
தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை.
மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். ‘பூ’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் கொண்ட கதைக்கு வஞ்சனை செய்யாமல் நிறைவானதொரு அனுபவத்தைத் தருகிறார்.
2017இன் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைக் கதைக்குக் கச்சிதமாய் முடிச்சுப் போட்டுவிடுகிறார். ஜல்லிக்கட்டில் சாதி எப்படிக் குறிக்கிடுகிறது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். வழக்கம் போல் நல்லவராகவும் வல்லவராகவும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். துரைக்குப் பிடிக்குமென இரவில் மீன் குழம்பு சமைக்கப் பழகுவதைத் தவிர்த்து, நாயகி மீனாட்சிக்குப் பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில்.
எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கு, முறுக்கிக் கொண்டே திரியும் கதாபாத்திரம் தான் அளிக்க வேண்டுமென மிகப் பிடிவாதமாக உள்ளது தமிழ்த் திரையுலகம். அவர் அப்படி முறுக்கலாக இல்லாமல், இயல்பாய்ச் சிரிக்கும் காட்சியைக் காண நிறைவாய் உள்ளது. படத்தின் க்ளைமேக்ஸில், வாடிவாசலின் மேல் வேல ராமமூர்த்தி நிற்கும் பொழுது அப்படியொரு அற்புதம் நிகழ்கிறது. பாலசரவணனின் கதாபாத்திர வடிவமைப்பு இயல்பான நகைச்சுவைக்கு வழிகோலியுள்ளது.
சாதிக் கலவரங்களுக்கு, மக்களின் முட்டாள்த்தனமான சாதிப்பற்று மட்டுமே காரணமன்று. சொந்த ஆதாயத்துக்காக, யாரோ ஒருவரின் குயுக்தியும், தீய எண்ணமுமே ஆணி வேராக உள்ளன. அதை இப்படம் தெளிவாய்ச் சுட்டிக் காட்டுகிறது.
ஜல்லிக்கட்டுக் காட்சிகளும், அதற்கு வலு சேர்க்கும் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும் அமர்க்களமாயுள்ளன. எதுவாகினும் சரி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்பதே மதுரவீரன் சொல்லும் சேதி.


