சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’, ‘அன்சார்டட்’ படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த ‘மோர்பியஸ் (Morbius)’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
மார்வல் கதாபாத்திரங்களில் மிக முக்கியமான, மிகச் சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பாத்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசமான இரத்தம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படுகிறார். அவருக்குள் புகும் இருள் சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் திரைக்கதை. உலகம் முழுக்க மோர்பியஸ் கதாப்பாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில் தனித்தன்மையைப் புகுத்தி ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுத்தும் ஆஸ்கர் விருது வென்ற நாயகன் Jared Leto. மோர்பியஸாக நடித்திருக்கும் அவர், “உடலை முழுமையாக மாற்றும் பாத்திரங்கள் மீது எனக்குத் தனித்த ஈர்ப்புண்டு. இக்கதாப்பாத்திரம் மனதளவிலும், உடலளவிலும் பெரும் சவலைக் கோரியது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மோர்பியஸ் படத்தை, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், சோனி பிக்சர்ஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது.