மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை.
மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை – கற்பனை என இரண்டு கோணங்களில் நகர்கிறது. இந்தத் திரைக்கதை யுக்தியைக் குழப்பமில்லாமல் இயக்குநர் துரை கையாண்டிருந்தாலும், படத்தின் முடிவு ஒரு வகையான ஏமாற்றத்தைத் தருகிறது. ட்ரெண்டியாக, ஜாலியாக, யூத் ஃபுல்லாகச் சென்ற படம் அதற்கான நிறைவைத் தரவில்லை.
இரட்டை அர்த்த வசனங்கள் மொக்கையாகவோ, எல்லை தாண்டாமலோ இருப்பது ஆறுதல். ‘கஸ்கா முஸ்கா’ என்று ஜெயமோகன் தனது வசனங்களால் படத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார் என்ற போதும், ‘லிவிங் டூகெதர்க்கும் கல்யாணத்துக்குமான வேறுபாட்டை எல்லாம் வம்படியாக ஒரு காட்சி வைத்து விளக்கியிருக்கத் தேவையில்லை. அதுவும் அவ்வசனங்களைச் சமுத்திரக்கனி பேசுவதை ஏனோ சகித்துக் கொள்ளச் சிரமமாய் உள்ளது. லிவிங் டுகெதர்க்குச் சம்மதித்து ரோஷனியைப் பார்த்து அவர் கொடுக்கும் ரியாக்ஷன் ‘ப்பாஆஆ’ ரகமாய் உள்ளது. “நீங்க அட்வைஸ் பண்ணா தமிழ்நாடே கேட்கும்” என ஜெயமோகன் தனது வசனங்களில் சமுத்திரக்கனியை நேரடியாகவே கலாய்த்துள்ளார்.
தற்காலத்து யுவதியான ரித்துவைத் தன் நடிப்பில் அழகாகக் கொண்டு வந்துள்ளார் அதுல்யா. சிகரெட் பிடித்துக் கொண்டே இருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்களைச் சுணக்கமின்றிப் பேசினாலும், சிந்தனையோட்டத்தில் நவீனத்துக்கான கூறுகள் இல்லாமல் வழக்கமான தமிழ் நாயகியாகவே உள்ளார். நாயகன் மனப்பாங்கோ அதை விட மோசம். மாலீஸ்வரனாக நடித்திருக்கும் சாம் ஜோன்ஸும் நன்றாகத்தான் நடித்துள்ளார். என்றாலும், பிரேக்-அப் செய்த பெண்ணைக் கொல்லவேண்டும் என்றிருக்கும் கதாபாத்திரத்தை ரசிக்க முடியவில்லை. பிரதான கதாபாத்திரங்களே மேம்போக்காய்ப் படைக்கப்பட்டிருக்க, காமெடியனான பாலசரவணனைக் கிச்சுகிச்சு மூட்ட மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சமுத்திரக்கனியுடன் லிவிங் டுகெதரில் வாழும் ரோஷனியின் கதாபாத்திரம் மிகவும் பரிதாபகரமாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நவீன இளைஞர்களைப் பற்றிய படமாக இருக்கவேண்டும் எனக் கருதிக் கதையைத் தொடங்கியுள்ளார இயக்குநர் துரை. ஆனாலும், தயக்கத்தின் காரணமாகவோ, ரசிகர்கள் ஏற்பார்களோ என்ற பயத்தின் காரணமாகவோ, கதாபாத்திரச் சித்தரிப்பில் மிகுந்த மெத்தனமாக இருந்துள்ளார். திரைக்கதையின் புதுவகையான யுக்திக்குச் செயற்கைத்தனம் மிகுந்த கதாபாத்திரங்கள் பொருந்திப் போகாதது துரதிர்ஷ்டம்.