Shadow

மாவீரன் கிட்டு விமர்சனம்

maaveeran-kittu-vishu-vishal-sri-divya

‘தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை கொள்கிறேன்’ என சுசீந்திரன் கூறியுள்ளார். அது உண்மை தான். கபாலியில் ரஞ்சித் சாதிக்காததை இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமென மெட்ராஸ் படத்தில் சொல்லியிருப்பார் ரஞ்சித். அதை அலட்சியத்தோடு, ‘யார் படிக்க வேண்டாம்?’ எனக் கேட்ட எகத்தாள பேர்வழிகளுக்கு, அக்கேள்வியின் அபத்தத்தை ‘மாவீரன் கிட்டு’ எனும் அழுத்தமான அரசியல் படம் புரிய வைக்கும். அரசியல் படம் மட்டுமன்று சாதீயத்தைப் பேசும் சாதிப்படமும்! அப்படி வரையறுப்பதும் கூடப் பிசகாகிவிடும். இது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் சமூகப்படம்.

கீழக்குடி மக்கள் இறந்தால் அவர்களின் பிணம் உயர்குடி மக்களின் தெரு வழியே கொண்டு செல்லக்கூடாதென தடை உள்ள புதூர் கிராமம் அது. நீதிமன்றம் வரை சென்று பிணத்தைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கியும் ஆதிக்கச் சாதியினரை மீறி காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலை மாற கீழக்குடியில் இருந்து ஒரு கலெக்டர் வரவேண்டுமென, அவர்களுக்காகப் போராடும் பார்த்திபன் பிரியப்படுகிறார். பன்னிரெண்டாவதில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்கும் கிட்டு அதற்காகத் தயாராகிறார். ஆதிக்கச் சாதிகளை மீறி கிட்டுவால் இலக்கை அடைய முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் நாயகன் மக்களுக்காகப் போராடும் சின்ராசுவாக நடித்திருக்கும் பார்த்திபன். தப்பித் தவறிக் கூட அவரது பாணியான வித்தியாசத்தை வசனங்களில் புகுத்தி விடாமல், யுகபாரதியின் வசனங்களுக்கு அழகாக உயிர் கொடுத்துள்ளார். கருப்புச் சட்டை அணிந்த சமூகப் போராளியாக அவர் ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரம் அவரது இத்தனை வருட கேரியரிலே மிக முக்கியமானது. ‘போராட்டங்கள் அனைத்தும் சூழ்ச்சியால் தான் முறியடிக்கப்படுகிறது’ என்றொரு வசனம் வரும் படத்தில். அது போல, மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த தலைவர் இல்லாததும் கூட . அப்படி மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும், காந்தீயத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும் பார்த்திபன் இப்படத்தில் வருகிறார். ‘மாவீரன் சின்ராசு’ என்ற தலைப்பே, இப்படத்திற்குப் பொருத்தமாக இருந்திருக்கும். இல்லையேல் பார்த்திபன் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காவது கிட்டு என பெயர் வைத்திருந்திருக்கலாம்.

கொண்ட கொள்கையை அடைய வேண்டுமென்ற லட்சியமும் பக்குவமும் உடைய கிட்டுவாக விஷ்ணு விஷால். தான் கலெக்டராக வேண்டியது எவ்வளவு முக்கியமென உணர்ந்து பிரச்சனைகளில் இருந்து அமைதியாக ஒதுங்கிப் போகும் பாத்திரத்திற்கு அருமையாகப் பொருந்துகிறார். வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா என சாதீய வேறுபாடுகளைப் பேசும் ஜானரில் மூன்றாவது முறையாக சுசீந்திரனோடு கை கோர்த்துள்ளார். சம காலத்திலோ, இதற்கு முன்னோ இப்படியொரு இணை, சாதிக்கு எதிரான படங்களில் இப்படிச் சேர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

