Shadow

மாஸ்க் விமர்சனம் | Mask review

பிளடி பெக்கர், கிஸ் தோல்விக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படம். ஆண்ட்ரியா ஜெரெமையா, ருஹானி ஷர்மா நடிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஆண்ட்ரியாவும் தயாரித்திருக்கிறார்.

நாயகன் கவின் ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ். வேவு பார்ப்பது, தகவல்களைத் திரட்டி தருவது உட்பட எல்லா வேலைகளையும் ஒரு சின்ன குழுவை வைத்துப் பார்த்து வருகிறார். செய்கிற வேலையில் காசு தான் முக்கியம் எனக் கறாராக இருக்கும் கவின், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். அதே சமயம் மகளிருக்குக் கஷ்டம் என்றால் கொஞ்சம் மனம் இர(ற)ங்கிப் போகிறவரும் கூட. இன்னொரு புறம் குழந்தைகள் நல காப்பகம் நடத்துபவராக வெளியுலகுக்குக் காட்டிக் கொள்ளும் ஆண்ட்ரியா, அரசியல்வாதி, கோடீஸ்வரர்களுக்கு இளம்பெண்களை அனுப்பும் வேலையையும் செய்கிறார். அரசியல்வாதி பவன் தேர்தலுக்காகக் கொடுக்கும் 440 கோடி பணத்தைப் பட்டுவாடா செய்யும் பணியையும் ஏற்றுக் கொள்கிறார். அந்த 440 கோடி பணத்தை மாஸ்க் போட்ட ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ப்ரைவேட் டிடெக்டிவ் கவினிடம் ஒப்படைக்கிறார் ஆண்ட்ரியா. அந்த வேலையை கவின் முடித்தாரா, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் யார், ஆண்ட்ரியா – கவின் எதிரெதிர் திசையில் நிற்க வைத்த சூழல் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கவின், நடிப்பிலும், ஸ்கிரீன் பிரசன்ஸிலும் மெறுகேறி ஒரு மாஸ் ஹீரோவாக ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகும் கட்டம் இது என்பதைப் போல தெரிகிறது. காசு தான் முக்கியம் என சுற்றும் கதாபாத்திரத்திலும், வேலையைக் கெத்தாக செய்து முடிப்பதிலும் அலட்டல் இல்லாத நடிப்பு. பாடல் காட்சியிலும் டான்ஸில் வைப் செய்கிறார். சண்டைக்காட்சியிலும் இலகுவாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண்ட்ரியாவைத் திரையில் பார்ப்பதே, அதுவும் ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு த்ரில் அனுபவம். புடவை கட்டிய புத்திசாலி வில்லியாக ஆண்ட்ரியா மிரட்டுகிறார். அவர் எதற்காக ஜெயிலில் இருந்தார், அவர் ஆசைப்பட்ட வாழ்க்கை என்ன என்பது போன்ற விஷயங்களையும் சொல்லி இருந்தால் அவரது கதாபாத்திரத்தை இன்னும் பார்வையாளர்களால் நெருக்கமாக உள்வாங்கியிருக்க முடியும். மற்றபடி கவினுக்கு இணையாக திரையை ஆக்கிரமிக்கிறார்.

நாயகியாக ருஹானி ஷர்மா. இன்றைய ரீல்ஸ் தலைமுறையைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம். கவின் உடனான காட்சிகள் கொஞ்சம் கிளுகிளுப்பு. ஆலங்கட்டி பாடலில் ரசிக்க வைக்கிறார். சார்லி வழக்கம் போல தன்னுடைய இயல்பான முதிர்ச்சியான நடிப்பால் அசத்துகிறார். கவின் நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், ரமேஷ் திலக் இருவருமே அவர்கள் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அர்ச்சனா, அச்யுத் குமார், ஜார்ஜ் மரியான் என மற்ற நடிகர்களும் ஒரு சில காட்சிகள் வந்தாலும் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசை படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்த முயற்சி செய்கிறது. அந்த ரீமிக்ஸ் பாடல் படத்தின் டோனுக்கு ஏற்ப பொருந்தியிருக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு கொஞ்சம் சினிமாத்தனத்தைக் குறைத்து நல்ல ஒரு பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஆனாலும் பல காட்சிகளில் வேறு யாரோ ஒளிப்பதிவு செய்த உணர்வும் எழுகிறது. படத்தில் பல கிளைக்கதைகள் போய் விட்டு வருகிறது, அதை மட்டும் ராமர் கொஞ்சம் படத்தொகுப்பில் கவனித்திருந்திருக்கலாம்.

நெல்சன் பாணியில் அமைந்திருக்கிறது இயக்குநர் விகர்ணன் அசோக்கின் மேக்கிங்கும் இயக்கமும். எடுத்துக் கொண்ட கான்செப்ட் மற்றும் கதைக்களம் நெல்சன் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. ஹெய்ஸ்ட் காட்சிகள் பெரிதாகக் காட்டப்படாத ஒரு ஹெய்ஸ்ட் படம் என்றே சொல்லலாம். அந்த சூப்பர் மார்க்கெட் காட்சி படத்தின் ஹைலைட். கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட்டும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறது.

ஆண்ட்ரியாவின் கதையில் வரும் விஷயங்களை லாஜிக்கை மறந்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமூக சேவகியாக ஒரு மாஸ்க் அணிந்து கொண்டு வளர்த்த பெண்களையே தொழிலுக்கு அனுப்புவது போன்ற காட்சிகள் பலரால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போல கவின் காதல் காட்சிகளிலும் அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்தது ஷாக் தான். ஆனால் அதிலும் சில விஷயங்கள் ஒட்டாமல் பயணிக்கும் உணர்வு எழுகிறது. எம்.ஆர்.ராதா விஷயம் ரசிக்கவே வைத்திருக்கிறது. மற்றபடி ஒரு பொழுதுபோக்கு படமாக உட்கார வைக்கிறது இந்த மாஸ்க். கவினுக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என்று நம்பலாம்.

– மாறன் செ