
ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா என்பது படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. எந்தவொரு கணத்திலும் அவனுடைய கவனத்தை வேறுபக்கம் சிதறவிடாமல் தொடர்ந்து அவனைத் தன் வசம் வைத்திருப்பது. இப்போது இன்றைக்கு இந்தக் கவனத்தில் உங்கள் கவனம் சிதறாமல் உங்களால் ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடிக்க முடியுமா சொல்லுங்கள்? சொல்வீர்கள் என்றால் உங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும்.
கடந்த பத்தாண்டுகளில் ஒரு திரைப்படம் சார்ந்த நமது பார்வை வெகுவாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையும் மாறி இருக்கிறது.
அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சினிமா பார்க்கும் பார்வையாளனின் மனநிலை தறிகெட்டுப் போயிருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட நிலை கடந்து, சினிமா பார்க்கும்போது பொழுதுபோகவில்லை என மொபைல் போனை நோண்டப் பழகிய காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.
கொரானாவுக்குப் பின் நிலமை இன்னும் மோசம். OTT என்பது எட்டக்கானியாக இருந்த நாட்கள் போய், “எங்கள தியேட்டருக்கு வர வைக்கனுமன்னா நீ பெரிய வித்தக்காரன்னு நிரூபீ” என்று சவால் விடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். இது மட்டுமில்லாமல், கிடைக்கும் இன்ஸ்டண்ட் டிவீட்டுகளும், டீடெயில்ட் யூ டியூப் ரிவியூக்களும் ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா என்று யோசிக்கச் செய்யும் அளவுக்கு நமக்கு தகவல்களைத் தகவல்களாக அள்ளிக் குவிக்கின்றன.
இத்தனைக்கு மத்தியில் ஓரளவுக்கு உருப்படியான திரைப்படத்தை இயக்கி, வெற்றியை நோக்கி நகர்த்தினாலும் அதில் சிதறிக் கிடக்கும் குறியீடுகள் ஒரு திரைபடத்தை என்ன வேண்டுமானாலும் செய்துவிடும். ஒரு திரைப்படத்தின் போஸ்டர் முதற்கொண்டு எந்தப் படத்தின் காப்பி என்று சொல்லும் காட்டுத்தீ நம்மிடையே அதிகம்.
ரசிகனின் படிப்படியான வளர்ச்சிக்கும், கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த அசுரப் பாய்ச்சலுக்கும் இதுவரை சொன்னதெல்லாம் ஒரு சோற்றுப் பதமே.
இப்படி ஒரு சூழ்நிலையில் இன்றைக்குக் களமிறங்கி இருக்கும் மாநாடு திரைப்படம் வெற்றி பெறுமா? நம்பிப் பார்க்கலாமா? இல்ல மாசுல நம்மள ஒழட்டி விட்ட மாதிரி ஒழட்டி விடுவாரா? இது உண்மையிலேயே வெங்கட் பிரபு படமா? இல்ல சிம்பு படமா?
அதற்கான பதில்கள் நிச்சயமாகப் பாஸிட்டிவானவை தான். நம்புங்கள். நம்பிக் களத்தில் இறங்குங்கள்.
இதுவரையில் ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே இடம் பெற்றிருந்த டைம் லூப்பை இந்திய இயக்குநர்கள் இப்போதுதான் கையாளத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் மாநாடு திரைப்படத்தின் ஒன்லைனர் புதியது இல்லை.
(2019இல் ஆரம்பிக்கப்பட்ட படம் என்பது பழைய கதையா? புதிய கதையா? )
கிரவுண்ட்ஹாஹ் டே, ஹேப்பி டெத் டே என்று பிரபலமான ஹாலிவுட் படங்களில் அடித்துத் துவைக்கப்பட்ட அதே கதை. அதே டெம்ப்ளேட், அதே போன்ற காட்சியமைப்புகள்.
கதைக்கான களமும் புதியது இல்லை. ஆனால் சில விஷயங்கள் ஈர்க்கின்றன. படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரைக்கும் பார்வையாளனை வேறு எது குறித்தும் சிந்திக்க விடாமல் கவனிக்க வைக்கின்றன. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சி நோக்கிய ஆர்வம் பார்வையாளனின் முகத்தில் தெரிவதை நீங்கள் கவனிக்கலாம்.
மேற்சொன்ன, பார்வையாளன் குறித்தான பெரும்பாலான கவலைகளை மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள், நான் சொல்ல வருவது புரியும். இந்தத் திரைப்படம் எதனால் வெற்றியை நோக்கி நகர்கிறது என்பதும் தெளிவாகும்.