இவர்களோடு இரண்டாம் முறை இணைந்துள்ள ஸ்ரீதிவ்யாவிற்கும் அற்புதமான கதாபாத்திரம். இங்குப் பலரும் தாங்கள் தீண்டாமையை அனுஷ்டிக்கிறோம் எனத் தெரியாமலே, சமூகம் (குறிப்பாக வீட்டிலேயே தொடங்குகிறது) கற்பித்து வைத்திருக்கும் அடுக்கினில் தங்களை ஏதோ ஓரிடத்தில், அது மேலான இடமே தானென்று நம்பித் தம்மைப் பொருத்திக் கொள்கின்றனர். இப்படிப் பசுமரத்தாணி போல், சிறு வயதிலேயே அவர்களின் மனங்களில் சாதிப்பற்றை வெளிப்படையாகவோ, இலைமறை காய்மறையாகவோ விதைத்து விடுகின்றனர். இதிலிருந்து மீள நினைப்பவர்களையும் வாழவிடாது அழித்து விடுவதில் குறியாக உள்ளனர். காதலித்து திருமணம் புரிந்து கொள்ளும் மகளைப் பணம் கொடுத்து மீட்டு விடலாமென நினைக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, அது இயலாதென உணர்ந்ததும் மகளைக் கொன்று விட்டு, ஒரு கையில் பணப் பையை இறுக்கமாகப் பிடித்தவாறும் இன்னொரு கையில் மகளின் ரத்தம் தொய்ந்த கத்தியுடனும் காவல் நிலையத்தில் சரணடைகிறார். அதற்கு அந்த தந்தை சொல்லும் சமாதானம், ‘சுற்றத்தையும் நட்பையும் எப்படி எதிர்கொள்வேன்!’ என்ற கோழைத்தனத்தையே! கோழைத்தனத்தை வீரமென நம்பும் முட்டாள்த்தனத்தைத் தான் சாதிப்பற்று அளிக்கிறது. முட்டாள்கள் சூழ் உலகில், ‘என் பொண்ணுங்க வார்த்தை தான் முக்கியம்’ எனச் சொல்லும் நாயகியின் தந்தை தான் படத்தில் வரும் உண்மையான மாவீரன். ‘சக மனிதர்கள் தங்கள் உரிமையைப் பெற்று விடுவார்களோ!’ என சதா பதற்றத்துடன் வரும் ஊர் தலைவராக நாகிநீடுவும், கிட்டு கலெக்டர் ஆகித் தன்னை அதிகாரம் செலுத்தும் நிலைக்குச் சென்று விடுவானோ என்ற அச்சத்தில் ஹரீஷ் உத்தமனும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஹரீஷின் பயம் மாணவனான கிட்டுவை ‘கலெக்டர்’ என்றே அழைக்க வைக்கிறது. ஏற்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலுமே ஹரீஷ் , ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகப் பரிணமித்து வருகிறார்.

தமிழ்த் தேசியர்களைச் சுண்டி இழுக்கும் தலைப்பு. விஷ்ணு விஷால் வேறு, கண்ணாடி போட்டுக் கொண்டு விடுதலைப் புலியின் ‘கேணல் கிட்டு’ போல் ஒரு தோற்ற மயக்கத்தைப் படத்தின் போஸ்டர்களின் மூலம் தந்து கொண்டிருந்தார். ஆனால், படம் இங்கு தமிழ்நாட்டிலேயே ஒரு சாரார் காலங்காலமாக ஒதுக்கப்படுகிறார்களென்ற கள யதார்த்தத்தை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. ‘இப்பெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறா?’ என யாரும் நாக்கு மேல் பற்கள் போட்டுக் கொண்டு பேசி விடக் கூடாதென 1987-இல் நடப்பது போல் சாமர்த்தியமாக கதையைக் கொண்டு போகிறார்.

எவரும் நரம்பு முறுக்கேறக் கத்திப் பேசாததால், யதார்த்தத்தை முகத்தில் அறைகிறது யுகபாரதியின் வசனங்கள். சீரியசான விஷயங்களைப் பேசும் படமெடுக்கும் இயக்குநர்களுக்கு, கவிஞர் அல்லது எழுத்தாளர் ஒருவரின் துணை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இப்படம் மிகச் சிறந்த் சான்று. உரிமைகளை வன்முறையால் அடைய முடியாது என்ற கருத்தியலோடு படம் பயணிப்பது சிறப்பு. உயிரை எடுப்பதோ கொடுப்பதோ எந்தப் பிரச்சனைக்கும் போராட்டத்துக்க்கும் தீர்வாகாது. சூழ்ச்சி மட்டுமல்ல சிலரின் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளும் போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும். தியாகத்துக்கும் மாவீரத்துக்கும் படம் கற்பிக்கும் பிற்போக்கான இலக்கணத்தைத் தவிர்த்திருக்கலாம்.