஹெலிகாப்டர் ஷாட் எப்படி அடிக்கணும்’ எனச் சொல்லித் தரும் தோனியின் நண்பர் சந்தோஷும் மனதில் பதிகிறார். தோனி இந்திய அணியில் சேருவது, ஒரே ஒரு நபரின் தனிப்பட்ட கனவு அன்று. தோனியைத் தெரிந்த ஒவ்வொருவரின் கனவாக அது உள்ளது.
விமானத்தில் தோனியின் அருகே அமரும் பிரியங்கா தோன்றும் அத்தியாயம், சீரியஸ் காதல் படங்களில் வரும் காதலை விட நன்றாக உள்ளது. பிரியங்காவாக நடித்திருக்கும் திஷா பட்டானியின் சிரிப்பு கொள்ளை அழகு. மிஸ்டர் கூலைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் அவர், மணிரத்னம் படத்து நாயகி போல தோன்றி மறைகிறார். ‘எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பிடிக்காது’ எனச் சொல்லும் சாக்ஷியைத் தோனிக்குப் பிடித்து விடுகிறது. மாறு வேடத்தில் இர்ஃபான் பத்தான் உருவத்தில் சாக்ஷியுடன் ஊர் சுற்றுகிறார் தோனி. அதனால் சாக்ஷியின் ப்ரைவசியும் கேள்விகுறியாகிறது. சாக்ஷியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். சாக்ஷியின் தோழி தோனியை நேரில் பார்த்து வாயடைத்துப் போகும் பொழுது, அப்பெண் கொடுக்கும் ரியாக்ஷனுக்கு திரையரங்கமே மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கிறது. படம் முழுவதுமே ரசிகர்கள், அந்தப் பெண்ணின் மனநிலையோடுதான் படத்தைப் பார்க்கிறார்கள். அதனால் தான் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடும் பெரிய படம் எனினும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ரசிக்கின்றனர்.
தோனியின் ஒவ்வொரு அசைவையும் பிரதியெடுத்து அசத்தியுள்ளார் சுஷந்த் சிங். இனி தோனி என்றாலே, சுஷந்த் சிங் முகம் தான் முதலில் ஞாபகம் வரும் போல! தோனியாக படத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். சுஷந்த் அளவுக்கு மெனக்கெடாமலேயே 19 வயதுக்குக் கீழான யுவராஜ் சிங்காக நடித்திருக்கும் ஹெர்ரி டாங்க்ரி கைதட்டல்களை அள்ளுகிறார். இயக்குநர் எப்படித்தான் இவ்வளவு கச்சிதமான உருவ ஒற்றுமையுள்ள ஹெர்ரியைத் தேடிப் பிடித்தாரோ? தோனியின் அப்பாவாக நடித்திருக்கும் அனுபம் கெர்ரும், அக்காவாக நடித்திருக்கும் பூமிகாவும் (‘பத்ரி’ தமிழ்ப்பட நாயகி), அவர்கள் உடையாலும் நடிப்பாலும் மிடில் கிளாஸ் குடும்பத்தைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்கள்.
2011 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை படம் மீண்டும் அளிக்கிறது. யாருக்கேனும் கிரிக்கெட் தெரியாவிட்டாலோ, புரியா விட்டாலோ கூட என்ன? மகனின் திறமை மீதான நம்பிக்கையை விட கடவுள் மீது நம்பிக்கை வைத்து பூஜையறையிலேயே தவம் கிடக்கும் ஓர் எளிய தாயைப் பற்றிய படமாக இப்படத்தைப் பாவிக்கலாம். நம் மீது நம்பிக்கையுள்ள நண்பர்கள் வாய்த்தால் அது எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பதையும் படம் அழகாகக் காட்டுகிறது. இத்தகைய உணர்ச்சிப்பூர்வ கணங்களாலேயே கேப்டன் தோனியை எங்கோ உயரத்தில் வைத்துப் பார்க்க விடாமல், நம்மில் ஒருவராக உணரச் செய்கிறது படம்.