சரி டைம் லூப் என்ற விஷயத்திற்கு வருவோம். டைம் லூப் என்பது மீள முடியாத ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சிக்கிக் கொள்வது. இன்றைக்குக் காலையில் எழுந்து உங்கள் அன்றாடங்களை முடித்த பின், மீண்டும் இன்றைக்குக் காலையிலேயே எழுகிறீர்கள் என்றால்? வாரத்தின் ஐந்து நாட்கள் இதே போல் நடந்தால் பரவாயில்லை. வாரத்தின் ஏழு நாளும் இப்படியே இருந்தால்? வருடம் முழுக்க அல்லது வாழ்க்கை முழுக்க இன்றைக்கு நடந்த விஷயங்களும் சம்பவங்களும் மட்டுமே மீண்டும் மீண்டும் நடக்கும் என்றால்? ஒவ்வொருமுறை நிகழ்ந்த சம்பவங்களும் பிசிறு தட்டாமல் உங்கள் ஞாபகத்தில் இருக்கும் என்றால்? உங்கள் நிலமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
மாநாடு திரைப்படத்தின் கதாநாயகனும் இப்படியான ஒரு சூழலில் சிக்கிக் கொள்கிறான். பின் அதில் இருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களின் மூலமாகத் தான் சிக்கியிருக்கும் சுழலில் இருந்து விடுபட முயற்சிக்கிறான்.
இதுதான் ஹேப்பி டெத் டே மற்றும் etc etc திரைப்படங்களில் பார்த்த கதை. இப்படி அடித்துத் துவைத்த ஒரு கதையில் என்ன இருக்கிறது என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே வரும்போது, அட என்று அலுப்புத்தட்ட ஆரம்பிக்கும் கணத்தில் அட என ஒரு புதுமையைப் புகுத்தி அசத்த ஆரம்பிக்கிறார் வெங்கட் பிரபு.
அந்தப் புதுமையின் மூலம் எழுதப்பட்டத் திரைக்கதை தான் இந்த ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தாங்கிப் பிடிக்கிறது. நாம் இதுவரை பார்த்த டைம் லூப் சினிமாக்களில் இருந்து சற்றே ஒரு புதுமையான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது.
இதுவரைக்குமான டைம் லூப் சினிமாக்களில் கதையின் நாயகன் மட்டுமே காலத்தின் சுழலில் சிக்கிக் கொள்வான். அதில் இருந்து வெளிவரப் போராடி, வெளியேறவும் செய்வான்.
ஆனால் இங்கே நடப்பது ஆடுபுலியாட்டக் கதை. காலத்தின் சுழலில் சிக்கிக்கொள்வது ஆடு மட்டும் இல்லை. புலியும் கூட.
காலச்சுழலில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் ரத்தம் வில்லனின் உடம்பில் (எஸ். ஜே சூர்யா) நுழைவதன் மூலமாக வில்லனும் சிக்கிக் கொள்கிறான்.
இந்தச் சுழலில் இருந்து வெளியேறும் முயற்சியில் இருவருக்குள்ளும் கடுமையான யுத்தம் நடக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதைத் தன் அட்டகாசமான திரைக்கதையின் மூலம் ஜெயித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
சிம்பு அடக்கி வாசித்தால் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மன்மதன், விடிவி என்று விரல்விட்டு எண்ணிவிடும் படைப்புகள் அதில் அடக்கம். வெங்கட் பிரபு பிரேம்ஜியை அடக்கி வாசிக்கவிட்டால் படம் ஜெயிக்கும். உதாரணங்கள் உங்களுக்கே தெரியும். ஆனால் இந்த இருவருக்கும் இடையே எஸ் ஜே சூர்யா ஒரு காட்டு மிருகமாக அதகளம் செய்கிறார். இந்தத் திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது என்றால் அது நிச்சயம் எஸ்.ஜே சூர்யாவிற்காக மட்டுமே.
அட்டகாசமான இசை மற்றும் ஒளிப்பதிவு என்றாலும் பிசிறு தட்டாத எடிட்டிங் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
தரமான பொழுதுபோக்கு சினிமா பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுடைய ஹாலிவுட் குழந்தையை ஓர் ஓரமாகக் கட்டிவைத்துவிட்டு வாருங்கள். இந்த கோலிவுட் குழந்தை உங்களை ஏமாற்ற மாட்டான்.
– நாடோடி சீனு