
கிறிஸ்துமஸ் மேஜிக்கை நம்பும் யோயோ எனும் எல்ஃபின் (Elf) கதை இப்படம். இந்தியா, அமெரிக்கா, ஜெர்மன் என மூன்று நாட்டின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ளனர்.
சான்டா கிளாஸின் வொர்க்ஷாப்பிற்கு ஆர்வமுடன் செல்கிறான் யோயோ. ஆனால், அங்கே அவன் எதிர்பார்த்துச் சென்ற மேஜிக் ஏதுமில்லாமல், எல்லாம் இயந்திரத்தனமாய் மாறியுள்ளன. சான்டா அளிக்கும் பரிசுகளை ஆத்மார்த்தமாக உருவாக்கும் எல்ஃப்களுக்குப் பதில், பரிசுகளைப் பேக் (pack) செய்யும் ட்ரோன்களுக்கு ELF (Electronic Labour Force) எனப் பெயரிடப்பட்டு, ஒரு நவீன தொழிற்சாலை போல் இயங்குகிறது சான்டா கிளாஸின் வொர்க்ஷாப்.
சான்டா கிளாஸ் வொர்க்ஷாப்பிலுள்ள ட்ரோன்கள் ஹேக் செய்யப்படுகின்றன. ஓய்வு பெற்றுச் சென்றுவிடும் சான்டா கிளாஸை ஒப்படைக்காவிட்டால், கிறிஸ்துமஸே இல்லை எனச் சொல்லிவிடுகிறாள் ஹேக்கர்.
சான்டா கிளாஸைக் கண்டுபிடிக்கும் ஓர் அற்புதமான சாகசத்தை மேற்கொள்கிறான் யோயோ. அவனுடன், பிஸ்கெட் எனும் பெயருடைய துருவமான் (Reindeer), சான்டா கிளாஸ் வொர்க்ஷாப்பின் HR கோகோ, பேக்கிங் செய்யும் ஒரு ட்ரோன், யோயோவின் தாத்தா ஆகியோர் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள், சான்டா கிளாஸைக் கண்டுபிடித்துக் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்களா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீராம் சந்திரசேகரன் தொடங்கிய Broadvision Perspectives எனும் நிறுவனம், இப்படத்திற்கு அனிமேஷன் செய்து இணை தயாரிப்பில் பங்கேற்றுள்ளது. இதுவரை, 36 தொலைக்காட்சித் தொடர்களுக்கும், 11 படங்களுக்கும் அனிமேஷன் செய்திருந்தாலும், இந்தியாவில் அவற்றை வெளியிட்டதில்லை. மகா அவதார் நரசிம்மா படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையால், இந்தியாவில் 150 திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் அன்று வெளியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 16 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியக்கதையாக நேட்டிவிட்டி இல்லாவிட்டாலும், நல்ல நோக்கத்துடன் நம்பிக்கையாக முயன்றால் நல்லதே நடக்கும் எனும் ரசிக்கத்தக்க கதைக்கரு சிறுவர்களை ஈர்க்கவல்லது என்ற நம்பிக்கையில் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். அனிமேஷன் தரமும் ரசிக்கத்தக்க வகையில் அற்புதமாக உள்ளது. இனி, ஆண்டுதோறும் இந்தியக் கதைகளையும் படமாக்கி வெளியிடும் திட்டத்தில் உள்ளனர்.
மூன்று வயது சிறுவர் முதல் காணக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த அனிமேஷன் படம். அனைத்து வயதினருக்குமான படமாக இல்லாமல், ஒரு பெட் டைம் ஸ்டோரி போல் சிறுவரைக் கவர்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. வன்முறைகள் அற்ற கார்டூனாய், குடும்பத்துடன் ஒன்றாக மகிழ்ந்து இருப்பதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கியமான அம்சம் என வெண்பனியில் குளிர்விக்கும் ஜில்லென்ற இந்தப் படம் குட்டீஸ்களுக்கானது.


