Shadow

மார்க் ஆண்டனி விமர்சனம்

காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை.

ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால டைம் டிராவல் படங்களில் அது ஒரு விதி. அப்படி நான் என்னோடு பேச முற்பட்டால் என் வாழ்க்கையே திசைமாறி தலைகீழாக மாறிவிடும் என்பதால் பேசமுற்படக் கூடாது, வேண்டுமென்றால் சில நிகழ்வுகளை நடக்கச் செய்தோ அல்லது நடக்கவிடாமலோ தடுக்கலாம் என்ற வரையறை கூறப்பட்டு இருக்கும். இதுவும் ஒரு கற்பனை தான்.  உண்மை அல்ல.  உதாரணத்திற்கு  இன்று நேற்று நாளை, ஹாரிபாட்டர், இன்செப்ஷன் போன்ற படங்களை நினைவு கூறுங்கள்.  டைம் டிராவல் செய்யும் கதாபாத்திரங்கள் தங்களை பார்க்கும், ஆனால் பேச முற்படாமல் மறைந்து கொள்வார்கள்.

ஆக இப்படி இந்த மாயவாத கற்பனை உலகில் சில கற்பனையான விதிகள் உண்டு. அந்த விதிகளை உடைத்து அல்லது மீறி தற்போது டைம் டிராவல் திரைப்படங்கள் வரத் துவங்கியிருக்கின்றன.  அந்த வகைமையிலான திரைப்படம் தான் ‘மார்க் ஆண்டனி”.  இதில்  டைம் டிராவல் என்பது ஒரு தொலைபேசியின் வாயிலாக நடைபெறுகிறது.  அந்த தொலைபேசியின் மூலமாக நீங்கள் இறந்தகாலத்தில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு உரையாடி உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை தடுக்கவோ திருத்தவோ முடியும்.  அப்படியான ஒரு விதிமீறலைத் தான் அழகாக கையாண்டிருக்கிறது மார்க் ஆண்டனி திரைப்படம்.

அப்பா, மகன் டபுள் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் விஷால். அதே போல் அப்பா மகன் டபுள் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா.  கொடூரமான டானாக இருந்து இறந்து போன தன் அப்பா மார்க் பெயரைக் கேட்டாலே வெறுக்கும் மகன் ஆண்டனியாக விஷால்.  தன் நண்பன் மார்க்-க்கு உதவியாக இருந்து அவனை எதிரிகள் கொன்ற பின்னர் அந்தப் பதவியில் தான் இருந்து கொண்டு தன் நண்பனைக் கொன்றவனை தேடுவதோடு, மார்க்கின் மகன் ஆண்டனியை தன் மகன் போல வளர்க்கும், பெண் பித்தனாக அலையும் தன் மகன் மதன் பாண்டியனை அடியோடு வெறுக்கும் ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரல் எஸ்.ஜே சூர்யா.  ஆண்டனி தன் கையில் கிடைத்த ஒரு வித்தியாசமான போன் மூலம் இறந்த காலத்தில் இருக்கும் தன் அப்பா மார்க்கை திட்டுவதற்காக போன் செய்ய, அதைத் தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்கள் தான் “மார்க் ஆண்டனி”.

படத்தின் மிகப்பெரிய பலமே ஜாக்கி பாண்டியனாகவும் மதன் பாண்டியனாகவும் நடித்திருக்கும் எஸ்.ஜே சூர்யா தான். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் திரையரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது. அந்த ஆர்ப்பரிப்பிற்கு ஏற்றார் போல் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பும் பட்டையை கிளப்புகிறது. எதிர்புறம் மார்க் மற்றும் ஆண்டனி கதாபாத்திரங்களில் விஷாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மகன் கதாபாத்திரத்தை விட அப்பா மார்க் கதாபாத்திரத்தில் விஷாலின் நடிப்பு அதிகமாக ஈர்க்கிறது.

இவர்கள் இருவரை அடுத்து அதிகமாக கவனம் ஈர்ப்பவர்கள் சுனிலும், இயக்குநர் செல்வராகவனும் தான்.  விஞ்ஞானியாக ஒரு விசித்திரமான போனை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில்  செல்வராகவன்.  மார்க்-கை கொல்லும் ரவுடி கதாபாத்திரத்தில் சுனில். இருவருமே நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்.  நாயகியாக வரும் ரிது வர்மாவிற்கு விஷால் மற்றும்  எஸ்.ஜே.சூர்யாவை மாறி மாறி காதலிக்கும் கதாபாத்திரம்.  ஒய்.ஜி.மகேந்திரன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஈர்க்கிறார். இருப்பினும் அந்த கதாபாத்திர சித்தரிப்பு மாற்று பாலினத்தவரை கொச்சைபடுத்துவது போல் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

படத்திற்கு பெரும் பலமே திரைக்கதை தான்.  அந்த விசித்திரமான போன் கையில் கிடைப்பதில் இருந்து திரைக்கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஆனால் கடைசி சில பகுதிகள் செத்து செத்து விளையாடலாம் என்கின்ற பகுதிகளாக மாறும் போது, எப்பொழுது படம் முடியும் என்கின்ற எண்ணம் தலைதூக்கத் துவங்குகிறது.  திரைக்கதையில் வரும் தேவையில்லாத திருப்பங்களும், இதுதான் முடிவு என்று தெரிந்த பிறகும் கதை நீண்டு கொண்டே செல்வதும் அயர்ச்சியை தோற்றுவிக்கிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்குமாரா என்று ஆச்சரியத்தோடு கேட்க வேண்டியிருக்கிறது. சில இடங்களில் வரும் பின்னணி இசையைத் தவிர்த்து பெரும்பாலும் இரைச்சலாகவே கேட்கிறது. பாடல்களும் ஒரே பீட்டில்  இருப்பதால் பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை.  ராமானுஜம் மற்றும் அபிநந்தன் ஒளிப்பதிவில் கதை நடக்கும் களம் கண் முன் விரிகிறது.  விஜய் வேலுக்குட்டியின் கத்தரி இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பான கதையை பிடித்திருக்கிறார்.  திரைக்கதையும் சிறப்பாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நீளத்தை சுருக்கி இருந்தால் மார்க் ஆண்டனி, பாட்ஷா பாயாக மாறி இருப்பார்.  இருப்பினும் மார்க் ஆண்டனி மார்க் ஆண்டனி தான்.