அஜித் குமார் ரசிகரும், விஜய் ரசிகரும் ஃபேஸ்புக்கில் ஜென்ம விரோதியாக உள்ளனர். விதி, அஜித் குமார் ரசிகரை ஜென்ம விரோதியான விஜய் ரசிகரின் தங்கையைக் காதலிக்க வைக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
தலைப்பிற்கு முன் கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடும்பொழுது, விஜய் மற்றும் அஜீத்தின் படங்களில் இருந்து ‘மாஸ் சீன்’களை அழகாகத் தொகுத்துள்ளனர். அந்த விறுவிறுப்பு, படத்தின் முதல் பாதியில் முழுவதும் மிஸ்ஸிங். ஒன்றே முக்கால் மணி நேரம் படம் தான் என்ற போதும், இடைவேளைக்கு முன்னான படம் அசாத்தியமானதொரு பொறுமையைக் கோருகிறது. ‘தல வெறியன்’ சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணா தான் படத்தின் நாயகன். ஒரு பொண்ணை “வால்ட்டு” அடிக்க வேண்டுமென அவர் செய்வது எல்லாம் அசுவாரசியத்தின் உச்சம். மிக நன்றாகக் கலகலப்பாக வந்திருக்க வேண்டிய அத்தியாயம், திரைக்கதையின் பலவீனத்தால் சோடை போய்விடுகிறது.
‘தளபதி ரசிகன்’ கில்லி சூர்யாவாக ராஜ் சூர்யா நடித்துள்ளார். இரண்டு ஹீரோ படமென்றாலும், இவருக்கான காட்சிகள் மிகக் குறைவே! ரசிக மனநிலையை மேம்போக்காகக் காட்டுவதால், இரண்டு நாயகன்கள் மீதும் மனம் ஒட்டவில்லை. போதாக்குறைக்கு, சென்னையில் சொந்த வீடு உள்ளதால் நாயகன் உழைக்க வேண்டாம் என்று நாயகி சமாதானம் கொள்கிறாள். மேலும், தளபதி ரசிகனாக இருந்தால் தான் காதலிப்பேன் என நாயகி கண்டிஷன் போடுகிறாள். ரெமோனா ஸ்டெஃபனி நாயகியாக நடித்துள்ளார்.
விசிறிகளின் மனநிலையையோ, உளவியலையோ படத்தின் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்காதது மிகப் பெரும் குறை. சீரியசாக அணுகி நகையாட வேண்டிய விஷயத்தைப் போற்றுதற்கு அரிய விஷயமாகப் படம் சித்தரிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
பி.டி.அரசகுமார் நாயகனின் தந்தையாக அறிமுகமாகியுள்ளார். நாயகனின் தாயாக ஷர்மிளா நடித்துள்ளார். மகனின் விருப்பத்திற்கு இணங்கி, அந்தக் குடும்பமே அஜீத் ரசிகர்களாக உள்ளனர். ஃபேஸ்புக்கிலேயே முழு நேரமும் மூழ்கியிருக்கும் மகனின் உயிரை, ஃபேஸ்புக்கில் ஒரு ஃபேக் ஐடியின் மூலமாகக் காப்பாற்றப்படுவதாகக் காட்டியுள்ளனர்.
ஓர் அடையாளம் இன்றிச் செளகரியமாய் , தொழில்நுட்பம் இந்த ரசிகர்களை வார்த்தை யுத்தம் புரிந்து கொள்ள அனுமதிக்கிறது.
போட்டியாளர்களாக ஒருவரை ஒருவர் கருதிக் கொள்ளும் மாஸ் ஹீரோவின் ரசிகர்கள் ஒன்றிணைந்தால் என்னாகும் என்பது தான் படத்தின் இறுதி இலக்கு. அதை அடையும் பொழுது மட்டும் படம் விறுவிறுவெனச் சூடு பிடிக்கிறது. எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் மீதொருவர் வெறுப்பை அள்ளி உமிழ்ந்தனரோ, அதே தொழில்நுட்பத்தால் இணைந்து ஒரு சதி வலையை வேர் அறுக்கின்றனர். அப்புள்ளியைத் தொட இயக்குநர் வெற்றி மகாலிங்கம் இன்னும் சற்று சுவாரசியமான அஸ்திவாரத்தைப் போட்டிருக்கலாம்.