நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை.
குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்ளார் இயக்குநர். காதுக்குள் இருந்து குடையும் குரல் ஒருவனை எப்படி அலைக்கழிக்கிறது என விஜய் ஆண்டனியும் தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். சுஜாதா கதையின் சிம்ப்ளிஃபைட் வெர்ஷனாக, திரைக்கதையை மேலும் எளிமையாக்கி அசத்தியுள்ளார் பிரதீப். எனினும் இரண்டாம் பாதியில், ஹீரோயிசத்துக்கான பிரம்மாண்டத்தில் அந்த எளிமை மறைந்ததைத் தடுக்காமல் விட்டுவிட்டார். உதாரணத்திற்கு, நாயகனுக்கு மட்டுமே கேட்கும் குரல்கள் திடீரென வில்லனுக்குக் கேட்கிறது. ஆ!!
நாவலின் சிறப்பம்சம் நாயகன் தனக்குத் தானே வில்லன் ஆகிவிடும் சுழலில் சிக்கிக் கொள்வான். பிரதீப் நாயகனை நாயகனாக மட்டுமே சைத்தானில் சித்தரிக்கும் பொழுது, வலுவான வில்லனை உருவாக்க வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகிறார். பாதிப் படத்திற்கு மேல் சைத்தானுக்கு நிகரான ஒரு வில்லனைக் கொண்டு வந்தாலும், “ஈ”-இல் தொடங்கி, ‘என்னை அறிந்தால்’ என நீளும் மருத்துவ மாஃபியாவுக்குள் இப்படமும் பெரிய சுவாரசியமின்றி நுழையும் பொழுது லேசாய்ச் சறுக்கவே செய்கிறது. முழுப் படமுமே ஓர் இறுக்கத்தை அளிக்கிறது. அது தெரியாமல் இருக்க, சுஜாதா ஆங்காங்கே தன் எழுத்தில் சின்னஞ்சிறு சுவாரசியங்களைத் தூவியபடி ரிலாக்ஸ் செய்து விடுவார்.
ஒரு பெரும் நெட்வொர்க் தனக்கெதிராய் இயங்கியுள்ளது எனக் கண்டுபிடிக்கும் நாயகன், அதை எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் தனியனாக எதிர்கொள்ளச் செல்கிறான். அது சைத்தானை வழக்கமான படமாக்கி விடுகிறது. முதல் பாதி போல் இரண்டாம் பாதி ஈர்க்காததற்கு இதுவோர் முக்கியமான காரணம். ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ நடிக்கக் கிடைக்காத வாய்ப்பு, அருந்ததி நாயருக்கு இப்படத்தில் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவாகவும், ஜெயலட்சுமியாகவும் இருவேடத்திலுமே நன்றாக நடித்து அசத்தியுள்ளார்.
படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி. பின்னணி இசையில் படத்தின் மூடைக் (mood) கச்சிதமாக செட் செய்துள்ளார். ஷர்மாவாக தன் மனைவி ஜெயலட்சுமியைச் சந்தேகம் கொள்ளும் பொழுது ஒரு வலியையும் வேதனையையும் கண்களில் பிரதிபலிக்கிறார். கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயாத் ஆகியோரின் உழைப்பின் பலனை ஒவ்வொரு ஃப்ரேமிலும் காணக் கிடைக்கிறது.
கதைத் தேர்வில் விஜய் ஆண்டனி காட்டும் அக்கறையும் நேர்த்தியும் அவர் மீதான நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் அதிகரிக்கிறது. இப்படமும் அதற்கு விதிவிலக்கில்லை. இயக்குநர் பிரதீப் உண்மையில் அசத்தியுள்ளார் என்றே சொல்லவேண்டும். சுஜாதா வைத்த காற்புள்ளியை, ரம்யா நம்பீசன் மூலம் முற்றுப் புள்ளியாக்கி சைத்தானை முழுமையாக்கியுள்ளார்.